தமிழக அரசின் ஓர் ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, “கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆரம்பமாகி உள்ளது. குறிப்பாக கோடநாடு வழக்கில் தோண்ட தோண்ட புதிய புதிய விஷயங்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து இந்த விவகாரத்தில் எந்தெந்த அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது மக்கள் மன்றத்திற்கு தெரியவரும்.
பிள்ளை பிடிக்கும் வேலையை பாஜக–காரர்கள் செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசையை பிடித்து பாஜக–வில் சேர்த்துள்ளனர். அதேபோல் தற்போது திருச்சி சிவாவின் மகனை பிடித்து பாஜக சேர்த்துள்ளனர். தமிழகத்தில் நிலையான கொள்கை இல்லாமல் பாஜக நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் தேவையில்லாமல் கலவரத்தை தூண்டும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். இவ்வாறு அவர் பேசி வருவது சரியல்ல. அவருக்கு எச்சரிக்கை விடுகின்றேன். பழைய திமுக காரன் மீண்டும் வந்து விடுவான். எனவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கின்றேன். அண்ணாவைப் பற்றி தவறுதலாக கிருபானந்த வாரியார் பேசினார். இதன் காரணமாக அவர் எங்கும் வெளியே சென்று பேச முடியாத நிலை உருவானது. இதே நிலைமைதான் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கின்றேன்” என பேசினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry