ரூ.1,800 கோடி செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு ஐ.டி. நோட்டீஸ்! கட்சியை திவாலாக்க மோடி முயற்சி என காங்கிரஸ் குற்றச்சாட்டு!

0
128
Congress leaders Jairam Ramesh and Ajay Maken. | Photo Credit: ANI

1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.1,823 கோடி செலுத்த வேண்டுமென காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த ஆண்டுகளுக்கான வரிக் கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்காக இந்தத் தொகையை அபராதமாக வருமான வரித்துறை விதித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் வருமான வரித்துறையின் புதிய நோட்டீஸ் கிடைத்ததாக செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் அஜய் மக்கன் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் இருவரும் தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ஜெய்ராம் ரமேஷ், “பாஜக வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது” என்று குற்றஞ் சாட்டினார். அஜய் மக்கன் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி ரூ.1,823 கோடி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. சீதாராம் கேஸரி காங்கிரஸ் தலைவராக இருந்த 1993-94ல் ஆண்டுகளில் மட்டும் ரூ.53 கோடி செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை விதிமீறல்களுக்கு விதிக்கும் அபராதத்தின் அடிப்படையில் பார்த்தால் பாஜக ரூ.4,600 கோடி அபராதம் செலுத்த வேண்டும். அடுத்த வார தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தை நாடும். ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் நிதி ரீதியாக சிக்கலை எதிர்கொள்ள வேண்டும் என்று பாஜக வருமான வரித்துறையை பயன்படுத்தி வருகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பொதுவாக அரசியல் கட்சிகளுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், வருமான வரியை தாக்கல் செய்வதில் தாமதம் என்ற பெயரில் தற்போது நோட்டீஸ் வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியை திவாலாக்கும் நோக்கத்துடன் நரேந்திர மோடி அரசு இதைச் செய்கிறது.

தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதை அறிந்து, அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பா.ஜ.க. தாக்கி வருகிறது. இது ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கை ஆகும். இதை எதிர்த்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். எங்கள் கணக்குகள் முன்பு முடக்கப்பட்டன, இப்போது எங்கள் நிதி முடக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. எந்த வருமான வரியையும் செலுத்தவில்லை. ஆனால் அவர்களுக்கு வருமான வரித்துறையின் நோட்டீஸ் வழங்கப்படுவதில்லை.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏற்கெனவே, வருமான வரித் துறையால் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், ரூ.210 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-19ம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்காக சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் உள்பட காங்கிரஸ் கட்சியின் 4 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காங்கிரஸ் ஏற்கனவே நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் அபராதம் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.