2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் எனவும் நீதிமன்றம் தனது ஆணையில் கூறியுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST -TNTET) மொத்தம் 2 தாள்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.
முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2ஆம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011-ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், 2011-ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
Also Read : அமைச்சர் பொன்முடி Tongue Slip ஆகி Loose Talk விடுகிறார்! தமிழக ஆசிரியர் கூட்டணி கடும் விமர்சனம்!
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, 2011-ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டாலும் பணியில் நீடிக்கலாம் என உத்தரவிட்டது. ஊதிய உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியமில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என தீர்ப்பளித்துள்ளனர். நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் தகுதித்தேர்வு கட்டாயம் என்ற தமிழக அரசின் விதியை ரத்து செய்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என தெளிவுபடுத்தியுள்ளனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் , நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் , பட்டதாரி ஆசிரியர் , உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து பதவி உயர்வுகளும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry