4 மொழிகளில் ஓடிடி-யில் வெளியாகிறது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’! படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்!

0
168

1990-ம் ஆண்டின் துவக்கத்தில், ஜம்மு – காஷ்மீரில் வாழ்ந்துவந்த இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து தப்பி, நாட்டின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருவதை மையமாகக் கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இந்தப் படம், பல்வேறு சட்டப் பிரச்சனைகளை தாண்டி கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனுபம் கெர், விவேக் அக்னி ஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார், பாஷா சும்ப்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தப் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதன்படி, மத்தியப் பிரதேசம், கோவா, ஹரியானா, குஜராத், கர்நாடகா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த திரைப்படம் உண்மையை வெளிப்படையாக காண்பிப்பதாக பிரதமர் மோடி படக்குழுவை பாராட்டியிருந்தார். எதிர்ப்புகளை சந்தித்தாலும், இந்தப் படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் புரிந்து சாதனைப் படைத்துள்ளது.

இதையடுத்து, ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ எனும் படத்தை இயக்கி வருவதாக, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், அடுத்த மாதம் 13-ம் தேதி, ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாவதாக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry