B.Sc., Maths பாடப்பிரிவை தவிர்க்கும் மாணவர்கள்! பல கல்லூரிகளில் இளங்கலை கணிதப்பிரிவுக்கு மூடுவிழா!

0
89
Image used for representative purpose only | GETTY IMAGE

பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் (Arts and Science) மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, இந்த முறை பொறியியல் கல்லூரிகளை விட, கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுகிறது. அதிலும், பிசிஏ (BCA), பிபிஏ (BBA), B.Sc., Computer Science, B.Sc., Visual Communication, பி.காம் (B.Com) உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர்.

முன்னெப்போதும் இல்லாத விதமாக, நடப்பாண்டு தமிழகம் முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் பிஎஸ்சி கணிதம் (BSC Maths) படிப்பில் மிக மிகக் குறைவான அளவிலேயே மாணவர்கள் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 10 கல்லூரிகள், பிஎஸ்சி கணிதம் படிப்பை அடியோடு தூக்கிவிட்டன. தற்போது வரை, மாநிலத்தில் உள்ள 51 அரசுக் கல்லூரிகளில் வெறும் ஒற்றை இலக்கத்தில்தான் பிஎஸ்சி கணிதம் படிப்பில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவற்றில் 4 கல்லூரிகளில் ஒரு மாணவன் கூட பிஎஸ்சி கணிதம் பாடப்பிரிவில் சேரவில்லை.

Also Read : மீண்டும் அதிகரிக்கப்போகும் மின் கட்டணம்! இந்த முறை 25% வரை உயர்த்தப்போவது மத்திய அரசு!

அரசுக் கல்லூரிகள் மட்டுமின்றி தனியார் கல்லூரிகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. பிரபல கல்லூரிகளான டிஜி வைஷ்ணவா, எம்எம்சி ஆகிய கல்லூரிகள் கூட பிஎஸ்சி கணிதத்துக்கு மாணவர்கள் கிடைக்காமல் திணறி வருகின்றன. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கலை அறிவியல் கல்லூரிகள் பிஎஸ்சி கணிதம் குரூப்பையே தூக்கிவிட்டு, அதற்கு பதிலாக காமர்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய குரூப்களின் கிளைப் படிப்புகளை தொடங்கலாமா? என யோசித்து வருகின்றன.

கணிதப்படிப்பை தவிர்ப்பதால், நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் செயல்திறன் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பிஎஸ்சி கணிதப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 50% குறைந்துள்ளது. அதே நேரத்தில், BCA மற்றும் BSc கணினி அறிவியலுக்கான சேர்க்கை 47% மற்றும் 31% அதிகரித்துள்ளது.

விக்யான் பிரசார் மூத்த விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன் பேசும்போது, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கணிதத்திற்கான தொழில் வாய்ப்புகள் குறித்து அறிந்திருக்கவில்லை. “பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களில் முதல் 30% பேர் பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். இது கணிதம் மட்டுமின்றி, அனைத்து அடிப்படை அறிவியல் படிப்புகளின் சேர்க்கையையும் பாதிக்கிறது. மாணவர்களை கவரும் வகையில், தரவு அறிவியலை சேர்க்க, கணித பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும்,” என்றார்.

Also Read : சென்னையில் இலவச புற்றுநோய் கண்டறிதல் முகாம்! பேட்டர்சன் கேன்சர் சென்டர் ஏற்பாடு!

பிஎஸ்சி கணிதத்தை யாரும் படிக்க முன்வரவில்லை என்றால், பள்ளி – கல்லூரிகளில் கணித ஆசிரியர்களுக்கு பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும். இப்போது மருத்துவம், பொறியியல், ஐஐடி போன்ற மேற்படிப்புகளுக்கும், பல அரசு வேலைகள், வங்கிப் பணிகளுக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயமாகி விட்டது.

இவற்றில் கணிதத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அப்படியிருக்கும் போது, கணித ஆசிரியர்கள் இல்லாமல் போனால் எதிர்கால தலைமுறையினருக்கு வேலை கிடைப்பதே சிரமமாகிவிடும் என்பதோடு, வருங்காலத்தில் தமிழகத்தில் அறிவியலார்களும், விஞ்ஞானிகளும் உருவாவதும் குறையும் என கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry