மதம் மாற கட்டாயப்படுத்தியது உண்மைதான்! அரியலூர் மாணவியின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு! போலீஸில் புகார்!

0
236

தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த தனது மகளை, வார்டன் மதம்மாற வலியுறுத்தியதால்தான் தற்கொலை செய்துகொண்டார் என அரியலூர் மாணவியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது 17 வயது மகள் லாவண்யா, மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பில் படித்து வந்தார். அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி அவர் பள்ளிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 9-ம் மாணவி வாந்தி எடுத்துள்ளார். வயிற்று வலி என்று மாணவி கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் விடுதி நிர்வாகம் சிகிச்சைக்காக சேர்த்துள்ளது. இதுகுறித்து மாணவியின் தந்தைக்கு தெரியப்படுத்தியதும், அவர் மைக்கேல்பட்டி வந்து மகளை அழைத்துச் சென்று விட்டார்.

கடந்த 15-ம் தேதி மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். டாக்டர்களிடம், தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்யவேண்டும் என்று வார்டன் கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலினால் பூச்சி மருந்து குடித்ததாகவும் மாணவி கூறியதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் அளித்தனர். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். விடுதி வார்டன் மதம் மாற வற்புறுத்தியதால்தான் மாணவி பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருக்காட்டுப்பள்ளி காவல்நிலைய போலீஸார், வார்டன் சகாயமேரி என்பவரை கைது செய்தனர்.

இந்நிலையில், மதம் மாற கட்டாயப்படுத்தியதால்தான் தனது மகள் தற்கொலை செய்துகொண்டார் என முருகானந்தம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், “என் மகள் விஷம் குடித்த விஷயமே எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. விஷம் குடித்தது ஏன்? என்று மகளிடம் கேட்டபோது, எங்கள் பள்ளிக்கூடத்தில் என்னை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தினார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அதனால் என்னை கொடுமைப்படுத்தினார்கள். அந்த கொடுமை தாங்க முடியாமல் நான் விஷம் குடித்துவிட்டேன் என்று தெரிவித்தாக கூறியுள்ளார்.

இதையடுத்து தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய முருகானந்தம், தனது மகளை மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தி, அவளது மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா, மாணவி தற்கொலைக்கு மதமாற்ற விவகாரம் காரணமில்லை என்று கூறியுள்ளார். அதனால் முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மதம்மாற வலியுறுத்தியது தொடர்பாக மாணவி சிகிச்சையின்போது பேசிய வீடியோ வைரலாகி வருவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில், மதம் மாறச்சொல்லி வற்புறுத்தியதால்தான் மாணவி தற்கொலைக்கு முயன்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அண்ணாமலை தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் #JusticeforLavanya என்ற ஹேஷ்டேகையும் டிரெண்ட் செய்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry