நாடு முழுவதுமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அபார்(APAAR) என்ற பெயரில் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஒரு பகுதியாக ‘ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள எண்’ திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அமல்படுத்த இருக்கிறது.
இதன்படி ப்ரீ பிரைமரி வகுப்பு முதல் உயர்கல்வி வரையில், தானியங்கி நிரந்தரக் கல்விக் கணக்கு பதிவு(APAAR – Automated Permanent Academic Account Registry) செய்யப்படுகிறது. ஆதார் எண் போன்று 12 இலக்கம் கொண்ட அபார்(APAAR) எண் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதற்கு “தானியங்கு நிரந்தர கல்விக் கணக்கு பதிவு” என்று அர்த்தம். மாணவர்கள் உயர்கல்வி பெறும் வரை பயன்படும் வகையில் இந்த எண் வடிவமைக்கப்படும்.
சுருக்கமாக சொல்லப்போனால், APAAR அட்டையின் அடிப்படைத் தகவல்கள், அவர்களது ஆதார் தகவல்களில் இருந்தே எடுக்கப்படும். ஆதார் கார்டில் இருப்பதைப் போலவே, அபார் கார்டிலும் 12 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும். மாணவர்களின் மதிப்பெண், கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல் அனைத்துமே இந்த அபார் ஐடியில் இணைக்கப்பட்டுவிடும்.
இது தொடர்பான அறிவிக்கையை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. இதற்காகப் பெற்றோர்களை அழைத்துப் பேசி, அவர்களிடம் ஒப்புதல் பெறும் நடவடிக்கையை தொடங்கும்படி அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதை ஏற்று அடையாள அட்டை பணியை பல மாநிலங்கள் தொடங்கிவிட்டன.
ஆதார் அடையாள அட்டைக்கு எப்படித் தகவல்கள் சேகரிக்கப்பட்டனவோ அதேபோல், இதற்கும் தகவல்கள் சேகரிக்கப்படும். அதாவது ஆதார் தகவல்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்றே தெரிகிறது. இதற்காககத்தான் பெற்றோர் ஒப்புதலை பெற மத்திய அரசு பணித்துள்ளது. APAAR எண் மூலம் ‘போலிச் சான்றிதழ்கள், போலி மதிப்பெண்கள் உருவாக்கப்படுவதைத் தவிர்க்க முடியும். பள்ளிகள், கல்லூரிகள் மாறும்போது தரவுகளை கல்வி நிறுவனங்கள் எளிதாக எடுத்து சரிபார்த்துக்கொள்ள முடியும் என்பது மத்திய அரசின் வாதம்.
மாணவர்கள் பள்ளி, கல்லூரி மாறுதல், வேலைக்குச் செல்லுதல் உள்ளிட்ட இடங்களில் அபார் ஐ.டி யைக் காண்பித்தாலே போதும், அவர்களின் முழு விவரங்களையும் நிறுவனங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும். மாணவர்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை கண்காணிக்க வாழ்நாள் முழுவதும் இந்த அடையாள எண் அமலில் இருக்கும். மாணவர்கள் எங்கே படிக்கிறார்கள்? கல்லூரிக்குச் செல்கிறார்களா? அல்லது படிப்பை பாதியில் நிறுத்துகிறார்களா? போன்ற விவரங்களையும் இந்த அடையாள அட்டை மூலம் கண்காணிக்க முடியும். பள்ளி இடைநிற்றலையும் இந்த அட்டையைக் கொண்டு தடுக்க முடியும் என, மத்திய கல்வித்துறை அமைச்சக ஊழியர்கள் சொல்கிறார்கள்.
மறுபுறம் `ஒரே நாடு ஒரே தேர்தல்’, `ஒரே நாடு ஒரே ரேஷன்’ என்ற அடிப்படையில், `ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள எண்’ என்ற திட்டத்தையும் மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருப்பதாகக் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால், ’பெற்றோர் கருத்து கேட்புக்குப்பிறகே, இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும். இதுகுறித்த விரிவான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளிவரும்’ என்று மத்திய கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக் குழந்தைகளின் ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் கோரி நாடு முழுவதிலும் சுமார் 40 லட்சம் பேர் மனு செய்துள்ளனர். மேலும், ஆதார் அட்டை இல்லாதவர்களே சுமார் 19 லட்சம் உள்ளனர். இதுபோன்ற காரணங்களால், அபார் அட்டைக்கான விவரங்களை பள்ளிகள் திரட்டுவதில் சிக்கல் ஏற்படலாம், தகவல்களின் பாதுகாப்பு பற்றிய கேள்வியை புறம்தள்ளிவிட முடியாது என கல்விச் செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், “இந்த அபார் அட்டைகளின் விவரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. இந்த விவரங்கள் அரசு நிறுவனங்கள் தவிர வேறு எவருக்கும் பகிரப்படாது என பெற்றோர்களிடம் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த அட்டைக்காக பெற்றோர் அளித்த அனுமதியை எப்போது வேண்டுமாலும் வாபஸ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று மத்திய பள்ளிக் கல்வி அமைச்சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தானியங்கி நிரந்தர கல்விக் கணக்கு பதிவேடு (ஏபிஏஏஆர்), பள்ளிக் கல்வித் துறையில் பெரும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் ஒப்புதல் படிவத்தின் உள்ளடக்கங்கள், தரவு பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் திட்டத்தின் கட்டாயத் தன்மை குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆதார் தரவுகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி வரும் நிலையில், ஏபிஏஏஆர் அட்டை தகவல்கள் குறித்து கல்வியாளர்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர்.
ஒப்புதல் படிவத்தில் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க விரும்பாதபோது என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பமும் நிலவுகிறது. இந்த புதிய அடையாள அட்டை குறித்து எந்த விழிப்புணர்வும் இல்லாத நிலையில், இந்தத் திட்டம் குறித்து முழுமையாக அறியாமல் ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திட பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள். ஏற்கனவே பல்வேறு நடைமுறைகளால் கற்பித்தல் பணிகளில் மிகப்பெரிய தொய்வு இருக்கும் நிலையில், இதைப்போன்ற கல்விசாரா பணிகள் சுமையாகவே இருக்கும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry