இரு தலித் சிறுமிகளின் மர்ம மரணத்துக்கான காரணத்தையும், காணாமல் போன ஒரு சிறுமியைத் தேடியும் புறப்படும் போலீஸ் அதிகாரியின் கதையே நெஞ்சுக்கு நீதி.
இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 என்ற சினிமாவின் தமிழ் ரீமேக்கை நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
பொள்ளாச்சி அருகே சின்ன கிராமம்தான் கதைக்களம். சத்யா உள்ளிட்ட மூன்று பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் கூலி அதிகமாக கேட்பார்கள். இதற்காக அவர்கள் எதிர்கொண்ட கொடுமையும், அதற்கு பின்னணியில் இருந்த சாதிய அடக்குமுறைகளுமே கதைக் கரு.
தமிழகத்தில் நடந்த நிறைய உண்மைச் சம்பவங்கள் திரைக்கதையில் பிரதிபலிக்கிறது. ஒரு பட்டியலின பெண் சத்துணவு சமைத்தார் என்பதற்காக அவர் துன்புறுத்தப்பட்டு, அவர் சமைத்த உணவும் வீணாக்கப்பட்டதில் துவங்கி, டாக்டர் அனிதா மற்றும் காவலர்களுக்கு இடையே இருக்கும் சாதிய பாகுபாடு என அனைத்து நிலையிலும் மண்டிக்கிடக்கும் சாதிப் பிரச்னையை, உண்மைச் சம்பவங்களை எல்லோருக்கும் புரியும் வகையில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எளிமையாக கொடுத்திருக்கிறார்.
பார்ப்பனர்கள் குறித்த விமர்சனங்கள் இதுவரை குறியீடுகள் மூலமே காட்டப்பட்டு வந்தன. ஆனால் இந்தப் படத்தில் சுந்தரம் ஐயர் எனும் கதாபாத்திரத்தை ரேப்பிஸ்ட்டாக, கொடூர குற்றவாளியாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலோட்டமாக ஆதிக்க சாதியினர் பட்டியலினத்தவர்கள் மீது அடக்குமுறை செய்கின்றனர் என்றில்லாமல், சாதிய அடுக்குகளின் அனைத்து நிலையிலும் ஆதிக்க மனோபாவம் இருக்கிறது என பலகாட்சிகளில் இயக்குநர் பேசியிருக்கிறார்.
ஆரிக்கு மிக முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும், அவருக்கான காட்சிகள் குறைவு. உதயநிதி ஸ்டாலின், ஆரி என அனைவரது நடிப்பிலும் முதிர்ச்சி தெரிகிறது. உடல்மொழி, வசனம், பார்வை என அனைத்திலும் நல்ல நடிகனுக்கான அடையாளங்களைக் கொடுத்து உதயநிதி தடம் பதிக்கிறார். மனிதன், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ படங்களில் வெளிப்படுத்திய நடிப்பைக் காட்டிலும் இதில் முன்னேறியுள்ளார்.
சுரேஷ் சக்கரவர்த்தியின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் கூடுதல் வரவேற்பை பெறும். மலைச்சாமி எனும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த காவலர். சரிக்கும் தவறுக்கும் இடையில் தெளிவான முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக காட்டியிருப்பதும் கதைக்கு முக்கியமானது. தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்கள் பல இடங்களில் சிந்திக்கும்படியாக உள்ளன.
ஏ.எஸ்.பி. விஜயராகவனாக நடித்திருக்கும் உதயநிதி முதன் முறையாக ஊருக்குள் நுழைகிறார். அப்போது போனில் அவருடன் தொடர்பில் இருக்கும் தன்யாவிடம் “இங்க ஒரு அம்பேத்கர் சிலை இருக்கு.” என்கிறார். “ஊருக்குள் வந்தாச்சுனு நினைக்கிறேன்.” என்கிறார். அதற்கு தன்யா “அம்பேத்கர் சிலை கூண்டுக்குள் இருக்கா.?” என கேட்டதற்கு “இல்லை” என பதில் தருகிறார் உதயநிதி. “அப்போ இன்னும் ஊரு வரல” என்கிறார் தன்யா. இது ரொம்ப நுட்பமாக எழுதப்பட்ட காட்சியாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. இக்காட்சி மூலம் அம்பேத்கர் சிலையை ஊருக்கு வெளியே வேண்டுமானால் பாதுகாப்புக் கூண்டு இல்லாமல் வைக்க முடியும். ஊருக்குள் அப்படி வைக்கும் நிலைக்கு இன்னும் நாம் வந்து சேரவில்லை எனக் கூறுகிறார் இயக்குநர்.
திபு நைனன் தாமஸ் இசையில் யுகபாரதியின் செவக்காட்டு, எங்கே நீதி எனும் இரு பாடல்களும் படத்தின் கதைக்கு அடர்த்தியைக் கூட்டுகின்றன. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும், ரூபனின் படத்தொகுப்புக்கும் நேர்த்தியாக இருந்தது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry