காவிரி நதிநீர்ப் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா அதனைச் செயல்படுத்தவில்லை.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது. காவிரியில் நாள் ஒன்றுக்கு 24,000 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்பதும் தமிழகத்தின் முக்கியக் கோரிக்கையாகும்.
இதற்குக் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே பொழிந்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய பிரதான அணைகள் நிரம்பவில்லை. இருப்பினும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது.
Also Read : காவிரி விவகாரத்தில் தமிழக அரசு பொய் சொல்வதாகப் புகார்! பிரதமரை சந்தித்து முறையிட கர்நாடக அரசு முடிவு!
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, காவிரி நதிநீர்ப் பங்கீட்டு வழக்கை விசாரிக்க, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வினை அமைத்து உத்தரவிட்டிருந்தனர்.
இந்தப் புதிய அமர்வில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று(25/08/23) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், “கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால், தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் கருகிவிடும். தண்ணீர் திறப்பு விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்ற கர்நாடக அரசு மறுக்கின்றது. எனவே, கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர நேரிடும்” என வாதிடப்பட்டது.
கர்நாடக அரசுத் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், “கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை முறையாக பயன்படுத்தாமல் தமிழகம் வீணடித்துவிட்டது. கர்நாடகத்தைப் பொறுத்தவரை, இது வறட்சியான ஆண்டாக இருக்கிறது. போதிய மழை இல்லாததால், அணைகளில் தண்ணீர் குறைவாக இருக்கிறது. இந்தச் சூழலில், எங்களால் எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும்? இருப்பினும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்துக்குக் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், “மிகக் குறைவான அளவு தண்ணீரையே தற்போது கர்நாடக அரசு விடுவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்ட அளவு தண்ணீரைக்கூட கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பைக் கர்நாடக அரசு முழுமையாகப் பின்பற்றினால் போதும்” என்று வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “காவிரி மேலாண்மை ஆணையம் 15 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்தி இருக்கிறதா? என்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry