தோனி வழியையே தான் பின்பற்றுவதாக விராட் கோலி கூறியுள்ளார். கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு, அடுத்த திட்டம் என்ன என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
டி20 அணி கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிய பிறகு, ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவியை அவரிடம் இருந்து பறித்து, ரோஹித் ஷர்மாவிடம் பிசிசிஐ கொடுத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், டெஸ்ட் அணி கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக கோலி அறிவித்தார்.
இந்நிலையில் Digit’s ‘Fireside Chat with VK-க்கு பேட்டி அளித்துள்ள விராட் கோலி, “அனைத்து விஷயத்திற்கும் ஒரு கால அளவு இருக்கிறது. அப்படித்தான் எனது கேப்டன் பதவியும். கேப்டனாக என்ன செய்தேன் என்பது எனக்குத் தெரியும். தற்போது, வாழ்க்கையில் அடுத்த பக்கத்திற்குச் செல்கிறேன். இனி பேட்ஸ்மேனாக இருந்து, அணியின் வெற்றிக்காக பாடுபடுவேன். அணியின் வெற்றிக்கு உதவிய திருப்தி கிடைத்தாலே போதும்.
தலைவனாக இருக்க கேப்டனாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. கேப்டனாக இருப்பதற்கு முன்பே, நான் ஒரு கேப்டனைப் போல்தான் யோசிப்பேன். எனக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன். தோனி கேப்டனாக இருந்தபோது, நான் எப்படி இருந்தேனோ, அதேபோல்தான் இனியும் இருப்பேன். தோனி கேப்டனாக இருந்தபோது, தலைவன் என்ற உணர்வோடு இருக்க மாட்டார். யுக்திகள், தகவல்களை தெரிவிப்பவராக மட்டுமேதான் இருப்பார். நான் அணியை வழிநடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது எனத் தெரிந்ததும் தோனி, தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து, எனக்கு அந்த பதவியை கொடுத்தார். இது அனைத்தும் இயற்கையாக நடந்தது.
தற்போது நானும், அணியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எது தேவை என்பதை கருத்தில்கொண்டே சரியான நேரத்தில் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளேன். அணிக்கு புதிய பாதை தேவைப்பட்டது. இதனை செயல்படுத்த புதிய கேப்டன் தேவைப்பட்டார். இதனால்தான் விலகினேன். எப்போதும்போல் இந்திய அணிக்காக விளையாடி, ரன்களை குவிப்பதுதான் எனது பணி” என்றார்.
கோலி கேப்டன்சியின் கீழ், இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 24 தொடர்களில் வெறும் 5 டெஸ்ட் தொடர்களை மட்டுமே இழந்தது. இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் ஒரு தொடரைக் கூட இழக்கவில்லை.
அதிக முறை இந்திய அணியை ஒரு நாள் போட்டிகளில் வழிநடத்திய மகேந்திர சிங் தோனி 200 போட்டிகளில் 110 போட்டிகளில் வென்று 59.52% வெற்றி விகிதம் கொண்டுள்ளார். மொஹம்மத் அசாருதீன் 174 போட்டிகளில் 90 போட்டிகளில் வென்று 54.16%, செளரவ் கங்குலி 147 போட்டிகளில் 76 போட்டிகளில் வென்று 53.52% உள்ளது. விராட் கோலி 95 போட்டிகளுக்கு தலைமை தாங்கி 65 போட்டிகளில் வென்று 70.43 என அதிகபட்ச வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry