தமிழக மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது! மத்திய அரசு ஆய்வில் அதிர்ச்சி!

0
259

தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் உள்ள 720 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1.18 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 34 லட்சம் மாணவர்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

கொரோனா பேரிடரால் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் தேசிய அளவில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் 3,5,8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் ஆன்லைன் முறையில் சோதிக்கப்பட்டது. 2017ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவுகளுடன் 2021ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஒப்பீடு செய்யப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்ளிடம், வரைபடத்தில் உள்ள முக்கியமான வரலாற்று தளங்கள் மற்றும் இடங்களைக் கண்டறிதல், சுற்றுப்புறத்தில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி கட்டுமான மாதிரிகளை அடையாளம் காண்பது மற்றும் விளக்குவது போன்ற அன்றாட வாழ்க்கைக்கான சிக்கலைத் தீர்க்கும் திறன் இல்லாதது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம் தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. 2017ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது இம்முறை மாணவர்கள் தேர்ச்சி மோசமாக உள்ளது. NAS 2021 அறிக்கையின்படி, 10 ஆம் வகுப்பில் 2 சதவிகித மாணவர்கள் மட்டுமே அறிவியலில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் 8 சதவிகிதத்தினர் மட்டுமே கணிதம் மற்றும் அறிவியலில் கற்றல் விளைவுகளைப் பெற்றுள்ளனர் என்றும் கண்டறிந்துள்ளது. மீதமுள்ள மாணவர்கள் அடிப்படை மற்றும் அடிப்படை நிலைகளுக்கு கீழே இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

3, 5, 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 26-77 சதவீதம் பேர் தங்களிடம் படிப்பதற்கு சரியான சாதனங்கள் இல்லை என்று கூறுகின்றனர். கொரோனாவின் போது படிப்பதில் தடைகளை எதிர்கொண்டதாக மூன்றில் ஒரு மாணவர் புகார் கூறினார். ஆன்லைன் வகுப்பின் போது மொபைல் போன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் தங்களது படிப்பு பாதிக்கப்பட்டதாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வில் பங்கேற்ற 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக புகார் தெரிவித்தனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, தமிழக மாணவர்களின் கற்றல் திறன், அனைத்து பாடப்பிரிவுகளிலும் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக குறைந்திருந்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழக மாணவர்களின் கற்றல் திறன் தேசிய சராசரியைவிட குறைவாக உள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry