எதிர்பார்ப்பை பொய்யாக்கிய பட்ஜெட்! தொழிற்சாலைகளை ஈர்த்துக்கொண்ட தெலங்கானா! எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆவேசம்! 

0
43

பட்ஜெட்டில் நல்லபல அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போன நிலையில், புதுச்சேரிக்கு வர இருந்த தொழிற்சாலைகள் தெலங்கானாவுக்கு சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி சட்டமன்றத்தில், முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசினார். அப்போது, “கூடுதலாக ரூ.1684 கோடி வருவாய் ஈட்ட இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அதை செய்ய முடியுமா? பாஜக அமைச்சர்கள், எம்.எல்..க்களை பயன்படுத்தி மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெற்று வர வேண்டும்.

22 கார்ப்ரேஷன்கள் மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டுள்ளது. 10 கார்ப்பரேஷன்கள் மூடப்பட்டுவிட்டது, அதில் பணிபுரிந்த 10 ஆயிரம் பேர், 8 மாதம் முதல் 5 ஆண்டுவரை சம்பளமின்றியும், வேலையின்றியும் கஷ்டப்பட்டு வருகின்றனர். வீட்டு வசதி வாரியத்தின் சொத்துக்கள் விற்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் லாபத்தில் இயங்கி வந்த வீட்டு வசதி வாரியம் முடங்கிப்போய் உள்ளது. அதனை நல்ல முறையில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5 ஆண்டுகளாக ஒரு தொழிற்சாலை கூட கொண்டு வரப்படவில்லை. தொழிற்சாலைகள் அமைய, தனி நிதி பெற்று தொழில் அதிபர்களுக்கு சலுகையை அறிவியுங்கள். நாம் சொந்தக் காலில் நிற்கும் வகையில் வருமானம் ஈட்டுவதற்கு வழி காண வேண்டும். நிலத்தடி நீர் எடுக்காத, மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும். சலுகைகள் ஏதும் தரப்படாததால் புதுச்சேரிக்கு வர இருந்த அனைத்து தொழிற்சாலைகளும் தெலங்கானாவிற்கு சென்றுவிட்டது.

தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்காக சேதராப்பட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலம்  எதற்கும் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஒருமுறை டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டும். சந்தித்து பேசினால் புதுச்சேரிக்கு நிறைய கிடைக்கும்.

டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் தொகையை மத்திய அரசே வழங்குவதுபோல் புதுச்சேரியிலும் பென்ஷன் தொகையை மத்திய அரசே வழங்கும் அனுமதியை பெறுங்கள்.  குப்பைக்கு வரி விதிப்பு, பாதாள சாக்கடை வரி விதிப்பு, குடிநீர், மின் கட்டணம் உயர்வு போன்றவற்றை நீக்குங்கள். தகுதியானவர்களுக்கு இலவச மனைப்பட்டா கொடுங்கள். விளை நிலங்களை பட்டா போட அனுமதிக்கக் கூடாது. பத்திரப்பதிவுத் துறை மிக, மிக மோசமாக  போய்விட்டது.

மின்துறை தனியார் மயமாக்கமாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பாராட்டு மட்டுமே தெரிவித்துள்ளீர்கள். அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஆஷா பணியாளர்களுக்கும், தேசிய சுகாதார இயக்ககத்தில் பணியாற்றுபவர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும்.

தமிழகத்தைப் போன்று கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். எம்.எல்.., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடி போதாது, கூடுதலாக வழங்க வேண்டும். பாட்கோவில் வாங்கப்பட்ட கல்விக்கடனை ரத்து செய்துள்ளதைப்போல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகத்தில் வாங்கப்பட்ட கல்விக்கடனையும் ரத்து செய்ய வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து தமிழகத்தைப்போல் 14 அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். ரேஷன் கடைகளை திறந்தால்தான் விலையேற்றத்தை தடுக்க முடியும்.

கால்நடைத்துறையில் மருத்துவர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். விவசாயிகள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். எனவே 5 பவுன் வரையாவது நகைக்கடன் தள்ளுபடியை அறிவியுங்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 25 சதவீதத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் தனது தொகுதிக்கே எடுத்து சென்றுவிட்டார். அனைத்து தொகுதிக்கும் செலவிடுங்கள். ஒதியம்பட்டு ஆற்றங்கரையில் ஆழ்குழாய் அமைத்து குடிநீர் வழங்கினால் 4 தொகுதி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கும்.

இந்த ஆண்டுடன் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவது நிறுத்தப்பட்டுவிடும் என்பதால் பாக்கியுள்ள அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டையும் கேட்டுப்  பெறுங்கள். பாசிக், பாப்ஸ்கோவை திறந்து செயல்படுத்துங்கள். காரைக்கால் போர்ட்டில் அரசியல் லாபி நடக்கிறது. புதுச்சேரி துறைமுகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வாருங்கள். கப்பல்கள் வந்து நிறுத்தப்பட்டாலே அரசுக்கு வருமானம் வரும்

இன உணர்வை மங்கச் செய்யும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவியுங்கள். தனியார் பள்ளிகள் 75 சதவீதம்தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. ஆனால் 100 சதவீத கட்டணத்தை வசூலித்து கொண்டு, ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் உள்ளது.

வில்லியனூர் தொகுதியில் பேருந்து நிலையம், உள் விளையாட்டு அரங்கு, ஆர்டிஓ அலுவலகம், தீயணைப்பு நிலையம் போன்றவைகளை அமைத்துத்தாருங்கள். புதியதாக திறக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துங்கள்என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தனது பேச்சின்போது முன்வைத்தார்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry