சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான கொள்கையை வகுக்க தமிழ்நாடு அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலை பெறத் தகுதியான சிறைவாசிகளை அடையாளம் காணவும், அவர்களை விடுக்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டு இந்த கொள்கை திட்டமிடப்படுகிறது.
மேலும், சிறைவாசிகளை விடுவிப்பதற்காக ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வழிமுறைகளில் உள்ள குறைபாடுகளும் களையப்பட்டு புதிய கொள்கையில் இணைக்கப்படும் எனத் தெரிகிறது. சட்டம் மற்றும் உள்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து கொள்கையை உருவாக்குகின்றனர். விடுதலைக்கு தகுதியான சிறைவாசிகளை தேர்ந்தெடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கைதிகள் பலரும், அவர்களது குடும்பத்தினரும் நீதிமன்றத்தை நாடுவதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொள்கையை உருவாக்கும் செயல்முறை மூன்று வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. கைதிகளின் விவரங்கள், செய்யப்பட்ட குற்றம், எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை, சிறையில் நடத்தை போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
Also Read : சென்னையில் ஒரு மாதத்துக்கு இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம்! பேட்டர்சன் கேன்சர் சென்டர் ஏற்பாடு!
முன்னாள் முதலமைச்சர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறைக்கைதிகள் சிலரை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான அரசாணைகளை வெளியிடும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. ஆனால், அரசியல் சார்புடனேயே யார் யாரை விடுவிக்க வேண்டும் என்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாக விமர்சனமும் இருக்கிறது.
1994 ஆம் ஆண்டு, அனைத்திந்திய சிறைச் சீர்திருத்தக் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி, மனிதாபிமான அடிப்படையில், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையை முடித்த குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய அப்போதைய அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இது பின்பற்றப்படவில்லை என்று வழக்கறிஞர் புகழேந்தி கூறுகிறார்.
மேலும், “1994 உத்தரவை பின்பற்றினால், மத்திய சிறைகளில் இருந்து குறைந்தபட்சம் 400 கைதிகள் விடுதலையாவார்கள். தங்கள் விருப்பப்படியே ஆளும் கட்சிகள் முடிவெடுக்கின்றன. அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15, 2008 அன்று திமுக ஆட்சியில், பொதுமன்னிப்புத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட 1,404 பேரில் லீலாவதி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 பேரும் அடங்குவர்.
கவுன்சிலர் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க வசதியாக, முன்விடுதலை காலவரம்பை, அதாவது 10 ஆண்டு சிறைத்தண்டனையை 7 ஆண்டுகளாக அரசு குறைத்தது. அதேபோல், அரசாணை 64ன் கீழ், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தொடர்புடைய மூவரும், நவம்பர் 19, 2018 அன்று வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்” என்று புகழேந்தி தெரிவித்தார்.
Also Read : அச்சுறுத்தும் ஏஐ தொழில்நுட்பம்! வேலையைத் தக்க வைக்க போராட வேண்டியிருக்கும் என எச்சரிக்கை!
முன்விடுதலைக்கான தகுதிகள் இருந்தும், அதற்கான பட்டியலில் இடம்பெறாத சிறைவாசிகள் உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை நாடுகின்றனர். இவர்களில் பலர் பணம் கொடுத்து வழக்கறிஞர்களை
நியமித்துக்கொள்ள முடியாத நிலையிலும் உள்ளனர். இதனால் வழக்கில் வெற்றி பெற முடியாமல், தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க தெளிவான கொள்கையை வகுப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
இதனிடையே, ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் குழு ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்தக் குழுவில் மனநல மருத்துவர், மருத்துவக் கல்வி இயக்குநர், சிறைத்துறையின் தலைமை நன்னடத்தை அலுவலர், குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் உள்ள மூத்த வழக்கறிஞர், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் துணைத் தலைவர் பதவி உள்ள ஒருவர் என ஆறு பேர் இடம்பெற்றனர்.
இந்தக் குழுவினர் தமிழ்நாடு சிறைகளில் பத்து மற்றும் 20 ஆண்டுகளில் தண்டனை முடிந்தும் விடுதலை ஆகாமல் உள்ளவர்களில், வயது முதிர்ந்தவர்கள், பல்வேறு இணை நோய்கள் உள்ளவர்கள், உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரது நிலைமையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டவிதிகளின்படி முன்விடுதலைக்கு பரிந்துரை செய்யும் என அறிவிக்கப்பட்டது.
Also Read : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகரமாக இருந்த திருவண்ணாமலை! சோழர் காலத்து கல்வெட்டுகள் கூறும் சுவாரஸ்ய தகவல்!
அதன்படி ஆதிநாதன் குழு அரசுக்கு அறிக்கையும் அளித்துள்ளது. இந்த அறிக்கை விரைவில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் அறிவித்தார். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதா? அனுப்பியிருந்தால் ஆளுநர் அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? என்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆதிநாதன் குழு பரிந்துரை அளித்துள்ள நிலையில், புதிதாக கொள்கை வகுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆதிநாதன் குழு நீண்டநாள் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.
அதேநேரம், புதிய கொள்கை இதற்கு எதிராக இருக்குமோ என்று இஸ்லாமிய அமைப்புகள் அச்சம் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், 25 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் இஸ்லாமியச் சிறைவாசிகளான கூலை இப்ராஹீம், யாசுதீன் கபாலி ஆகியோர் தங்களது முன்விடுதலைக்காக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மதத்தைக் காரணமாகக் காட்டி, எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
கூலை இப்ராஹீம், யாசுதீன் கபாலி ஆகிய இருவரும் வெளியே வந்தால் மதப்பதற்றம் உருவாகுமென்றும், இறந்துபோனவரின் குடும்பத்தினருக்கு ஆபத்து நேரிடுமென்றும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலென்றும் பிரமாணப் பத்திரத்தில் கூறி, வாழ்நாள் முழுமைக்கும் அவர்களைச் சிறையிலேயே வைக்க தமிழக அரசு முயற்சிக்கிறது.
கால் நூற்றாண்டான பிறகும் இஸ்லாமியச் சிறைவாசிகளை விடுதலை செய்ய மறுப்பது மனிதத்தன்மையே அற்ற செயலாகும். எனவே, எந்தக் குழு அமைத்தாலும், கொள்கை வகுத்தாலும் முன்விடுதலையில் முஸ்லிம் சிறைவாசிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை” என கூறினார்.
Featured Videos from VELS MEDIA
How to overcome #Anger #Stress?~கோபம், மன அழுத்தத்தில் இருந்து விடுபட எளிய வழி|K.Gopinath
With Input DT NEXT
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry