மீண்டும் அதிகரிக்கப்போகும் மின் கட்டணம்! இந்த முறை 25% வரை உயர்த்தப்போவது மத்திய அரசு!

0
28
The ToD tariffs comprising separate tariffs for peak hours, solar hours and normal hours

தற்போதுள்ள நடைமுறையில், ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் ஒரே விகிதத்தில் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின்சார(நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 இல் மத்திய அரசு திருத்தம் செய்திருப்பதன் மூலம்,  டைம் ஆஃப் டே ( Time of Day Tariff-ToD) மின் கட்டண முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய நடைமுறையின் கீழ், மின்சாரத்திற்கு செலுத்தும் கட்டணம், நாளின் நேரத்திற்கு ஏற்ப மாறுபடும். அதன்படி, மின்சாரத்திற்கான உச்ச தேவை இருக்கும் நேரங்களில் (Peak Hours – உதாரணமாக, காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 முதல் இரவு 10 மணி வரை) மின் கட்டணம் வழக்கத்தை விட 10 முதல் 20 சதவீதம் அதிகமாக இருக்கும்.

Also Read : சர்க்கரை வெஜ்ஜா, நான் வெஜ்ஜா! சர்க்கரையில் கலப்படும் ரசாயனங்கள் என்னென்ன? How bad is white sugar for you?

அதே சமயம்,  சூரியஒளி கிடைக்கும் சாதாரண நேரங்களில் (solar Hours) தற்போது வசூலிக்கப்படும் சாதாரண கட்டணத்தை விட 10% -20% குறைவாக இருக்கும். இந்த சூரியஒளி கிடைக்கக் கூடிய நேரங்கள் எது என்பதை  அந்தந்த மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையம்  தங்களது புவியியல் அமைப்புக்கு ஏற்ப தீர்மானித்து கொள்ளும்.

2024 ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு இந்த புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வருகிறது.  2025 ஏப்ரல் 1 முதல் விவசாய நுகர்வோர் தவிர மற்ற அனைத்து நுகர்வோருக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட உடனேயே, ஸ்மார்ட் மீட்டர் நுகர்வோருக்கு இந்த கட்டணம் அமலுக்கு வந்துவிடும்.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே பெரிய வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு TOD கட்டணங்கள் நடைமுறையில் உள்ளன. ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதன் மூலம்,  அனைத்து நுகர்வோர் மட்டத்தில் இந்த புதிய கட்டணம் அமல்படுத்தப்பட இருக்கிறது.

Also Read : ஒரே அரசாணையில் 560 பேர் பணி நீக்கம்! வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாவட்ட, வட்டார வள அலுவலர்கள்!

இதுதொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசின் மின்சார திருத்த விதிகளை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது. மத்திய அரசு கொண்டுவந்த மின்சார சட்டம் மற்றும் அதன் அடிப்படையிலான மின்சார (நுகர்வோர் உரிமை) விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அஞ்சினோமோ, அவை அனைத்தும் நடைமுறைக்கு வரத் தொடங்கிவிட்டன.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது கடுமையான பொருளாதார தாக்குதலைத் தொடுக்கும் இந்த நடவடிக்கை பெரும் அநீதி ஆகும். தமிழகத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் 6 மணி முதல் 10 மணி வரையிலான 5 மணி நேரத்தை அதிக மின்பயன்பாட்டு நேரமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது. மின்சார (நுகர்வோர் உரிமை) விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி இந்த நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு வழக்கமான கட்டணத்திலிருந்து 25% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

அதேபோல், அதிக மின்சார பயன்பாடு இல்லாத நேரமான இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான 7 மணி நேரத்துக்கு 5 விழுக்காடு கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் தான் அனைத்து மின்சாரக் கருவிகளும் பயன்படுத்தப்படும். அலுவலகத்துக்கு புறப்படுவது, அலுவலகம் விட்டு வீடு திரும்பிய பிறகு தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு கருவிகளை பயன்படுத்துவது உள்ளிட்டவை இந்த நேரத்தில் தான் நடைபெறும். அதிக மின்சார பயன்பாட்டு நேரத்தில் மின்சாரத்தின் பயன்பாட்டைக் குறைப்பதற்காகத் தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மத்திய அரசின் விதிகள் கூறுகின்றன. இது நடைமுறை சாத்தியமற்றது.

10 விழுக்காடு மின்சாரப் பயன்பாட்டுக்கு 5% கட்டண சலுகை வழங்கிவிட்டு, 70% மின்சாரப் பயன்பாட்டுக்கு 25% கூடுதல் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்? இது மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 25% உயர்த்துவதாகவே பொருளாகும். நுகர்வோரை கசக்கிப் பிழியும் இந்த நடவடிக்கைக்கு மின்சார நுகர்வோர் உரிமை விதி என்று பெயரிட்டிருப்பது முரண்பாடு ஆகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

Also Read : கேடு விளைவிக்கும் ரீஃபைண்டு ஆயில்? சுத்திகரிக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் என்னென்ன? Adverse Effects of Refined Oil!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அண்மைக்காலங்களில் செய்யப்பட்ட மின்சாரக் கட்டண உயர்விலிருந்து பொதுமக்களாலும், தொழில் துறையினராலும் மீண்டு வர முடியவில்லை. இத்தகைய சூழலில் 70% மின்சாரப் பயன்பாட்டுக்கு மறைமுக கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவது ஏழை மற்றும் நடுத்த மக்களுக்கு தாங்க முடியாத பொருளாதார சுமையை ஏற்படுத்தி விடும்.

தொழில்துறையினராலும் இதை தாக்குப் பிடிக்க முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அதிக மின் பயன்பாட்டு நேரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற விதிகள் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மக்களை பாதிக்கும் மின் விதிகள் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மத்திய அரசின் மின்சார விதிகள் திருத்தத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது; கூடுதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்றும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry