தமிழ்க் களஞ்சியம் வேறு, திராவிடக் களஞ்சியம் வேறு! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முயற்சி!

0
14

சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்கு திராவிடக் களஞ்சியம் என பெயர் சூட்டுவதாக சர்ச்சை எழுந்த நிலையில், இரண்டும் வேறுவேறு என, தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையின்போது, திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூல் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழ் உணர்வாளர்களிடையே இது அதிர்வை ஏற்படுத்தியது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, ‘திராவிடக்களஞ்சியம்’ என அடையாள மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல், தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார்.

தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்ட அறிக்கையில், “சங்கத் தமிழ் நூல்கள் எதிலும் திராவிட என்ற சொல்லே கிடையாது. தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்களே இருக்கின்றன. வரலாற்று உண்மை இவ்வாறிருக்க, வலிந்து சங்கத் தமிழ் நூல்களுக்கு ‘திராவிடக் களஞ்சியம்’ என்று தி.மு.க ஆட்சி பெயர் சூட்டுவதற்கு ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்க வேண்டும்.  சங்கத் தமிழ் நூல்களுக்கு திராவிடக் களஞ்சியம் எனப் பெயர் சூட்டுவது, தமிழ்மொழி, தமிழினம் இரண்டையும் மறைக்கும் செயல், இவ்வாறு பெயர் சூட்டுவதைத் தமிழக அரசு கைவிட வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.

இது தொடர்பாக கருணாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், “சங்கத்தமிழ் நூல்களுக்குத் “திராவிடக் களஞ்சியம்” என்று இனமறைப்புத் தலைப்புக் கொடுக்காதே! “தமிழ்க் களஞ்சியம்” என்றே வெளியிடு!” எனத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, ”சங்க இலக்கியத் தொகுப்பு என்பது வேறு, திராவிடக் களஞ்சியத் தொகுப்பு என்பது வேறு. சரியாக புரிந்துகொள்ளாததால் ஏற்பட்ட விளைவு தான் இது. சங்க இலக்கியங்களை சந்தி பிரித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் சங்க இலக்கிய தொகுப்பு உருவாக்கித் தரப்படும். இது ஒன்று. அதேபோல மற்றொன்று, திராவிடக் களஞ்சியத்தை உருவாக்குவது. திராவிடத்தின் கொள்கைளை உருவாக்குவது. உதாரணமாக, மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை, இட ஒதுக்கீடு, சமூக நீதி என பல கொள்கைகளை திராவிடம் முன்னெடுத்துள்ளது. இது குறித்து திராவிட இயக்கத்தின் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பை உருவாக்குவது தான் திராவிட களஞ்சியம். எனவே இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry