3.45 Minutes Read : மூத்த அரசியலாளரும், மூத்த வழக்கறிஞருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் தன வலைதளப் பக்கத்தில்(Blogger) இதுகுறித்து விரிவாகப் பதிவிட்டுள்ளார். அந்தக் கட்டுரையை சற்றே சுருக்கமாகப் பதிவிடுகிறோம். அதில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புதல்வர், அமைச்சர் உதயநிதி யாரோ தவறாக எழுதிக்கொடுத்ததை வைத்துக்கொண்டு, புரிதல், அறிதல் இல்லாமல் தோல்சீலைப் போராட்டம், பெண்கல்வி, ஆலயப்பிரவேச சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது எல்லாம் ‘தங்களின்’ (இவர் பாடுபட்ட) திராவிட இயக்கத்தில் எனப் பிழையாகக் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். பனையேறி நாடார், நாயர், ஈழவர், புலையர் உள்பட 18 சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 1921 கால கட்டத்தில், உயர் சாதிப் பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய உத்தரவு வந்தது. படிபடியாக இந்த அவமான தடைகள் விலக்கப்பட்டன. இதில் திராவிட இயக்கத்தின் பங்கு இல்லை.
சென்னை மாகாண ஆலயப்பிரவேச சட்ட மசோதா 1939 ஜூலை11ல் நிறைவேற்றப்பட்டது. இது அனைத்து சமுதாயத்தினரும் ஆலயங்களில் சமுதாய வேறுபாடு இன்றி நுழைந்து வழிபட வழிவகை செய்தது. ஆலயப்பிரவேச சட்டம் இயற்றப்படுவதற்கும் முன்னரே, காந்தியவாதி ஏ.வைத்தியநாத ஐயர் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேசத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைய விடாமல் தாழ்த்தப்பட்டிருந்த சமூகத்தினருடன், 1939 ஜுலை 08 ஆம் தேதி கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்தார்.
இதன் காரணமாக சிலர் உருவாக்கிய பிரச்சனைகளையும் நீதிமன்ற வழக்குகளையும் இவர் எதிர்கொண்ட சமயம், அப்போதைய முதல்வர் இராஜாஜி, ஆலய பிரவேச சட்டத்தை அவசர சட்டமாக கவர்னர் பிரகடனம் செய்ய வழிவகை செய்தார். காந்தியடிகள் இவரைப் பாராட்டி 22-7-1939 அன்று அரிஜன் இதழில் எழுதினார். ஆலயப் பிரவேச சமயம், தியாகி தாயம்மாள் தம் வீட்டில் தாழ்த்தப்பட்டிருந்த மக்களைத் தங்க வைத்து, காலை உணவு வழங்கினார். அதன் காரணமாக அவரது உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட ஹரிஜன முன்னேற்ற வேலைகளுக்குத் தலைமை ஏற்குமாறு மதுரை ஏ. வைத்தியநாத அய்யரை காந்தியடிகள் கேட்டுக்கொண்டார். காந்தியடிகளின் வேண்டுகோளைச் சிரமேற்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவரும் பாடுபடலானார். வழக்கறிஞர் தொழில் மூலம் கிடைத்த வருமானம் அனைத்தையும் ஹரிஜன மக்கள் முன்னேற்றத்துக்காக செலவு செய்தார்.
1934-ல் ஹரிஜன நல நிதி திரட்டுவதற்காக காந்தியடிகள் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொண்டபோது, அதிகப்படியான நிதி வசூல் கிடைப்பதற்குப் பாடுபட்டார். தீண்டாமை ஒழிப்புப் பணியில் அய்யருக்கு ஆசானாக விளங்கியவர் ராஜாஜி. அன்றைய ஒடுக்கப்பட்ட மக்களின் ஆளுமை, காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்த ஜெ.சிவசண்முகம் பிள்ளை( தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை தலைவர்) முதல்வர்கள் ஓமந்தூரர், பி. கே.குமாரசாமி ராஜா, காமராசர், கக்கன், கல்கி, அமைச்சர் பரமேஸ்வரன் என பலர் இந்த விடயத்தில் மானசீகமாக இயங்கினர் என்பதே வரலாறு.
அதாவது, இதன் முன்பு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் சி.பி.ராமசாமி அய்யரின் தலைமையிலான ஒரு ஆய்வுக் குழுவின் பரிந்துரையின்பேரில், அப்போதைய மன்னர் சித்திரைத் திருநாள் என்ற பலராம வர்மா தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த சுமார் 2,000-த்துக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களை 1936 நவம்பர் 12-ம் நாள் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்துவிட ஆணையிட்டார்.
இதனூடே, வேத காலத்தில் பெரும்பாலான பெண்கள் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் இல்லாமல் கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். இக்காலத்தில் பெண் அறிஞர்களும் இருந்தனர். இக்காலக் கல்வியாளர்கள் பெண்களை பிரம்மவாதிகள் மற்றும் சத்யோத்வஹாக்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். பிரம்மவாதிகள், தத்துவம் மற்றும் இறையியலின் வாழ்நாள் மாணவர்கள். சத்யோத்வஹாக்கள் திருமணம் ஆகும் வரை படிப்பைத் தொடர்ந்தனர். அபலா, கோஷா, விஸ்வவரா, சுலபா மைத்ரேயி மற்றும் கார்கி போன்ற பல பெண் கவிஞர்கள் மற்றும் தத்துவவாதிகள் அப்போது இருந்துள்ளனர்.
பெண்களுக்கான முதல் உறைவிடப் பள்ளி 1821இல் திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது. 1840இல் ஸ்காட்டிஷ் சர்ச் சொசைட்டி 200 இந்துப் பெண்களைக் கொண்ட ஆறு பள்ளிகளைக் கட்டியது. நூற்றாண்டின் மத்தியில் இருந்தபோது, மெட்ராஸில் உள்ள மிஷனரிகள் அதன் பதாகையின் கீழ், 8,000 பெண்களைச் சேர்த்துக் கொண்டனர். 1854இல் பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி, கிழக்கிந்தியக் கம்பெனியின் திட்டமான வூட்ஸ் டிஸ்பாட்ச் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. மெதுவாக, அதன் பிறகு, பெண் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்தியாவில் நவீனக் கல்வியை நோக்கி ஆங்கிலேய அரசு எடுத்த முதல் படி 1813 சாசனச் சட்டம் ஆகும் . இந்தக் காலகட்டத்தில், கிறிஸ்டியன் மிஷனரிகள் கல்வியில் தீவிரமாக இருந்தனர். இருப்பினும், அவர்கள் மதமாற்றங்கள் மற்றும் மத போதனைகளில் முதன்மையாக கவனம் செலுத்தினர்.
ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு புதிய மேற்கத்தியக் கல்வி முறை உருவாக்கப்பட்டது. மெக்காலேயின் திட்டங்கள் அல்லது ஆங்கிலக் கல்விச் சட்டம் 1835, பின்வரும் சாராம்சங்களைக் கொண்டதாக இருந்தது:- இந்தச் சட்டத்தின்படி, இலக்கியம் மற்றும் நவீன அறிவியலை ஆங்கிலத்தில் மட்டுமே கற்பிப்பதற்கான ஆதாரங்களைச் செலவிடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி ஊடகம் ஆங்கிலமாக இருக்க வேண்டும். தொடக்க நிலைப் பள்ளிகள் குறிப்பிடத்தக்கதாக இல்லை. மாவட்டப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க வேண்டும்’ இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.
கல்கத்தா மருத்துவக் கல்லூரியும், பம்பாய் எல்பின்ஸ்டோன் கல்லூரியும், 1835 இல் நிறுவப்பட்டன. 1843-53 – ஒரு பரிசோதனையாக, ஜேம்ஸ் ஜொனாதன் வடமேற்கு மாகாணத்தின் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு மாதிரிப் பள்ளியை அறிமுகப்படுத்தினார். பெண்கள் கல்வி கற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பம்பாய், கல்கத்தா மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் 1857 இல் நிறுவப்பட்டது. பஞ்சாப் பல்கலைக்கழகம் 1882 இல் நிறுவப்பட்டது, அலகாபாத் பல்கலைக்கழகம் 1887 இல் நிறுவப்பட்டது. 1857க்குப் பிறகு, 1868 மற்றும் 1875 இல் முறையே கத்தியவாரின் ராஜ்கோட் கல்லூரி மற்றும் அஜ்மீரின் மாயோ கல்லூரி நிறுவப்பட்டது.
1904ஆம் ஆண்டின் இந்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இதில், பல்கலைக்கழகங்களில் புரட்சிகர நடவடிக்கைகளுக்குப் பதிலாக ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 1906இல் பரோடா சமஸ்தானத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் கட்டாய ஆரம்பக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
1916-21 – உஸ்மானியா, லக்னோ, டாக்கா, அலிகார், பெனாரஸ், பாட்னா மற்றும் மைசூர் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டன. 1929ஆம் ஆண்டில் ஹார்டாக் குழு அமைக்கப்பட்டது, இது பிரிட்டிஷ் இந்தியாவில் ஆரம்பக் கல்வியை மையமாகக் கொண்டது மற்றும் கட்டாயக் கல்வி முறை தேவையில்லை என்று நம்பியது.
1937இல், இந்திய தேசிய காங்கிரஸ், வார்தாவில் கல்வி பற்றி விவாதிக்க ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தது. இது நடைமுறைக் கல்வியை மையமாகக் கொண்ட ஒரு திட்டத்தை உருவாக்கியது, அதாவது காந்தியின் கருத்துகளின் அடிப்படையில் செயல்பாடுகள் மூலம் கற்றல். இருப்பினும், இது செயல்படுத்தப்படவில்லை .
1944 ஆம் ஆண்டில், மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுவின் சார்ஜென்ட் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில்,
- 3 முதல் 6 வயது வரையிலான மாணவர்களுக்கு இலவசக் கல்வி.
- 6 முதல் 11 ஆண்டுகள் வரை மாணவர்களுக்கு கட்டாயக் கல்வி.
- 11 முதல் 17 வயது வரையிலான ஒரு மாணவருக்கு உயர்கல்வி.
- கலை, வணிக மற்றும் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்துவதில் கவனம்.
- உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்பிக்க வலியுறுத்தல், ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இவ்வாறு, தோல் சீலைப் போராட்டம், தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவு, பெண் கல்வி போன்ற எதிலும் திராவிட இயக்கத்தின் பங்கு இல்லை என்பதை கே.எஸ். ராதாகிருஷ்ணன் விளக்கமாகக் கூறியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சிக்காரர்களின் பதில்என்ன? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.
கட்டுரையை முழுவதுமாகப் படிக்க : https://ksradhakrish.blogspot.com/2023/09/blog-post_9.html
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry