காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக கட்சிகள் வேளாண் மசோதாவை எதிர்ப்பது ஏன்? பின்னணியை வெளிச்சம் போட்டுக்காட்டும் வேல்ஸ் மீடியா!

0
244

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், தரகர்களிடம் இருந்து விவசாயிகளை மீட்கவும், மோடி அரசு மூன்று மசோதாக்களை கொண்டுவந்துள்ளது. ஆனால், இந்த மசோதாக்கள் உழவர்களுக்கு எதிரானவை என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.

மத்திய அரசு, விவசாயிகள் நலனை காக்கும் நோக்குடன், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு சட்டம், வேளாண் சேவை திருத்தச் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகியவற்றை கொண்டுவந்துள்ளது. விவசாயிகளின் பொருளுக்கான விலையை, இடைத்தரகர்களும், வியாபாரிகளும் நிர்ணயிப்பதை தடுப்பது, விளைபொருட்களை எங்கு, யாரிடம் விற்கலாம் என்பதை விவசாயிகளே தீர்மானிப்பது, விவசாயிகளுக்கு அவர்களின் விலை பொருளுக்கான குறைந்தபட்ச விலைக்கான உத்தரவாதத்தைத் தருவது போன்றவைதான் இந்த மசோதாக்களின் நோக்கம். இதை எதிர்க்க வேண்டிய தேவை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏன் ஏற்படுகிறது? அதை அலசினால் சந்தர்ப்பவாதம் மிகத் தெளிவாகப் புலப்படும்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொன்னது என்ன?

வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தை (Agriculture Produce Marketing Committee Act) ரத்துசெய்து, எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல், விளைபொருட்களை மாநிலங்களுக்கு இடையே வர்த்தகம் செய்யவும், ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2019 தேர்தல் அறிக்கையில், பக்கம் 17-ல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுமட்டுமின்றி, அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-க்குப் பதிலாக, அவசர காலங்களில் மட்டும் பயன்படுத்தும் வகையில், புதிய சட்டத்தை கொண்டு வருவதாகவும் உறுதியளித்துள்ளது.

டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, 2009 மற்றும் 2012-ல் வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தை அமல்படுத்தி, விவசாயிகளுக்கு கூடுதல் சுதந்திரம் தருமாறு மாநிலங்களை அறிவுறுத்தினார். புதிய வேளாண் மசோதாவில், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தோ, ஏற்கனவே உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை மாற்றப்போவதாகவோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தேர்தல் அறிக்கையில் அவர்கள் சொன்னதை வசதியாக மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு போராட்டக் களத்துக்கு வந்துள்ளார்கள்.

ஏற்கனவே என்ன சொன்னார் ரகுராம் ராஜன்?

2014-ல் ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது, வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதைக் கண்காணிக்கும், வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தினால், அது பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் அவரது கருத்தாக இருந்தது. ஆனால், விவசாயிகளை மேலும் தவறாக வழிநடத்தும் நோக்கில், தற்போதோ, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தினால் என்ன தவறு என்று கேட்கிறார்? குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து புதிய மசோதாவில் எதுவும் சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

கனடா பிரதமரே போராட்டத்தை ஆதரிக்கிறார்!

விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து சொன்ன ஒரே வெளிநாட்டு தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ. எங்களது உள்நாட்டு விவகாரத்தில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் என கேட்காமல், அவரது கருத்தையும், மோடி எதிர்பாளர்கள் வரவேற்றனர், கொண்டாடித் தீர்த்தனர். கனடா அரசு இந்திய விவசாயிகளுக்கு எதிராக வரிந்துகட்டி நின்றதை, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வசதியாக மறந்துவிட்டன.

இந்திய அரசு உழவர்களுக்கு மானியம் தருவதற்கு எதிராக, உலக வர்த்தக அமைப்பிடம், 2015 முதல் 2019 வரை, கனடா அரசு தொடர்ந்து பெரும் பிரச்சனை செய்தது. உழவர்களுக்கு வருடத்துக்கு ரூ.6,000 தரும் PM-KISAN திட்டம், பயிர் காப்பீடு திட்டமான Pradhan Mantri Fasal Bima Yojana ஆகியவற்றுக்கு எதிராகவும் உலக வர்த்தக அமைப்பில் கனடா பிரச்சனை கிளப்பியது. தற்போதோ, போராட்ட களத்தில் உள்ள விவசாயிகளின் செய்தித் தொடர்பாளர் போல கனடா பிரதமர் பேசுகிறார். இதையும் பலர் ஆதரிக்கின்றனர்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியல் செய்வது தெளிவாகிறது. விவசாயிகள் இதை உணர வேண்டும். மத்திய அரசின் மசோதாவில் மாறுபட்ட கருத்துகள் இருந்தால், அதை எதிர்த்துப் போராடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதத்துக்கு இரையாகிவிடக்கூடாது

With the input from OpIndia, Views are Personal.
Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry