மழலையர் வகுப்புகளை சிறப்பாக நடத்துவது எப்படி? ஆசிரியர் கூட்டணியின் அடுக்கடுக்கான யோசனைகள்!

0
573

மழலையர் வகுப்புகளை சிறப்பாக நடத்துவது எவ்வாறு?, தொடக்கக் கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப என்ன செய்யலாம்? அரசுப் பள்ளிகளின் தரத்தை எப்படி உயர்த்தலாம்? போன்றவற்றுக்கு சிறப்பான யோசனையை தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசுக்கு முன்வைத்துள்ளது.

அந்த அமைப்பின் மூத்த தலைவர் வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்கேஜி, யுகேஜி மழலையர் பள்ளிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும். மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் 20 ஆண்டுகளாக பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில், பதிவு மூப்பு அடிப்படையில் மூவாயிரம் பேரை சிறப்பு ஆசிரியர்களாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்து ஏழை, எளிய பெற்றோர்களின் பிள்ளைகள், மழலையர் கல்வியை செலவில்லாமல் பயில்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டுகிறோம். தேவையான இடங்களில் மழலையர் பள்ளிகளை கூடுதலாக தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.

வா. அண்ணாமலை

ஏற்கனவே தொடக்கக் கல்வித்துறையில் 14 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளது. அதனால் தான் மழலையர் பள்ளிகளில் பயிற்றுவித்து வந்த இடைநிலை ஆசிரியர்களை பள்ளிகளுக்கு மாற்றம் செய்து, கற்பித்தல் பணியில் ஈடுபட வைத்துள்ளார்கள். ஓராசிரியர் பள்ளிகளை உடனடியாக ஈராசிரியர் பள்ளிகளாக மாற்ற வேண்டும். ஏற்கனவே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்வதை தமிழக ஆசிரியர் கூட்டணி பெரிதும் வரவேற்கிறது.

எமிஸ் (EMIS) போன்ற புள்ளிவிவர மன உளைச்சலில் இருந்து விடுவித்து, மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் எவ்வித பயிற்சிகளையும் நடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 2023ஆம் ஆண்டில் ஒவ்வொரு அரசுப் பள்ளியும், மாதிரி பள்ளிகளாக, தரமான கல்வியைத் தரும் பள்ளிகளாக செயல்படச் செய்வோம் என்ற உறுதியினை எடுத்துக்கொள்வோம். பள்ளி திறக்கும் நாளில் அரசாணை எண்: 101,108 ரத்து செய்யப்பட்டு, தொடக்கக்கல்வித் துறை சுதந்திரமாக செயல்படும் நாளாக இணைந்து கொண்டாடி மகிழ்வோம்! பள்ளி திறக்கும் நாளினை கொண்டாடி மகிழ்வதைப் போல, தொடக்கக் கல்வித் துறை சுதந்திரமாக செயல்படும் நாளாகவும் எண்ணி கொண்டாடி மகிழ வேண்டாமா?

13ஆம் தேதி ‘எண்ணும் எழுத்தும்’ பயிற்சியை திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அதனை வரவேற்று பாராட்டுகிறோம். இதனூடே, பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளியை தூய்மை செய்வதற்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளார்கள்.

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் போன்றவர்கள் பள்ளியில் தூய்மைப்பணி நடக்கிறதா? என்பதை நேரில் ஆய்வு செய்வதை ஊடகங்கள் வழியாகப் பார்க்கிறோம். கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறப்பு தேதி அறிவித்தவுடன், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே பள்ளிக்குச் சென்று வகுப்பறை மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மைப்படுத்துகின்ற பணியினை செய்வது காலம்காலமாக இருந்து வரும் வழக்கம்தான். பள்ளியை தூய்மைப்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுரை வழங்குவதைப் பார்க்கும்போது, கொடியசைந்ததும் காற்று வந்ததா..? காற்று வந்ததும் கொடி அசைந்ததா..? என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கை முனைப்பு இயக்கம் நடத்தி வருவதைத் துண்டு பிரசுரங்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் கண்டு களித்து வருகிறோம். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நமது இயக்க ஆசிரியர்கள் ஆர்தர், ஜேசுதாஸ் போன்றவர்கள் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தும் பாடல்களை, அரசுப் பள்ளிகளுக்கு ஆதரவாக பாடி தமிழ்நாடு முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள், அவர்களுக்கு பாராட்டுக்கள்”. இவ்வாறு அறிக்கையில் வா. அண்ணாமலை கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry