‘ஆசிரியர்’ என்றால் என்ன? கற்றலை நேசிக்கக் கற்றுக்கொடுத்த பிரியமான ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்!

0
203

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களின் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவதை நினைவுகூரும் விதமாகவும், ஆசிரியர்களைப் போற்றும் விதமாகவும் நாடு முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் செப்டம்பர் ஐந்து 1888ல் திருத்தணியில் பிறந்தார். பள்ளிக்காலம் திருத்தணியிலும்,திருப்பதியிலும் கழிந்தது. புத்தகம் வாங்கக் கூட கஷ்டப்பட்ட குடும்பம் அவருடையது. பழைய புத்தகங்களைக் கொண்டு சமாளித்து வேலூர் வுர்ஹீஸ் (VOORHEESE )கல்லூரியிலும், சென்னை கிறித்துவ கல்லூரியிலும் தத்துவம் பயின்றார்.

வறுமை வாட்டி எடுத்ததால் கல்லூரியில் பெற்ற பதக்கங்களை அடமானம் வைத்து செலவுகளை சமாளித்து இருக்கிறார். ; தத்துவம் படித்து முடித்த பின் சென்னை மாநில கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்தும் தட்டு வாங்க காசு இல்லாமல் வாழை இலையில் தான் தினமும் உண்டு இருக்கிறார். வெகு விரைவிலேயே அவரின் இந்தியா தத்துவங்கள் சார்ந்த கட்டுரைகள் உலகம் முழுக்க கவனம் பெற்றன.ஒன்பதே ஆண்டுகளில் மைசூர் பல்கலைகழகம் பேராசிரியராக இவரை பணியமர்த்தியது. மாணவர்களிடம் தலைசிறந்த ஆசிரியர் என பெயர் பெற்றார்.

கொல்கத்தாவில் பெருமை மிகுந்த ஐந்தாம் ஜார்ஜ் இருக்கை பேராசிரியர் பதவியில் அமர கிளம்பும் பொழுது குதிரை வண்டியின் குதிரைகளை அவிழ்த்துவிட்டு பிள்ளைகளே வண்டியை இழுத்து சென்றது இவர் எத்தகு ஆசிரியர் என்பதற்கு சான்று. ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் பதவியில் நாற்பது வயதிற்குள் அமர்த்தப்பட்டார். ஆந்திராவின் துணை வேந்தாரகவும் பணியாற்றினார்.பின்பு பனராஸ் ஹிந்து பல்கலைகழக துணை வேந்தர் ஆன பொழுது தான் இவரின் விடுதலை பற்று பலர்க்கு தெரிந்தது.

விடுதலை பெறுவதற்கு முன்னேயே யுனெஸ்கோவுக்கான இந்திய பிரதிநிதி ஆனார். இந்திய விடுதலை பெற்றதும் கல்வி கமிஷன் தலைவர் ஆனார். விடுதலைக்கு பின் அரசாங்கம் வழங்கிய சர் பட்டத்தை துறந்து தன்னை முனைவர் என்றே அழைத்தால் போதும் என்றார். ஸ்ரீனிவாச ராமனுஜம் இங்கிலாந்து கிளம்பும்முன் கப்பலில் இவரை சந்தித்து ஆசி பெற்று இருக்கிறார்.

1962-ல் ராஜேந்திர பிரசாத்திற்கு பின் நாட்டின் 2-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார். தன் சம்பளமான பத்தாயிரத்தில் 2,500 மட்டும் பெற்றுக்கொண்டு மீதத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்து விடுவதை அவர் வழக்கமாக கொண்டு இருந்தார். இவரின் பிறந்தநாளை அரசு கொண்டாட ஆசைப்பட்ட பொழுது, அதை ஆசிரியர் தினமாக கொண்டாடலாம் என சொன்னார் .அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் உயிருடன் இருக்கும் பொழுதே, அரசு அதை செய்தது. தன்னை ஒரு ஆசிரியர் என்பதிலேயே பெருமை கொண்டு இருந்தார். இந்தியாவின் முதல் பாரத ரத்னாவை சி.வி.ராமன், ராஜாஜி ஆகியோருடன் இவரும் பெற்றுக்கொண்டார்.

ஆசிரியர் என்றால் என்ன?

ஆசு + இரியர் என்பதே ஆசிரியர் ஆயிற்று.`ஆசுஎன்ற சொல்லுக்கு தவறு, குற்றம், பழுது என்று பல பொருள்களைத் தருகிறது பழந்தமிழ் நூல்கள். ஆசுக்களை அகற்றுபவர் ஆசிரியர் என அழைத்துக் கொண்டாடியது பழந்தமிழர் சமூகம். இறைவனுக்கு ஒரு படி முன்னே ஆசிரியரை வைத்துப் போற்றியது தமிழர் பண்பாடு.  சமூகப் படிநிலையில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும் ஒரு மாணவன் அவனின் ஆசிரியருக்கு மாணவனே!

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டில் உள்ள மாணவர்கள் கையில் தான் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அவ்வாறான மாணவர்களை உருவாக்கும் முழு பொறுப்பும் ஆசிரியன் கையில் உள்ளது. ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தை வெற்றிகரமாக உருவாக்குவதில் ஆசிரியர்கள் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தியா தனது கடந்த காலங்களில் பல ஆசிரியர்களின் வரலாறுகளைப் பதிவு செய்திருக்கிறது. ஆசிரியர்கள் சமூகத்தின் கௌரவமாக கொண்டாடப்பட்டனர். விடுதலைப் போராட்டமும், பின் தொடர்ந்த சுதந்திரமும் ஆசிரியர்களின் பங்களிப்பை பெரிய அளவில் பதிவு செய்தது.

ஆசிரியர் தினம்

சமூகத்தில் ஆசிரியர்களின் முக்கிய பங்கை நினைவுபடுத்தும் விதமாக உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இதற்கான தேதிகள் மாறுபடலாம். உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர்தினத்தன்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி ஆசிரியர்களை மகிழ்விப்பர். ஆசிரியர்களுக்கு நடன போட்டி, பாட்டு போட்டி, விளையாட்டு போட்டி என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும். கொரோனாவில் முடங்கிய கொண்டாட்டம் இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நம் நாடு மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் நீண்ட மாதங்களுக்கு பிறகு தற்போது தான் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கான சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது.

ஆசிரியரிடமும் கேளுங்கள் அவர்களுடைய முன்னாள் மாணவர்கள் பற்றிப் பகிர்ந்துகொள்ள ஏதாவது சுவையான செய்திகளை வைத்திருப்பார். அதேபோல, ஆசிரியர்களைப் பற்றி மாணவர்களிடமும் இருக்கும். எந்த ஒரு நவீன அறிவியல் கண்டுபிடிப்பும் ஓர் உயிருள்ள ஆசிரியருக்கு இணையாக முடியாது என்பதே ஆசிரியர்களின் பெரும் சிறப்பு. ஆசிரியர் தின வாழ்த்துகள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry