தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உள்பட்ட புளியங்குடியைச் சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான மாடசாமி என்பவரது மகன் தங்கசாமி (26). இவர் தனது உறவினர் ஒருவருக்கு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக சப்ளை செய்ததார் என கடந்த 11-ம் தேதி புளியங்குடி காவல்நிலைய எஸ்.ஐ. பரமசிவம் உள்ளிட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தங்கசாமியுடன் அவரது உறவினரான 60 வயதுடைய முப்புள்ளிமாடத்தியும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது Tamil Nadu Prohibition Actன் கீழ் 294(b), 353, 506(2) of the IPC and 4(1)(I), 4(1)(a) and 14A ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிந்தனர். கட்டிடத் தொழிலாளியான தங்கசாமி, நீதிமன்ற காவலின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read : ஒரே ஆணையில் 560 அலுவலர்கள் டிஸ்மிஸ்! ஊதியத்தைக் கேட்டதற்காக பணி நீக்குவது நீதியல்ல என பாமக கண்டனம்!
14-ந் தேதி அவர் உடல்நலம் சரியில்லை என்று கூறியதாகவும், எனவே திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீஸார் கூறுகின்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 15ந் தேதி, நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஸ்திரேட் திரிவேணி முன்னிலையில், தங்கசாமி உடல் பரிசோதனை நடந்தது. இந்த நிகழ்வு வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில், இளைஞரின் உடலில், கால்கள், முதுகு, விரல்கள் என ஏழு இடங்களில் முறையற்ற சிவப்பு-பழுப்பு நிற கண்ணிப்போன காயங்கள் இருப்பது தெரியவந்தது. இறப்பதற்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னர் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை மூலம் தெரியவருகிறது. தங்கசாமியின் சகோதரர் ஈஸ்வரன், தங்கசாமி உடல் காயங்களை பிணவறையில் வீடியோ எடுத்துள்ளார். இதையறிந்த காவல்துறை உதவி ஆணையர் சதீஷ்குமார், ஈஸ்வரனின் செல்போனை மிரட்டி வாங்கி, அந்தப் பதிவுகளை அழித்துள்ளார். மட்டுமின்றி, பிரேத பரிசோதனை அறிக்கையின் வீடியோ பதிவை, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு வழங்காமல் போலீசார் இழுத்தடிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
Also Read : சர்க்கரை வெஜ்ஜா, நான் வெஜ்ஜா! சர்க்கரையில் கலப்படும் ரசாயனங்கள் என்னென்ன? How bad is white sugar for you?
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளுறுப்புகளின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கை மற்றும் திசுக்களின் ஹிஸ்டோபாதாலாஜிக்கல் பரிசோதனை முடிவுகள் வராததால் இன்னும் இறப்புக்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், பெருமாள்புரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆரில், தங்கசாமிக்கு இறப்பதற்கு முன்பு, மார்பு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரேத பரிசோதனை வீடியோ காட்சிகளை பெருமாள்புரம் போலீசார் சிதைக்க முயல்வதாக, காவலில் வைத்து சித்திரவதை செய்வதற்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு குற்றம்சாட்டியுள்ளது. தங்கசாமிக்கு நீதி கேட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தும் CPI(ML) இன் வழக்கறிஞர் ரமேஷ், பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டதாக புகார் கூறியுள்ளார்.
தங்கசாமியின் குடும்பத்தினருக்கு மருத்துவமனையில் உடற்கூராய்வு அறிக்கை மட்டும்தான் 16.06.2023 அன்று தரப்பட்டுள்ளது. வீடியோ பதிவு தரப்படவில்லை. அதை ஏற்கனவே நீதித்துறை நடுவர் எண் 1 சார்பாக போலீசார் வாங்கிச் சென்று விட்டதாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கேட்டபோது, அங்கு வீடியோ வந்து சேரவில்லை என்கிறார்கள். இது பலவித கேள்விகளை எழுப்புகிறது.
தங்கசாமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் புளியங்குடியில், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தங்கசாமி உடலில் 7 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், போலீஸ் தாக்குதலில்தான் தங்கசாமி இறந்ததாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, தங்கசாமியின் உடலைப் பெற உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.
Also Read : சிறைவாசிகள் முன்விடுதலைக்காக புதிய கொள்கை? ஆதிநாதன் குழு பரிந்துரை என்னவாயிற்று?
தங்கசாமி மீது இதற்கு முன்பு எவ்வித வழக்கும் இல்லாத நிலையில், அவரை விசாரணை என்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததும்; அவரைக் கைது செய்த விவரமோ, சிறையிலடைத்த விவரமோ குடும்பத்தாருக்கு தெரிவிக்காததும்; சிறையில் இறந்து பிறகே அவர் கைது செய்யப்பட்ட விபரம் தங்கசாமியின் அம்மாவிற்கும், தம்பிக்கும் தெரிவிக்கப்பட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இறந்துபோன இளைஞர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை கோரி ஒரு வாரத்துக்கும் மேலாக இளைஞரின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாலும், தென்மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் தங்கசாமி தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாக போலீஸார் சிலர் கூறிவருவது தங்கசாமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சீற்றமடைய வைத்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022 மே 10 அன்று சட்டப்பேரவையில் பேசும் போது, தமிழகத்தில் இனி காவல் நிலைய மரணங்கள் ஏற்படாது என்று உறுதியளித்தார். சிறையில் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கூறிய முதலமைச்சர், காவலில் இருக்கும்போது யாரும் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும், காவலில் வைக்கப்படுவோரின் மரணங்களை நியாயப்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார். ஆனால், 2 ஆண்டு திமுக ஆட்சியில் லாக் அப் மரணங்கள் அதிகரித்து வருவதாகவும், முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry