ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “29/8/2023 அன்று பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில், எண்ணும் எழுத்தும் திட்டத்தை மூன்றாவது நபர் மதிப்பீடுக்கு பி.எட்., மாணவர்களின் பங்கேற்பினை நிறுத்திக் கொள்வதாக SCERT இயக்குநர் அலைபேசி வழியாக அறிவித்து ஒப்புதல் அளித்தார்.
பின்னர் 07.09.2023 முதல் முதுகலை ஆசிரியர்களுடன், பி.எட்., பயிற்சி மாணவர்களைப் பிடிவாதமாக பள்ளிகளுக்கு அனுப்பி மதிப்பீடு செய்வதில் SCERT இயக்குநர் தீவிரம் காட்டி வருகிறார். எண்ணும் எழுத்தும் திட்டத்தினை ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை மதிப்பீடு செய்வதற்கு, இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி முடித்து, 20-30 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தல் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் நடத்திவரும் வகுப்பினை, பி.எட்., பயின்று வரும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களைக் கொண்டு மூன்றாம் நபர் மதிப்பீடு செய்வதை டிட்டோஜாக் ஆசிரியர் இயக்கங்கள் கைவிட வலியுறுத்தின.
SCERT இயக்குநரின் செயல்பாடுகள், எண்ணும் எழுத்தும் திட்டத்தினை விளம்பரத் திட்டமாக மாற்றியமைத்துக் கொண்டு, அன்றாடம் ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தித்தரும் உள்நோக்கமுடையதாகவும், தேவையற்றதாகவும் உள்ளன. SCERT இயக்குநரின் தொடர் ஆசிரியர் விரோதப் போக்கு, மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கும் வண்ணம் செயல் திட்டங்களை வடிவெடுக்கும் வகையில் இருக்கிறது.
தொடர் பயிற்சி வகுப்புகள், தொடர் கருத்தாளர்கள் நியமனம், இலை – தழைகளை கட்ட வைத்து ஆதிவாசிகள் நடனத்தை ஆசிரியர்களை ஆட வைத்துப் பார்த்தல் என இதுபோன்ற செயல்பாடுகள், SCERT இயக்குநர், பள்ளிக்கல்வித்துறையில் தன்னாட்சி நிர்வாக மையத்தினை தன் முனைப்பு செயல்பாடுகளுடன் நடத்தி வருவதையே காட்டுகிறது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலாளரும், SCERT இயக்குநர் மீது அவசர நடவடிக்கையினை மேற்கொண்டு தீர்வு காண வேணுமாய், பெரிதும் உள்ள குமுறலுடன் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். போர்க் குணமிக்க தொடக்கக் கல்வி ஆசிரியர்களை, பி.எட்., மாணவர்களை வைத்து மதிப்பீடு செய்து, ஆசிரியர் பணியினை தோற்றமிழக்கச் செய்யும் செயலைக் கண்டித்தும், எமிஸ் இணையதள மன உளைச்சலில் இருந்து விடுதலை அளிக்க வலியுறுத்தியும், 11.09.2023 அன்று மாலை 5:30 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள். அதனை வரவேற்று, பாராட்டுகிறோம்..!
இயக்கத்தின் ரத்த நாளங்கள், தொப்புள்கொடி உறவுகள், நம் மீது நம்பிக்கை கொண்டு இயக்கப் பாசறை குடும்பத்தில் நம்முடன் இருந்து வருபவர்கள். அன்றாடம் எமிஸ், மன உளைச்சலைத் தரும் எண்ணும் எழுத்தும் திட்டம், தேவையற்ற பயிற்சி வகுப்புகள், தொடர் கருத்தாளர்கள் நியமனம் என மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவர்கள் கலங்கி நிற்பதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது.
அவர்களுக்கு விடுதலையினை பெற்றுத் தரும் வரை நமது உரிமைக்குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கட்டும்..! டிட்டோஜாக் வீதிக்கு வந்து வெறுங்கையுடன் திரும்பிப் போனதாக சரித்திரம் இல்லை. மீண்டும் வரலாறு படைப்போம்..! அச்சம் என்பதை அறவே அப்புறப்படுத்திவிட்டு எடுத்த முடிவினை பாதுகாப்பதில் உறுதியுடன் நிற்போம்..!
பொறுத்தது போதும்..! பொங்கி எழுந்து, பிரச்சனைக்குத் தீர்வு காணும் வரை வீதியில் நின்று உரிமைக்குரல் ஓங்கி ஒலித்திட, 11/9/2023 மாலை 5:30 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடும் டிட்டோஜாக் முடிவினை மீண்டும் ஒருமுறை வரவேற்றுப் பாராட்டுகிறோம்..! விடிவு வரும் வரை வீதியில் நின்று போராடுவோம்..! 50 ஆண்டுகால போராட்ட அனுபவங்கள் உற்றத் துணையாக உங்களுடன் இணைந்து நின்று வழி காட்டட்டும்..!” இவ்வாறு வா. அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry