வைகோ போன்ற துரோகிகளை இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் திமுக கூட்டணியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப் 27) நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றால் எங்கள் செயலுக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று அர்த்தம். அதிமுக ஜெயித்துவிட்டால் 100 நாட்களில் திமுகவின் சாயம் போய்விட்டது என்று அவர்கள் புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
ஒரு பதவியை 20 பேர் கேட்கிறார்கள். அதில் ஒருத்தருக்குதான் வாய்ப்பு கொடுக்க முடியும். வாய்ப்பு கிடைக்காத மற்றவர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கும்.. கட்சியின் பொதுச்செயலாளர், சட்டமன்றத் தலைவர் என்ற முறையில் அவர்களுக்கெல்லாம் ஓர் உறுதியைத் தருகின்றேன். தேர்தல் ரிசல்ட் வந்த 3-வது நாள் அனைத்து சொசைட்டிகளும் கலைக்கப்படும், யாருக்கெல்லாம் சீட் விட்டுப்போனதோ அவர்களுக்கெல்லாம் சொசைட்டிகளிலும், வாரியங்களிலும் உரிய பதவிகள் தரப்படும்.
கட்சிக்குத் துரோகம் செய்கிறவர்கள் எவ்வளவுப் பெரிய ஆளாக இருந்தாலும், இந்த துரைமுருகன் நினைத்தால் 24 மணி நேரத்தில் கட்டம் கட்டிவிடுவான். எத்தனை காலத்துக்குதான் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம், அதன்பின் எம்.ஜி.ஆரைப் பார்த்தோம், பிறகு கோபால்சாமியை(வைகோ) பார்த்துள்ளோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம்.
வேட்பாளரின் முகத்தை உற்றுப் பார்த்தால், அவர் முகத்தில் தளபதியின் முகம் தெரியும், கலைஞருடைய முகம் தெரியும், அண்ணாவின் முகம் தெரியும், எனவே நீங்கள் அனைவருமே ஒற்றுமையோடு இருந்து தேர்தலில் பணியாற்ற வேண்டுமென துரை முருகன் கூறினார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry