பள்ளிக் கல்வித்துறைக்கு விடியல் கிடைக்கவில்லை! விதியா? சதியா? என ஆசிரியர் சங்கங்கள் வேதனை!

0
2132

பேரறிவாளனுக்கும் விடுதலை கிடைத்துவிட்டது..! உத்தரபிரதேச கல்விக் கொள்கையில் இருந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லையே? இது, விதியா? சதியா? அல்லது மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு முன் அனுமதியா? என தமிழக ஆசிரியர் கூட்டணி கேள்வி எழுப்பி இருக்கிறது.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ அகில இந்திய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ உச்ச நீதிமனஅற தீர்ப்பால், 31 ஆண்டுகால சிறை வாசத்திலிருந்து பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடைந்துள்ள மகிழ்ச்சி பெருக்கில் நாங்களும் திளைத்து வருகிறோம்.

வா. அண்ணாமலை

ஆனால், முந்தைய ஆட்சியாளர்கள் கல்வி நிர்வாக சீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பினை சீரழித்து, சின்னாபின்னமாக்கி, சிதறடித்து விட்டார்கள். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்ற உடன் அவருக்கு இருந்த மாநில உணர்வினை தமிழ்நாடு கல்வித் துறையில் அமல்படுத்தி விட்டார்.

பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்.

மறைந்த முதலமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த கல்வி நிர்வாகக் கட்டமைப்பினை அடியோடு மாற்றம் செய்து, உத்தரப்பிரதேச மாநில கல்வி நிர்வாக அமைப்பினை அப்படியே அமல்படுத்துவதற்கான அரசாணை எண்:101, 108ஐ வெளியிட்டார்கள்.

இந்த அரசாணையின் படி தனித்தனியாக சுதந்திரமாக செயல்பட்டு வந்த தொடக்கக் கல்வித் துறையும், பள்ளிக் கல்வித்துறையும் ஒன்றாக இணைக்கப்பட்டன. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார அளவில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் என்ற பெயரையே விட்டு, மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் என்ற பெயருடன் மாற்றம் செய்தார்கள். இயக்குனர்களுக்கும், இணை இயக்குனர்களுக்கும் இருந்த அதிகாரத்தினை “குருவித் தலையில் பனங்காயை வைத்தது போல” மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் திணித்து விட்டார்கள்.

இந்த அதிகாரம் என்று வந்ததோ? அன்று முதல் பள்ளிக்கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? என்று அறிந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடமிருந்து தேர்வுநிலை, சிறப்புநிலை அதிகாரத்தினை மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்து விட்டார்கள். தேர்வுநிலை, சிறப்புநிலை பெறுவதற்கே முனைப்பு இயக்கம் நடத்த வேண்டியிருக்கிறது.

முந்தைய ஆட்சியாளர்களிடம் ஆசிரியர் சங்கங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவர்கள் பிரதமர் மோடி அரசின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்ததால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டார்கள். முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் தொடங்கி, ஓராண்டாக இந்த விவகாரதம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கோரிக்கை விண்ணப்பங்களை அளித்து வலியுறுத்தி உள்ளோம்.

சென்னையில் நடைபெற்ற அன்பாசிரியர் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், “தாமாகவே முன்வந்து ஆசிரியர் சங்கங்களுடைய கோரிக்கைகளில் ஒன்றான 101,108 அரசாணைகள் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகத்துடன் தொடர்பில் உள்ளதாகவும் உறுதி அளித்தார்.”

நாட்கள் கடந்து போயின..! சட்டப்பேரவையில் பள்ளி கல்வி மானியக் கோரிக்கையிலும் இதுதொடர்பான அறிவிப்பு வெளிவரவில்லை. விதி எண் 110ன் கீழ் முதலமைச்சரும் அறிவிக்கவில்லை. பின்னர் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் (டிட்டோஜாக்) ஒன்று கூடி, முதலமைச்சரின் கவனத்தை ஈர்ப்பதற்காக மே 18 ஆம் தேதி மாவட்டத் தலைநகர்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவு செய்து அறிவித்தார்கள். ஆனால் மே 15ந் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர்களை திருச்சிக்கு அழைத்து 40 நிமிட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, “உத்தரப்பிரதேச கல்விமுறை தமிழ்நாட்டில் எப்படி வந்தது? என்பதை எல்லாம் நான் விவரமாக கேட்டு தெரிந்து கொண்டேன். முதலமைச்சரின் பார்வைக்கு உடனடியாக கொண்டு சென்று அரசாணை எண்:101, 108ஐ ரத்து செய்து அறிவிக்கப்படும்” என உறுதியுடன் கூறினார். உத்தரப்பிரதேச கல்விமுறை நீக்கப்படாததால் பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரின் செயல்முறைகளைக் கூட சில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்டு கொள்ளாமல், முற்றிலும் சுயாட்சி அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

பொதுவாக ஒரு கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்கள் 220 நாளாக இருக்கும். எந்த ஆட்சி காலத்திலும் இல்லாமல் மே மாதம் 13ஆம் தேதி, 20 ஆம் தேதி என 240 வேலை நாட்கள் ஆசிரியர்கள் பள்ளிப் பணியில் இருந்துள்ளார்கள். மே மாதம் வரை பள்ளி நடத்திய பெருமை இந்த ஆட்சிக்கு உண்டு, என்பது போல ஆசிரியர்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஊட்டி வருகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து கிழமைகளிலும், ஆசிரியர்களை பணியாற்ற வைப்பதற்கான திட்டம் உள்ளதாக, இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், முதன்மைல் கல்வி அலுவலர்களால் பரப்பப்பட்டு வரும் தகவலை சகிப்புத்தன்மையுடன் பார்க்க முடியவில்லை. போராட்டத்தின் மூலம் தான் முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டால், தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மீண்டும் ஒன்றுகூடி போராட்ட அறிவிப்பினை வெளியிடுவதற்கு ஆர்வப் பார்வையுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.

உத்திரப்பிரதேச கல்வி நிர்வாக அமைப்பில் இருந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு விடுதலை வேண்டும், கல்வித்துறை இயக்குநர்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆணையர் பதவி எப்போதுமே வேண்டாம். கோரிக்கையை முன்வைத்து வீதியில் நின்று முழக்கமிட ஆயத்த நிலையில் உள்ளோம்.” இவ்வாறு வா. அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry