திருவாரூர் தெற்கு ரத வீதியை கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து, திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து பாஜக சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன உரையாற்றிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டுவது, ஊர் பெயர்களை மாற்றுவது என இரண்டு வியாதிகள் பிடித்திருக்கிறது. இந்த வியாதி காங்கிரஸ் கட்சிக்கு முன்பு இருந்தது. அதன் காரணமாக குடும்பத்தினரின் பெயரை அவர்கள் சூட்டினார்கள். அந்த வியாதி திமுகவுக்கும் தற்போது வந்துவிட்டது.
மத்திய அரசு, 44 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறது. மத்திய அரசு திட்டங்களில், பிரதமர் திட்டம் என்று தான் உள்ளது. அதில், மோடி பெயர் வைப்பது இல்லை. நாட்டு மக்களின் நலன் சொல்லுகின்ற பெயரை பிரதமர் சூட்டினார்.
இத்தகைய நிலையில் திருவாரூரில் தியாகராஜர் தேரோடும் வீதியை கருணாநிதியின் பெயரை சூட்ட நினைப்பது கண்டிக்கத்தக்கது. திருவாரூர் தெற்கு ரத வீதி என்பது, ஆசியாவிலேயே புகழ்மிக்க ஆழித் தேரோடும் வீதி. பல்லாயிரக்கணக்கான பெரியவர்கள், ஆன்மீக எண்ணத்தோடு நடந்து வந்துள்ளார்கள். குறிப்பாக மனுநீதிச் சோழன் இந்த மண்ணை ஆண்டுள்ளார். இத்தகைய ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பெருமையை கொண்ட இந்த வீதிக்கு, கருணாநிதியின் பெயரை சூட்டுவது சரியல்ல. மனுநீதிச்சோழன் பெயரை சூட்ட வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 60 ஆண்டுகளாக, சாலை வசதி இல்லாத மலை கிராமம் உள்ளது. அந்த கிராம சாலைக்கு, அவர்கள் விரும்பும் பெயர் வைத்து சாலையை சரி செய்யட்டும். சில தினங்களுக்கு முன் ஜீயர் ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு முதலமைச்சரை புகழ்ந்து பேசுமாறு வலியுறுத்துகிறார். இந்த பிழைப்புக்கு கோயில் முன் அவர் பிச்சை எடுக்கலாம். திமுகவின் கூட்டணிக் கட்டிகள் ஊது குழல்களாக உள்ளன.
தொல்.திருமாவளவன் கொழும்புவில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற நிலை இந்தியாவிலும் வரும் என தெரிவிக்கிறார். இந்த நிலை தமிழ்நாட்டுக்குத்தான் வரும். ஏனெனில் கொழும்புவில் முழுக்க முழுக்க குடும்ப அரசியலே நடைபெற்று வந்தது. ராஜபக்சேவின் குடும்பத்தில் ஒருவர் அதிபர், மற்றொருவர் பிரதமர், மற்றொருவர் முதல்வர், அவரது மகன்கள் அமைச்சர்களாகவும் எம்பிக் களாகவும் பதவி வகித்தனர். குடும்ப ஆட்சியின் காரணமாக அனைத்து அரசு சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு ஒரே குடும்பத்துக்கு சென்றது. இதன் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இலங்கை மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது.
திருமாவளவன் தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது ஆண்டு கொண்டிருக்கிற அறிவாலய குடும்பம் குறித்த குடும்ப வரைபடத்தை வரைந்து பார்த்தால் யார் யார் எந்தெந்த பதவியில் இருக்கிறார்கள் என்பது நன்கு தெரியும். திருமாவளவனுக்கு இலவச கண்சிகிச்சை செய்ய பாஜக தயாராக இருக்கிறது. இருப்பினும் இதுபோன்ற நிலைக்கு எல்லாம் நாடு சென்று விடாமல், அறிவாலயம் குடும்பம், சரத்பவார் குடும்பம், தாக்கரே குடும்பம் உள்ளிட்ட அனைத்து குடும்ப அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து உலகம் போற்றும் தலைவராக 2024ல் மோடி மீண்டும் உருவெடுப்பார். 2024 தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்பார். அப்போது மோடியும், இந்தியாவும் உலகத்துக்கே விஸ்வ குருவாக இருப்பார்கள்.
பாரதப் பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்காக 36 ஆயிரம் லஞ்சம் கொடுத்தும், அதிகாரிகள் மேலும் லஞ்சம் கேட்டதால் நன்னிலம் பகுதியை சேர்ந்த மணிகண்டனம் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம், இதை சாதாரணமாக விட்டுவிட முடியாது” என்று அவர் கூறினார். கண்டனக் கூட்டம் முடிந்து மணிகண்டன் வீட்டுக்குச் சென்ற அண்ணாமலை, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
Visited the family of Manikandan to pay our condolences. Heart broken to see his family shattered.
This is exactly the kind of family that our Hon PM Shri @narendramodi avl wants to help & make them prosper@BJP4TamilNadu will stand by the family in their hour of sorrow! https://t.co/fQjArEvaZx pic.twitter.com/QxWqq0APxR
— K.Annamalai (@annamalai_k) May 12, 2022
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry