அரசியல்வாதி | சுதந்திரப் போராளி | இலக்கியவாதி – ‘கல்கி’ ; மயிலாடுதுறை முதல் மணிரத்னம் படம் வரை, ஒரு குறும்பார்வை

0
116

கல்கி என்றதும் நினைவுக்கு வருவது கிருஷ்ணமூர்த்தி அடுத்து சதாசிவம். இவர்கள்தான் கல்கி இதழை தொடங்கினார்கள். இவர்களில் இரா. கிருஷ்ணமூர்த்தி, கல்கி என்றே அழைக்கப்படலானார்.  கல்கி என்கிற அந்தப் போராளியின் 66-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

யார் இந்த கல்கி?

கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கல்கி என்பவர் யார் என்றே தெரியாது. மயிலாடுதுறை அருகே பட்டமங்களம் எனும் ஊரில் பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவர், ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்தார். பின்னர் திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை துவங்கிய போது, பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்துவிட்டு இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மூன்று முறை சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் நவசக்தி இதழின் துணை ஆசிரியராக தனது பத்திரிகைப் பணியை துவங்கினார். 1941-ல் கல்கி வார இதழைத் தொடங்கினார். அதுமுதல் கிருஷ்ணமூர்த்தி, கல்கியாக அறியப்பட்டார்.

என்ன செய்தார் கல்கி?

பேச்சு, எழுத்து, தனிப்பட்ட வாழ்க்கை என மூன்றிலும் நகைச்சுவையில் ஊறித் திளைத்தவர் கல்கி. எதை எழுதினாலும் நகைச்சுவையைக் கலக்காமல் கல்கியால் எழுதவே முடியாது. சூழலுக்கு ஏற்றவாறு நகைச்சுவை கலந்து பேசுவது என்றால் அனைவருக்கும் கருணாநிதிதான் நினைவுக்கு வருவார். ஆனால், அவருக்கு முன்னோடி கல்கி. தனது எழுத்தின் மூலம் தென்னிந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர். தெலுங்கு கீர்த்தனைகளின் ஆத்திக்கத்துக்கு இடையே, தமிழிசையை பெரிய அளவில் கொண்டு சேர்க்க, சதாசிவம், எம்.எஸ். சுப்புலட்சமி ஆகியோருடன் இணைந்து அவர் பாடுபட்டார். பத்திரிகையாளர், சமூகப்போராளி, கவிஞர், இசை விமர்சகர், நாடக எழுத்தாளர் என பலதுறைகளில் மிளிர்ந்தவர். காந்தியின் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சார எழுத்தாளர் என்றே அறியப்பட அவர் விரும்பினார்.

கள்வனின் காதலி, தியாகபூமி, மகுடபதி, அபலையின் கண்ணீர், அலை ஓசை, தேவகியின் கணவன், மோகினித்தீவு, பொய்மான் கரடு, புன்னைவனத்துப் புலி, அமரதாரா ஆகிய புதினங்களை கல்வி எழுதியுள்ளார். பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் ஆகிய 3 வரலாற்றுப் புதினங்களும் காலம்கடந்து போற்றப்படுபவை

இதில், சோழர்களை அடிப்படையாக வைத்து எழுதப்ட்ட பொன்னியின் செல்வனைத் தான் மணி ரத்னம் திரைப்படமாக எடுத்துவருகிறார். 70-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் கல்கி எழுதியுள்ளார். அலை ஓசை புதினத்துக்காக 1956-ம் ஆண்டு கல்கிக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. அதேபோல், சங்கீத கலாசிகாமணி என்ற விருதையும் அவர் பெற்றுள்ளார். ‘My Experiments with Truth’ என்ற மகாத்மா காந்தியின் சுயசரிதையை கல்கி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

நோய்த் தாக்கத்திலும் நகைச்சுவை

நோய் பீடித்திருந்தபோதும் அதைப்போற்றாமல், நகைச்சுவை உணர்வோடு இருந்தவர் கல்கி. மருத்துவமனையில் பரிசோதனை அறையிலிருந்து உறுதியான நடையுடன் வெளியே வந்தவரிடம், டாக்டர் என்ன சொன்னார் என கேட்கிறார்கள். அதற்குஉடலில் ஒன்றுமில்லை என்கிறார்கள்என்றார். அப்பாடா சந்தோஷம் என குடும்பத்தினர் மகிழ, ‘அதுதானே இப்பொழுது பிரச்னையாக இருக்கிறது? என் உடலில் ஏதாவது கெடுதல் இருந்தால் அதைச் சரிசெய்து விடலாம். சரிப்படுத்த முடியாத அளவுக்கு என் உடல் இப்பொழுது கெட்டுவிட்டது! அதனால்தான் டாக்டர்கள் இனி செய்ய ஒன்றுமில்லை என்கிறார்கள்என்று சிரித்துக் கொண்டே சொன்னார் கல்கி.

90’s Kid, 2K Kids-களுக்கு கல்கி என்றால் யார் என்றே தெரியாத நிலை உள்ளது. அவரது தனிப்பட்ட வாழ்க்கையை தெரிந்துகொள்ளாவிட்டாலும், எந்தக் காலத்திலும் போற்றப்படும் அவரது நாவல்களை படிக்க வேண்டியது அவசியம். TB நோயால் பாதிக்கப்பட்டிருந்த கல்கி, 1954-ம் ஆண்டு தனது 55-வது வயதில் உயிரிழந்தார். 66-வது நினைவு தினத்தில் ‘வேல்ஸ் மீடியா’ அவரது நினைவுகளை போற்றி வணங்குகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry