ஆன்மிகத்தில் பட்டப்படிப்பு! கிராமங்கள்தோறும் சமய வகுப்பு! சமய அறிவு, ஒழுக்கத்தை வளர்க்க முயற்சி!

0
1003

இந்து மதத்தில் சமய போதனை இல்லாத நிலையில், குமரி மாவட்டம் வெள்ளிமலை விவேகானந்தர் ஆசிரமத்துக்கு உட்பட்ட ஹிந்து தர்ம வித்யா பீடம் சமய வகுப்புகளை நடத்தி, ஆன்மிகத்தில் பட்டம் வழங்குகிறது.

தற்காலத்தில் பள்ளிப்படிப்பில் எந்த நீதி பாடத்தையோ, தெய்வீகம் சம்மந்தமான பாடத்தையோ, ஒழுக்கத்தை போதிக்கும் பாடத்தையோ காண்பது அரிதாக உள்ளது. ஆசைகள் நிறைவேறும் என்ற மோகத்தில் மக்கள் மதம் மாறுகிறார்கள் அல்லது மாற்றப்படுகிறார்கள்.

இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், உபநிடதங்களிலும், மதநூல்களிலும், புராணங்களிலும் பொதிந்து கிடக்கின்ற அற்புதமான கருத்துக்களை வெளிக்கொண்டு வந்து நாடு முழுவதும் வாரி இறைக்க வேண்டும் என்று விவேகானந்தர் கூறினார். எனவேதான், குமரி மாவட்டம் வெள்ளிமலை விவேகானந்தர் ஆசிரமம், 1980-களின் தொடக்கம் முதல் சமய வகுப்புகளை நடத்தி வருகிறது.

ஒரு இந்து அடிப்படையாக என்ன தெரிந்திருக்க வேண்டும், வாழ்க்கைமுறை எப்படி இருக்க வேண்டும்? என்பதுதான் சமய வகுப்புகளில் போதிக்கப்படுகிறது. அதாவது, விழாக்கள், விரதங்கள், பண்டிகைகளின் பின்னணி என்ன? சமய சின்னங்களின் அணிவது எதற்காக?, பெற்றோர் பிள்ளைகள் நல்லொழுக்கம், இந்து மத நூல்கள், புராணப் பெரியோர்கள், இந்திய நாட்டின் சிறப்பு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளும் வகுப்புகளில் கற்பிக்கப்படுகிறது.    

தொடக்கநிலை, இளநிலை, வளர்நிலை, உயர்நிலை, முதுநிலை என்ற வரிசையில் தனித்தனி பாடப்புத்தகங்கள் அமைத்து, வருடந்தோறும் தேர்வுகள் நடத்தி சான்றிதழ்களும் ஊக்கப்பரிசுகளும் வழங்கப்படுகிறது. முதல்நிலை வெற்றி பெற்றோருக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, சமயவகுப்பு ஆசிரியர் பயிற்சி, பஜனை பயிற்சி, திருவிளக்கு பூஜை பயிற்சி, யோகாசன பயிற்சி, சமயசடங்குகள் பற்றிய பயிற்சி போன்றவை கொடுக்கப்படுகிறது.

5 நிலைகளிலும் தேர்ச்சி பெற்றால்வித்யா ஜோதிஎன்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்த பட்டம் வாங்கியவர்களுக்கு, இந்து மதத்தில் என்ன இருக்கிறது? என்ன சொல்லப்படுகிறது? எந்தெந்த புத்தகங்களில் என்னென்ன உள்ளது? உள்ளிட்டவை தெரிந்திருக்கும். அரசு பொதுத் தேர்வு போலவே, அனைத்து நிலை தேர்வுகளும் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் அந்தந்த மாவட்டங்களுக்கு உள்பட்ட மையங்களில் நடத்தப்படுகிறது. விடைத்தாள்களை திருத்துவதற்காக தனியாக ஆசிரியர் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்து திருத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள். இதுவரை சுமார் 650 பேர் வித்யா ஜோதி பட்டம் பெற்றுள்ளார்கள். வருடம் ஒருமுறை சமய வகுப்பு மாணவர் மாநாடு நடத்தி அதில் பட்டம் வழங்கப்படுகிறது.

மதப் பற்றுள்ள தன்னார்வலர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து ஆசிரியர்களாக பணியமர்த்தப்படுகின்றனர். ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். மதப்பற்று, மதங்களை போதிக்க ஆர்வம் ஆகியவையே ஆசிரியர்களுக்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 3,500 ஆசிரியர்கள் உள்ளனர். 56,000 மாணவர்கள் சமய வகுப்புகளில் பயிற்சி பெறுகின்றனர். குமரி மாவட்டத்தில் 1100 வகுப்புகளும், சென்னையில் 84 வகுப்புகளும் நடக்கிறது.

சமய வகுப்புகள் பலவற்றில், விளையாட்டுகள், நீதிக் கதைகள், வரலாற்று சம்பவங்கள், பஜனை பயிற்சிஇசைப் பயிற்சி, நினைவாற்றல் விளையாட்டு, தலைமைப் பண்பு பயிற்சி, நேரம் தவறாமை பயிற்சி, பெரியவர்களை மதித்து மரியாதை கொடுக்க பயிற்சி, தன்னம்பிக்கைக்கான பயிற்சி, நினைவுத்திறன் பயிற்சி, அறிவு கூர்மைக்கான புதிர் போட்டிகள், பண்புடன் நடந்து கொள்ள பயிற்சி, பாடங்களை எளிதாக மனப்பாடம் செய்வது குறித்த பயிற்சி போன்றவையும் பயிற்றுவிக்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் இந்து மதத்தை நல்ல சான்றோர்கள் வழிநடத்த, சமய வகுப்புகள் மிகவும் அவசியமாகிறது. சமய வகுப்புகள் மூலம் சாதி ஏற்றத் தாழ்வுகள் வேரறுக்கப்பட்டு, மனிதாபிமானம் பெருக்கெடுக்கிறது. பிராமணன் என்பது பிறப்பை வைத்து முடிவு செய்வதில்லை என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

சமய வகுப்புகள் பற்றிய விவரங்கள் மற்றும் புத்தகங்களைப் பெற:-

ஸ்ரீவிவேகானந்தர் ஆசிரமம், ஹிந்து தர்ம வித்யா பீடம், வெள்ளிமலை, குமரி மாவட்டம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry