இஸ்லாமிய பெண் வரைந்த கிருஷ்ணர் படம்! கோயிலில் வைத்து வழிபாடு! மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு!

0
326

கேரளாவில் இஸ்லாமிய பெண் ஒருவர் பகவான் கிருஷ்ணரின் படத்தை வரைந்து அதை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார். கிருஷ்ணர் படத்தை வரைந்த அந்தப் பெண்ணையும், படத்தை கோயிலில் வைக்க சம்மதித்த நிர்வாகத்தையும் மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் ஜாஸ்னா சலீம்(28). மூன்று அக்காக்களுக்கு தங்கையாக பிறந்தவர். பள்ளி காலத்தில் மேப் மற்றும் பாடத்திட்டங்களில் உள்ள ஓவியங்களை வரைவதற்கே சிரமப்பட்டவர். ஆசிரியர்கள் சொன்ன ஓவியங்கள் வரையும்போது கை நடுக்கும் என்கிறார் ஜாஸ்னா.

குழந்தைப் பருவத்தில் இருந்தே ஜாஸ்னாவை பெற்றோரும், உடன் பிறந்தவர்களும்கண்ணாஎன்றே ஆசையுடன் அழைத்து வருகின்றனர். எனவே, கிருஷ்ணரின் படத்தை பார்க்கும்போதெல்லாம், அவரை தத்ரூபமாக வரைய வேண்டும் என்ற ஆசை எழுந்தது, அப்படியொரு ஓவியத்தை வரைந்து எனது இந்து நண்பர் ஒருவருக்கு வழங்கினேன் எனச் சொல்லும் ஜாஸ்னா, கிருஷ்ணர் ஓவியங்களை வரைந்து வீட்டிலும் மாட்டியதாகக் கூறுகிறார்.

இந்த படங்களை மாட்டிய பிறகு, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடப்பதாக பெற்றோரும், சகோதரிகளும் ஜாஸ்னாவிடம் கூறியுள்ளனர். இது மேலும் பல ஓவியங்களை வரைய ஜாஸ்னாவை ஊக்கப்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் குடும்ப நண்பர்களுக்கு தெரியவர, ஜாஸ்னாவின் கிருஷ்ணர் கலைப்படைப்புகளை அவர்கள் பணம் கொடுத்து வாங்கிச் சென்றுள்ளனர்

மணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான பிறகும் கூட, கடந்த ஆறு ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் படங்களை ஜாஸ்னா வரைந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு புகழும் கிடைத்துள்ளது. தன்னுடைய படைப்புகளை விஷு மற்றும் கிருஷ்ண ஜெயந்தியின்போது, குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு நன்கொடையாகவும் கொடுத்துள்ளார். ஆனால் பக்தியுடன் தான் பார்த்துப்பார்த்து வரையும் படைப்புகள் கோயில்களை அலங்கரிக்கவில்லையே என்பது ஜாஸ்னாவின் நீண்டநாள் மனக்குறை

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாஸ்னாவின் ஆசை மற்றும் குறிக்கோள் நிறைவேறியுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளத்தில் உள்ள உலநாடு கிருஷ்ணர் கோயிலை, ஜாஸ்னாவின் கிருஷ்ணர் படம் அலங்கரிக்கிறது. தனது படைப்பை வைக்க கோயிலில் நிர்வாகம் சம்மதித்தபோது, தான் எல்லையில்லா ஆனந்தம் அடைந்ததாக ஜாஸ்னா கூறுகிறார். தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை எனவும் ஜாஸ்னா ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்.

தான் வரையும் படங்களிலேயே, குழந்தை கிருஷ்ணர் வெண்ணெய் பானையுடன் அமர்ந்திருக்கும் படைப்புக்குத்தான் மிகவும் கிராக்கி என்கிறார் ஜாஸ்னா. மத வேற்றுமை பாராட்டாமல் வளர்த்த ஜாஸ்னாவின் பெற்றோரையும், பக்தியுடன் கிருஷ்ணர் படங்களை வரைந்து வரும் ஜாஸ்னாவையும், அவரது படைப்பை கோயிலில் வைக்க சம்மதித்த நிர்வாகத்தையும் மக்கள் பாராட்டுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு தான் வரைந்த கிருஷ்ணர் படத்தை பரிசாக தர வேண்டும் என ஜாஸ்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry