அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! 12 இடங்களில் நடக்கும் ரெய்டால் பரபரப்பு!

0
76
Enforcement Directorate (ED) raids Minister Senthil Balaji's premises | Photo - Swarajya

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் சென்னை, கரூர் வீடுகளிலும் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் சோதனை நடைபெறுகிறது. அதேபோல் கரூரில் அமைச்சரின் பூர்வீக வீட்டிலும், அமைச்சரின் சகோதரர் அசோக், கொங்கு மெஸ் மணியின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போக்குவரத்துக் கழகத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read : இருமாப்பில் இருக்கும் திராவக மாடல் ஆட்சியாளர்கள்! மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என ஈபிஎஸ் விமர்சனம்!

இதன்படி, கரூரில் 10 இடங்கள் மற்றும் சென்னையில் 2 இடங்கள் உட்பட 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியின் ஆடிட்டர், அவரது சில உறவினர்கள் மற்றும் கரூரில் உள்ள அவருக்கு நெருக்கமான நண்பர்களின் இடங்களிலும் ED சோதனை நடத்தி வருகிறது.

கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு 5 கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட அமாலக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் இந்த வீட்டில் தான் வசிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட திமுகவினர் சிலர் அமைச்சரின் வீடு முன்பு திரண்டுள்ளனர்.

கரூர் ராமகிருஷ்ணபுரம் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் வீடு, மண்மங்கலத்தில் உள்ள அவரது மாமனார் வீடு, ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கணினி இயக்குபவராக பணியாற்றிய சரவணன், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்பு நேர்முக உதவியாளராக பணியாற்றிய வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்தி ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நட த்தி வருகின்றனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்துக்கு அதிகாரிகள் சோதனைக்கு சென்றபோது அமைச்சர் செந்தில்பாலாஜி நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தார். நடைப்பயிற்சியை பாதியில் முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்ன நோக்கத்துடன் சோதனை செய்கிறார்கள் என்றுத் தெரியவில்லை. சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். சோதனை முடிந்த பின்னர் விவரமாகப் பேசலாம். ஏற்கெனவே எனது நண்பர்கள், சகோதரர் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது என்னென்ன எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தனர். இப்போது அமலாகக்த்துறையினர் சோதனை நடத்துகின்றனர். வருமானவரித் துறையோ அல்லது அமலாக்கத் துறையோ யார் சோதனை நடத்தினாலும் முழு ஒத்துழைப்பு தரத் தயார். அவர்கள் என்ன ஆவணத்தைக் கைப்பற்றி விளக்கம் கேட்டாலும் அது பற்றி உரிய விளக்கம் தரவும் தயார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.” என்று கூறினார்.

Also Read : அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்களின் விலை கடும் உயர்வு! கண்காணிப்புக் குழுவுக்குத் தெரியுமா என பாமக கேள்வி?

2011 – 2015-ம் ஆண்டு காலத்தில் செந்தில்பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தப்போது, போக்குவரத்துக் கழகத்தில் பணி வாங்கி தருவதாகப் பணம் பெற்ற வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க அண்மையில் உத்தரவிட்டது. இதன் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஐ.டி. ரெய்டு நடைபெறாத ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அசோக்கின் மாமனார் வீடு, அமைச்சரின் முன்னாள் ஊழியர்களின் வீடுகள் என 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், நண்பர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, கோவை, ஹைதராபாத், கேரளா என 40 இடங்களில் அப்போது சோதனை நடைபெற்றது. ரூ.3 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. பணப் பரிவர்த்தனைகள், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

கடந்த முறை வருமானவரித் துறையினர் கரூரில் சோதனையிட்டபோது திமுக தொண்டர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததுடன், பெண் அதிகாரியை தாக்கவும் செய்தனர். அதிகாரிகள் வந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. ஆகையால் இந்த முறை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பிற்காக சிஆர்பிஎப் வீரர்கள் வந்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry