இந்தியாவிலும் பரவத் தொடங்கியது ஒமைக்ரான் வைரஸ்! பெங்களூருவில் இருவருக்கு தொற்று உறுதியானது! மேலும் ஐவருக்கு அறிகுறி!

0
41

தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலகளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் தொற்றி உறுதி செய்யப்பட்டது. இதுவரை ஒமைக்ரான் வைரஸ் 29 நாடுகளுக்கு பரவிவிட்டதாகவும், பரவல் மேலும் அதிகரிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில், ஒமைக்ரான் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், தீவிரத்தன்மை அதிகம் கொண்டதாகவும் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவில், ஒமைக்ரான் தொற்று பாதித்த பெரும்பாலானோர் 40 வயதுக்கும் குறைவான ஆண்களாகவும், அதில் பாதிக்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் ருந்து வருவோருக்கு பல்வேறு நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவிலும் எச்சரிக்கைப் பட்டியல் என அழைக்கப்படும் ஒமைக்ரான் பாதிப்பு நாடுகளில் இருந்து வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த 6 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். அதற்குள் கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் டெல்டா வகை வைரஸின் பாதிப்பு குறைந்துவந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், “கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருவருமே வெளிநாட்டவர்கள். இந்தியாவின் இன்சாக்கோ எனப்படும் சார்ஸ் மரபணு பரிசோதனை ஆய்வகத்தில் அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுஒருவருக்கு வயது 66, மற்றொருவருக்கு 46. இருவருக்குமே லேசான அறிகுறிகள்தான் காணப்படுகிறது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த முதல்நிலை தொடர்பாளர்கள், 2-ம் நிலை தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். யாரும் அச்சப்படத் தேவையில்லை. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி வந்தாலே போதுமானது. கூட்டாகச் செல்வதையும், கூட்டமான இடங்களுக்குச் செல்வதையும் தவிர்த்துவிடுங்கள். இதற்கு முன் அறியப்பட்ட கொரோனா வகை வைரஸ்களைவிட, ஒமைக்ரான் 5 மடங்கு வீரியமானது, பெரும் பாதிப்பைத் தரக்கூடியது. இதுவரை 29 நாடுகளில், 373 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஒமிக்ரான் தொற்றியுள்ள இருவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 5 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியானது. அது, ஒமிக்ரான் வகையை சேர்ந்ததா? என்பது பரிசோதிக்கப்படுகிறது.

இதனிடையே ஒமிக்ரான் ஏன் கவலை தரக்கூடியது என கோவிட் டாஸ்க் ஃபோர்ஸ் இயக்குநர் டாக்டர் பவித்ரா வெங்கடகோபாலன் விளக்கம் அளித்துள்ளார். “ஒமிக்ரான் வைரஸ், நடப்பில் உள்ள கோவிட் ஒழிப்பு திட்ட வரைமுறையையே மாற்றிவிடும். கொரோனாவின் மற்ற வகை வைரஸ்களைவிட இது வேகமாகப் பரவும். இதன் பரவும் தன்மை இன்னமும் சரியாக கண்டறியப்படவில்லை. திடீரென தொற்று எண்ணிக்கை அதிகரிக்கலாம். டெல்டாவோடு ஒப்பிடுகையில், தொற்று அறிகுறி லேசானாதாகவே இருக்கும். அதீத அயர்ச்சி, லேசான தசை வலி, தொண்ட கரகரப்பு போன்றவையே ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களிடம் தென்படுகிறது. வழக்கமான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிக மிக அவசியம்என்று கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*