பிப்ரவரி 1 முதல் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வு! இறுதியாண்டு தேர்வை நேரடியாக நடத்த அரசு முடிவு!

0
153

பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இறுதியாண்டு தேர்வுகள் மட்டும் நேரடி முறையில் நடத்தப்படும் எனறு அவர் கூறியுள்ளார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தினால், செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி அனைத்துக்கும் ஆன்லைன் மூலமாகவே தேர்வு நடைபெறும். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான முறையிலேயே ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும்.


பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என அனைத்திலும் ஆன்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும். ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு பின்னர் கொரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும். பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பின்னர் கொரோனா சூழலை பொறுத்து நேரடி வகுப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.  எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காத வகையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும்.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத்தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும். ஒரு செமஸ்டர் தேர்வில் 4 தாள்கள் எழுத வேண்டி இருந்தால் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அனுப்பலாம்.

ஜூன் மாதத்தில் இறுதி ஆண்டு தேர்வு வரும். அப்போதைய சூழ்நிலை கருத்தில் கொண்டு சுழற்சி முறையிலாவது கடைசி செமஸ்டர் தேர்வு கண்டிப்பாக நடைபெறும். கல்வி தரத்தை கருத்தில் கொண்டு கடைசி செமஸ்டர் தேர்வுகள் மறுசுழற்சி முறையிலாவது அல்லது தேர்வு நடத்தும் நாட்களை தள்ளி வைத்தாவது கண்டிப்பாக நேரடி தேர்வு நடத்தப்படும்.

அதன் பின்னர் கல்லூரி தொடர்ந்து நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். பெற்றோர்களின் மனநிலை மற்றும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த முடிவு எடுக்கப்படும். கல்லூரி முதல்வர், கல்வியாளர்களுடன் ஆலோசித்து பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்”. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry