போதைப்பொருள் புழக்கம் எதிரொலி! விற்பனையாளர்களின் சொத்துக்களை முடக்க முதல்வர் உத்தரவு!

0
94

தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னையில் கலைவாணர் அரங்கில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் போதைப் பொருள் ஒழிப்பு பற்றி முதலமைச்சர் விவாதித்தார்.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்காகவே இதுவரை இதுபோன்ற கூட்டத்தைக் கூட்டியுள்ளோம். ஆனால் முதல் முறையாக போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க தற்போது கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

அழிவுப் பாதையான போதைப் பொருளை, முழு ஆற்றலையும் பயன்படுத்தி நாம் தடுக்க வேண்டும். அதற்கான உறுதி எடுக்க வேண்டும். போதை மருந்துகள் மாநிலத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும். விற்பனையை தடுக்க வேண்டும், பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். பயன்படுத்துவோரை அதிலிருந்து மீட்டு நல்வழி ஆக்க வேண்டும். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

இந்த உறுதியை மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தில் குஜராத்தை, மகாராஷ்டிராவை விட தமிழ்நாட்டு குறைவு தான் என நான் சமாதானம் அடைய தயாராக இல்லை. போதை என்பது தனி மனித பிரச்சனை அல்ல, சமூக பிரச்சனை. போதைப்பொருள் பழக்கம் சமூகத் தீமை. போதைப் பொருள்தான் சாதி, மத மோதல்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது. இதை அனைவரும் சேர்ந்து தான் தடுத்தாக வேண்டும்.

போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். போதை பொருட்கள் நடமாட்டம் பள்ளி, கல்லூரிகளில் இல்லாமல் கண்காணிக்க வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் போதைப் பொருளை கடத்தி வருவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். போதை பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். ஒரு சேர சமூகம் இயங்கினால் தான் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகம் செயல்பட முடியும்.

பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கும் உண்டு, கல்லூரி நிர்வாகத்திற்கும் உண்டு. போதை என்னும் சமூக தீமையை அனைவரும் சேர்ந்து தான் தடுக்க வேண்டும். வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் அனைவரும் போதைப் பொருள் விற்க மாட்டேன் என உறுதி ஏற்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.

Also Read : நாட்டை விற்க தரகு வேலை செய்கிறார் மோடி! அடிமாட்டு விலைக்கு 5G அலைக்கற்றை விற்பனை! சீமான் ஆவேசம்!

இதனிடையே, போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து வரும் 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ஒருவார காலத்திற்கு போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் நாளை காலை 10.30 மணியளவில் அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்களை எடுக்க செய்ய வேண்டும் என்றும், விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது குறித்த விவரங்களை நாளை பிற்பகலில் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read : 14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்! நல்ல திட்டங்களை முடக்குவதாக ஈபிஎஸ் விமர்சனம்!

இந்நிலையில், சமூகக் குற்றங்களுக்கு வழி வகுக்கும் போதை கலாச்சாரத்தை தடுக்க முதலமைச்சர் உத்திகளை வகுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மகிழுந்தில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்ற 4 பேர் கும்பல், கொளுத்துவாஞ்சேரி என்ற இடத்தில் முள்புதருக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இளம் பெண்ணை கடத்தி சீரழித்த நால்வரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட போது கூட அவர்களின் போதை தெளியவில்லை எனத் தெரிகிறது. போதை எத்தகைய சமூகக் குற்றங்களுக்கு வழி வகுக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம்.

போதைப்பொருட்களை ஒழிப்பது குறித்து ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதைப்பொருட்களால் இத்தகைய குற்றங்கள் நிகழ்வதையும் கருத்தில் கொண்டு, போதை ஒழிப்பு உத்திகளை வகுக்க வேண்டும்.

பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்வதுதான் நல்லாட்சிக்கான இலக்கணம் ஆகும். அதற்கான நடவடிக்கைகளையும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry