புதிய கல்விக் கொள்கையை பின்பற்ற தயார்! இந்தியை எதிர்க்கவில்லை! பொன்முடி பல்டி!

0
300

கோவை பாரதியார் பல்கலைகழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி , உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

1687 முனைவர் பட்ட மாணவர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களுக்கு பட்டங்கள், தங்க பதக்கங்கள் விழாவின்போது வழங்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அவர்கள் இருக்கும் துறையில் அவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்துகின்றார். பட்டம் பெறும் 2,40,445 பேரில் அதிகபட்சம் பெண்கள் இருக்கின்றனர்.

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற பாரதியார் பாடல்களை ஆளுநர் அடிக்கடி சொல்லுவார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றார்.

கல்வி, தொழில் துறை, தொழிலாளர் நலத்துறை இணைந்து, மாணவர்கள் படிக்கும் போதே அனுபவங்களை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

பெண் பட்டதாரிகள் ஆண்களை விட அதிகம். பெண்கள் படிக்கவே கூடாது என்று சொன்ன காலம் உண்டு. இன்று பெண்களை படிக்க வைக்கின்றார்கள். இதுதான் திராவிடியன் மாடல். இதுதான் பெரியார் மண். நாங்கள் மொழிகளுக்கு எதிரானவர்கள் இல்லை, இந்திக்கு எதிரானவர்களும் அல்ல, இந்தி திணிப்பு வேண்டாம் என்பதையே ஆளுநரின் கவனத்திற்கு எடுத்துக் செல்கிறோம்.

புதிய கல்வி கொள்கையில்  உள்ள நல்ல விஷயங்களை பின்பற்ற தயாராக இருக்கின்றோம். ஆனால் நாங்கள் மாநில கல்வி கொள்கையினை பின்பற்றுகின்றோம். நாங்கள் எங்கள் உணர்வுகளை கவர்னரின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றோம். இந்தி தேர்வு மொழியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.

எந்த மொழியையும் கற்க தயாராக இருக்கின்றோம். அது மூன்றாவது மொழியாக மட்டுமே இருக்க வேண்டும். சர்வதேச மொழியான ஆங்கிலமும், தாய் மொழியான தமிழ் மொழியும் இருக்கின்றது. இந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பானிபூரி வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர்.” என்று கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry