ஆப்கனின் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் கடும் சண்டை! தலிபான்கள் 600 பேர் பலி, 1000 பேர் சரண்! கிளர்ச்சிப்படை அறிவிப்பு!

0
51

ஆப்கானிஸ்தானில் மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, அமெரிக்கா அந்நாட்டில் இருந்து வெளியேறியது. ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறிவிட்ட, நிலையில் புதிய அரசை அமைப்பதில் தலிபான்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அதேநேரம், 33 மாகாணங்களை கைப்பற்றிவிட்ட தலிபான்களால், பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் கைப்பற்ற முடியவில்லை. சுமார் 2 லட்சம் பேர் வாழும் பஞ்ச்ஷீர் மாகாணம் நீண்ட காலமாகவே தலீபான்களுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த மாகாணம் எப்போதுமே ஆதிக்ககாரர்களிடம் அடிபணிந்தது கிடையாது.

1980-களில் அரச படைகளுக்கு எதிராகவும், 1990-களில் தேசிய எதிர்ப்பு முன்னணியினர் சண்டையிட்டுள்ளனர். அந்த வகையில், தற்போதும் தலிபான்களுடன் அவர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். சனிக்கிழமை காலை முதல் நடந்து வரும் சண்டையில், தலிபான்கள் தரப்பில் 600 பேர் கொல்லப்பட்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலிபான்கள் பிடிபட்டுள்ளதாகவும் தலிபான் எதிர்ப்புப்படை அறிவித்துள்ளது.

அதேவேளையில், பஞ்ச்ஷீர் மாகாணத்தை கைப்பற்றும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தலிபான்கள் கூறியுள்ளனர். இதற்காக அந்த மாகாணத்தைச் சுற்றி தலிபான்கள் குவித்துள்ளனர். தலைநகர் பசாரக் செல்லும் சாலையில் கண்ணிவெடிகள் அதிக அளவில் இருப்பதால், முன்னேறிச் செல்லும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry