
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “இந்த மாதம் 2ம் தேதி திருச்சி மணப்பாறையில் முதலமைச்சர் கலந்து கொண்ட சர்வதேச சாரண, சாரணியர் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. வரவேற்று மகிழ்கிறோம்.
உடனடியாக வரும் 22ம் தேதி தமிழ்நாடு பெற்றார் ஆசிரியர் கழகம் சார்பில் ஒரு இலட்சம் பேர் பங்கேற்கும் ‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’ மண்டல மாநாட்டினை நடத்தலாமா? பள்ளிக்கல்வித்துறையினை தொடர்ந்து விளம்பரத் துறையாக மாற்றி வருவது ஏன்? எங்கள் எதிர்ப்புணர்வினை இங்கே பதிவு செய்கிறோம்.
Also Read : மாணவர்களின் சாபம் சும்மா விடாது..! பள்ளிக் கல்வித்துறைக்கு ஐபெட்டோ எச்சரிக்கை!
தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் ‘‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” 7வது மண்டல மாநில மாநாடு 22.02.2025 சனிக்கிழமை, காலை 8.30 மணிக்கு விருத்தாசலம் கல்வி மாவட்ட எல்லைக்கு உள்பட்ட திருப்பயர் என்னும் ஊரில், ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் செல்லும் சாலையில், கண்டப்பன்குறிச்சி அருகில் உள்ளது இந்த திருப்பயர். விருத்தாசலத்தில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பொறுப்பையும் வகிப்பதால் பள்ளிக்கல்வித்துறையை விளம்பரத் துறையாகவே மாற்றிவிட்டார். ‘கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை என ஏழு மாவட்டங்களிலிருந்து, அனைத்து ஆசிரியர்களும் கடலூர் மண்டல மாநாட்டில் பங்கேற்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 10 முதல் 20 பெற்றோரைப் பள்ளி வாரியாக அழைத்து வர வேண்டும் என்று துறை சார்பில் வற்புறுத்தப்பட்டுள்ளது.’
எத்தனை நூறு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்தாலும், இந்த ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும், பெற்றோரும் காலை 7.30 மணிக்குள் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள்ளாக வந்தடைய வேண்டும். ஒரு லட்சம் பேரைக் கூட்டுவது என இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். பெற்றோரை அழைத்து வரும் பொறுப்பு கல்வித்துறை அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெற்றோரைப் பாதுகாப்பாக அழைத்து வந்து, பாதுகாப்பாக அழைத்துச் சென்று இல்லத்தில் சேர்ப்பது பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களின் கடமையாகும்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுயநிதிப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், பேருந்திற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். செலவினங்களை ஈடுகட்ட வேண்டும். இல்லாவிடில் அந்தந்த பள்ளிகளில் கல்வித்துறை முழுப் பார்வையினையும் காட்டுமாம். செய்தியாளர்களிடம் தனியார் பள்ளிகள் சார்பாக பேட்டியளிக்கிறார்கள். கற்றல் கற்பித்தல் பணியில் காட்டுகிற அக்கறையினைக் காட்டிலும், விளம்பரங்களை முழு நேரப் பணியாகக் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செயல்பட்டு வருவது, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்புணர்வினையும், வெறுப்புணர்வினையும் ஏற்படுத்தி கொந்தளிக்கச் செய்து வருகிறது.
Also Read : பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
பிப்ரவரி 2ஆம் தேதி மணப்பாறையில் நடைபெற்ற சாரண சாரணியர் பெருந்திரளணி முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவில், சாரண, சாரணிய இயக்கத் தலைவர் பொறுப்பு வகிக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை, முதலமைச்சர் மனம்திறந்து பாராட்டியுள்ளார். இந்நிகழ்வையொட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், வெள்ளி யானை பரிசினை குடியரசுத் தலைவரிடம் பெற உள்ளதாக அறிவித்தார்கள். வரவேற்று மகிழ்கிறோம்.
பிப்ரவரி மாத இறுதிக்குள்ளாக இன்னொரு விழா தேவையா..? தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, அரசின் மீது எதிர்ப்புணர்வுடன் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு சார்பாக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பிப்ரவரி 14ம் தேதி மாலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளார்கள். 2வது கட்டமாக பிப்ரவரி 25-ல் மாவட்டத் தலைநகர்களில் மறியல் போராட்டத்தினை நடத்திட உள்ளார்கள்.

நிலைமை இப்படியிருக்கும்போது, 22ம் தேதி பெற்றோரைக் கொண்டாடும் விழாவில் 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும், ஒரு லட்சம் பேரை அழைத்து வரவேண்டும் என்கிறார்கள். சொன்னதையும் செய்யவில்லை என்பதை முன்னிறுத்தி போராடி வருகிறோம், சொல்லாததையும் செய்துவிட்டதாக முதலமைச்சர் மேடைதோறும் பேசிவருகிறார்கள்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்து எந்தக் கோரிக்கையினையும் இதுவரையில் நிறைவேற்றவில்லை. விளம்பரத்தால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. மாநாட்டிற்கு கூட்டம் சேர்ப்பது கட்டாயம் என்றால், அதை எதிர்த்து முழக்கமிடுவோம். பெற்றோரைக் கொண்டாடும் மாநாட்டில், பெற்றோருக்கு ஒருவேளை உணவு வழங்க முன்வராத மாநாடு, கொண்டாடி மகிழும் மாநாடா? கற்றல் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பள்ளிக்கல்வித்துறை செயல்பட வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry