விரும்பிய கல்லூரியில் சேர்ந்து கல்வியைப் பெற இயலாதவர்களின் குறையைப் போக்கும் வகையில், தன்னாட்சிக் கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் வசதியை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்திருக்கிறது.
கொரோனா நோய் தொற்றின் இரண்டாண்டுக் காலத்தில், மாணவ மாணவியருக்கான கல்வி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. இந்தக் கல்விமுறை மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் விரும்பிய கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வியைத் தொடர முடியாத நிலைக்கும் பலர் தள்ளப்பட்டனர்.
இப்படிப்பட்டவர்களின் குறையைப் போக்கும் வகையில், தன்னாட்சிக் கல்லூரிகளிலும் ஆன் லைன் மூலம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கலாம் என்ற புதிய கல்வி வசதியை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு பரிசீலித்து வருகிறது. பல்கலைக்கழகங்கள் மட்டுமே தற்போது தொலைதூரக் கல்வி வசதியை அளித்து வரும் நிலையில், இந்தியாவில் தன்னாட்சிப் பெற்ற 900 கல்லூரிகளிலும் பல்கலைக்கழக மானியக் குழு இந்த வசதியை விரிவுபடுத்தவுள்ளது.
இளநிலை பட்டப்படிப்பை பயில விரும்புபவர்களுக்கு +2 தேர்ச்சியும், பட்ட மேற்படிப்பை பயில விரும்புபவர்களுக்கு பட்டப்படிப்பு தேர்ச்சியும் தகுதியாகக் கருதப்படுகிறது. ஆன்லைன் கல்வியில் மாணவர்களுக்கு கணினி வழியாகத் தேர்வுகள் நடத்தப்படும். இணைய வழியாகவே தேசிய தேர்வு முகமை மதிப்பீடு செய்யும். கல்லூரியில் நேரடியாகச் சென்று படிக்கும் படிப்பிற்கு இணையான தகுதியை, ஆன்லைனில் பயிலும் கல்விக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் கல்வியை வழங்க தன்னாட்சிக் கல்லூரிகள், பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. ஆன்லைன் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு, அடுத்த மாதம் வெளியிட உள்ளது. இதைப் பின்பற்றினாலே போதுமானது. இந்தத் திட்டம் வரும் கல்வியாண்டில் நடைமுறைக்கு வரலாம்.
இந்த முடிவானது, தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) முன்மொழிந்தபடி உள்ளது. ஆன்லைன் பட்டப் படிப்புகள் மூலம், மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொலைதூர பட்டங்களைப் பெற முடியும். வழக்கமான பட்டப்படிப்புகளைப் போலவே ஆன்லைன் பட்டப்படிப்புத் திட்டங்களிலும் மாணவர்கள் குறைந்தபட்சம் 75% வருகையைப் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நோக்கில் இந்த ஆன்லைன் பட்டப்படிப்புத் திட்டம் அறிமுகமாகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry