அதிகார தீண்டாமையை கடைபிடிக்கும் அறிவாலயம்! புறக்கணிக்கப்படும் பட்டியல் வகுப்பினர்!

0
95

திமுகவின் 71 ஆண்டு கால வரலாற்றில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகள் இதுவரை ஒரு முறை கூட பட்டியல் வகுப்பினருக்கு வழங்கப்படவில்லை. ஆ.ராசா பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு இருப்பது அக்கட்சியின் சமூக நீதி கொள்கையை கேள்வி எழுப்புகிறது.

கடந்த 1949-ல் திமுக.வை அண்ணா தொடங்கிய போது முன்னணி தலைவர்களாக இருந்தவர்களில் ஒருவர் சத்தியவாணி முத்து. பட்டியல் வகுப்பினரான அவர், கட்சிக்காக கர்ப்பிணியாக இருந்த போதும் சிறை கொட்டடியை அனுபவித்தவர். அதனால் கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராகவும், ஆட்சியில் அமைச்சராகவும் உயர்ந்தார். அண்ணாவுக்கு பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் புறக்கணிக்கப்பட்ட சத்தியவாணி முத்து, `தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம்’ என்ற தனிக்கட்சியை தொடங்கினார். பின்னர் அதிமுக.வில் இணைந்தார். அவருக்கு எம்ஜிஆர் மத்திய அமைச்சர் பதவி வழங்கினார்.

கடந்த 1959 சென்னை மாநாகராட்சி தேர்தலில்தான் திமுக.வுக்கு அரசியலில் முதல் வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியை பெற்று தந்தவர்கள் ஒருங்கிணைந்த சென்னையின் மாவட்ட செயலாளர்களாக இருந்த ஏ.கே.சாமியும், இளம்பரிதியும். இருவரும் பட்டியல் வகுப்பை சேர்ந்த செல்வாக்கான தலைவர்கள். இந்த வெற்றி தந்த தன்னம்பிக்கையிலே அண்ணா, `ரிப்பன் கோட்டையை கைப்பற்றி விட்டோம். இன்னும் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஜார்ஜ் கோட்டையையும் கைப்பற்றுவோம்” என்றார்.

பட்டியல் வகுப்பினர் திமுக.வை ஆதரித்ததால் 1980-களில் தமிழகம் முழுவதும் வெல்ல முடிந்த எம்ஜிஆரால் சென்னையில் மட்டும் அவரால் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. சென்னையில் திமுக.வின் தளபதிகளாக இருந்த ஏ.கே.சாமி, இளம்பரிதி, வை.பாலசுந்தரம் போன்ற ‌பட்டியல் வகுப்பினர் ஓரங்கட்டப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினர். அதன் பிறகே சென்னையில் திமுக தோல்வியை தழுவ தொடங்கியது.

குறிஞ்சிப்பாடி ராஜாங்கம், ஓ.பி.ராமன், டாக்டர் ராமகிருஷ்ணன் போன்ற பட்டியல் வகுப்பு தலைவர்களால் ஆட்சியில் அமைச்சர் பதவி பெற முடிந்தாலும், கட்சியில் பெரிய பொறுப்புக்கு வர முடியவில்லை. பொள்ளாச்சி பொதுத் தொகுதியில் வென்ற சி.டி.தண்டபாணி, முரசொலி மாறனை விட டெல்லியில் செல்வாக்காக இருந்தார். நாடாளுமன்ற துணைக் குழு தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த அவர், முரசொலி மாறனுக்காக பலி கொடுக்கப்பட்டார்.

கடந்த 1980-களில் திமுக இளைஞர் அணியை கட்டமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பரிதி இளம்வழுதி. பட்டியல் வகுப்பை சேர்ந்த அவர், மு.க.ஸ்டாலினுக்கு வலதுகரமாக செயல்பட்டு, 6 முறை எம்எல்ஏ.வாக வெற்றிப் பெற்றார். ஆட்சியில் அமைச்சர் பதவியை பெற முடிந்த அவரால் கட்சியில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பை மட்டுமே அடைய முடிந்தது. ஒரு கட்டத்தில் திமுக.வில் ஒதுக்கப்பட்டதால் பரிதி இளம்வழுதியும் கட்சியில் இருந்து விலகி, அதிமுக.வில் இணைந்தார்.

இதனால் பரிதி இளம்வழுதி வகித்த துணை பொதுச் செயலாளர் பதவி, மற்றொரு பட்டியல் வகுப்பில் அருந்ததியர் பிரிவை சேர்ந்த வி.பி.துரைசாமிக்கு வழங்கப்பட்டது. திமுக.வில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம் சாட்டிய வி.பி.துரைசாமி, 2-வது முறையாக அக்கட்சியில் இருந்து விலகினார். பாஜக.வில் இணைந்த அவருக்கு உடனடியாக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பேசி ஆட்சியைப் பிடித்த திமுக.வில் பட்டியல் வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. பிரதான பதவிகளில் தொடங்கி மாவட்ட செயலாளர், நகர செயலாளர் பதவி வரை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 65 மாவட்ட செயலாளர்களைக் கொண்ட அக்கட்சியில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒரே ஒருவருக்கு மட்டுமே அந்த பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

திமுக.வில் பட்டியல் வகுப்பினர் புறக்கணிக்கப்படும் அதே வேளையில், எம்ஜிஆர் அதிமுக.வை தொடங்கியவுடன் அவ்வகுப்பை சேர்ந்த எஸ்.எம்.துரைராஜூக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து சௌந்தர பாண்டியன் என்பவருக்கு பொருளாளர் பதவியும், தொழில்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. பட்டியல் வகுப்பை சேர்ந்த டாக்டர் வேணு கோபாலுக்கு, ஜெயலலிதா நாடாளுமன்ற குழு தலைவர் பதவியை வழங்கினார். சாதி பாகுபாட்டுக்கு ஆளான தனபாலுக்கு சட்டப்பேரவைத் தலைவர் பதவியும், உணவுத் துறை அமைச்சர் பதவியும் வழங்கினார். ஏ.எஸ்.பொன்னம்மா, செ.கு.தமிழரசன் ஆகிய பட்டியல் வகுப்பினரை தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராகவும் நியமித்தார்.

அதே போல காங்கிரஸில் பட்டியல் வகுப்பை சேர்ந்த மரகதம் சந்திரசேகருக்கு நேரு அமைச்சரவையிலும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் என்ற பெரும் பதவியும் வழங்கப்பட்டது. முனுசாமி பிள்ளை, கக்கன், டி.ஆர்.பரமேஷ்வரன், ஜோதி வெங்கடாசலம் போன்றவர்களுக்கு முறையே உள்ளாட்சித் துறை, உள்துறை, இந்து அறநிலையத் துறை, சுகாதாரத் துறை வழங்கப்பட்டது. ஜோதி வெங்கடாசலத்துக்கு கேரள மாநில ஆளுநர் பதவி கூட வழங்கப்பட்டது. பட்டியல் வகுப்பை சேர்ந்த இளையபெருமாள் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதோடு, தேசிய ஆணையத்தின் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இன்னொரு தேசிய கட்சியான பாஜக.வும் பட்டியல் வகுப்பை சேர்ந்த டாக்டர் கிருபாநிதியை 2000-ம் ஆண்டு மாநிலத் தலைவராக நியமித்தது. கடந்த மார்ச் மாதம் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச்சில் எல்.முருகன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக.வினரால் பிற்போக்கான கட்சியாக சொல்லப்படும் பாஜக.வில் எவ்வித பின்புலமும் இல்லாத முருகனால் தலைவராக முடிகிறது. முற்போக்கான கட்சியாக சொல்லப்படும் திமுக.வில் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர், எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் பிரதான பதவிக்கு வர முடியாதது ஏன்?

திமுக.வில் பிற வகுப்பினர் தாக்குப் பிடித்து பிரதான பதவியை பிடிக்க முடிகிறது. ஆனால் பட்டியல் வகுப்பினர் சத்தியவாணி முத்துவில் தொடங்கி வி.பி.துரைசாமி வரை அக்கட்சியில் தாக்குப் பிடிக்க முடியாமல், தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றனர். ஒரு காலத்தில் பட்டியல் வகுப்பினரின் கட்சி என அழைக்கப்பட்ட திமுக.வில், இன்று அவ்வகுப்பினர் இல்லாத கட்சியாக மாறி இருக்கிறது. சமூக நீதி, சாதி ஒழிப்பு பேசி, பெரியாரின் பெயரை மேடைதோறும் உச்சரிக்கும் திமுக, அதனை கட்சியில் கடைப்பிடித்து, 20 சதவீத மக்கள் தொகை கொண்ட பட்டியல் வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்குமா?

நன்றி : இந்து தமிழ் திசை

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry