துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை அறிந்துள்ளார் சசிகலா!  டிடிவி தினகரன் மீது திவாகரன் பகிரங்க குற்றச்சாட்டு!

0
6

சரியான நேரத்தில் போர்க்களத்திலிருந்து பின்வாங்கியதைப் போலத்தான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்ற முடிவை சசிகலா அறிவித்துள்ளார் என அவரது சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை சசிகலா அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான திவாகரன் அளித்துள்ள பேட்டியில், “சசிகலா ஒரு வீராங்கனை. சரியான நேரத்தில் போர்க்களத்திலிருந்து பின்வாங்கியதைப் போல் இந்த முடிவை அறிவித்துள்ளார். துரோகிகள் முதுகில் குத்த உள்ளதை அறிந்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

சசிகலாவின் முடிவை முழு மனதாக வரவேற்கிறேன். துரோகிகள் வெளியில் இல்லை. எங்கள் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள். அவரைச் சுற்றியுள்ள டிடிவி தினகரன் உள்ளிட்டோரால்தான் சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை விட அவருடைய உடல் நலனே முக்கியம்.

டிடிலி தினகரன் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டதும், அமமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக வரவேண்டும் என்று தினகரன் தெரிவித்ததும் சிறுபிள்ளைத் தனமானது. சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தினகரன் பேசியது இணைப்பு முயற்சியில் ஈடுபட்ட அதிமுகவினரின் கோபத்தை அதிகரித்திருக்கும். இது கூட சசிகலாவின் அறிவிப்பிற்கு காரணமாக இருக்கலாம். சசிகலா அவர்களின் விருப்பப்படி அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். இதுவே எனது விருப்பமும்என்று கூறியுள்ளார்.

இதனிடையே, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாதீவிர அரசியலில் ஈடுபடுவேன். தொண்டர்களை சந்திப்பேன். அன்புக்கு அடிபணிவேன். அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்என கூக்குரலிட்டார். இதனால், அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூடபெங்களூரில் இருந்து ஒருவர் கிளம்பிவிட்டார்என்றார்.

சசிகலா வருகையில் அதிமுக கூட்டணி பாதிக்கும் என பயந்த பாஜக, அதிமுகவுடன் சசிகலா இணைப்பை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக பேச்சு எழுந்தது. ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இதன்பின்னர்தான் சசிகலாவை ஒதுங்கிக்கொள்ளுமாறு பாஜக வலியுறுத்தியதாக யூகம் எழுந்துள்ளது. இதனையடுத்து, சசிகலா வெளியிட்ட அறிக்கையில், பொது வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய விரும்புகிறேன் என்றும், ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சசிகலா திடீரென பின்வாங்க என்ன காரணம் என அனைவரது மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், சசிகலா மீது இன்னும் பல வழக்குகள் மத்திய அரசின் கைவசம் உள்ளன. அதனால் அரசியலில் இருந்து பலரது பகையையும், தோல்வியையும் சம்பாதிப்பதை விட கௌரவமாக ஒதுங்கிக் கொண்டால், ஜெயலலிதா வழிநடத்திய கட்சி தன்னால் தோற்றது என்ற அவப்பெயர் ஏற்படாது என்பதால் சசிலா விலகியிருக்கலாம் என தெரிவிக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry