முல்லை பெரியாறு அணை 142 அடிக்கான கொள்ளளவை எட்டியதை அடுத்து, அதனை முன்வைத்து கேரளத்தில் புதிய சர்ச்சைகள் எழுந்தபடி உள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் முல்லை பெரியாறு அணையில் 142 அடி கொள்ளளவுக்கு தண்ணீர் பராமரிக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக, அணைக்கு வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மதகுகள் மூலமா உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
செவ்வாய் நள்ளிரவில் அணையிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டதாகவும், அதனால் நீர் வெளியேறும் வழிதடத்தின் கேரள குடியிருப்புகளில் நீர் சூழ்ந்ததாகவும் பதற்றம் எழுந்தது. இது தொடர்பாக கேரள நீர் வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் ” நள்ளிரவு நேரங்களில் அணையின் நீர் திறப்பை தவிர்க்குமாறு தமிழகத்திடம் கேட்போம்” என்றார்.
இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார். இதனை ட்விட்டர் வாயிலாகவும் அவர் உறுதி செய்துள்ளார். அந்த கடிதத்தில் ‘செவ்வாய் அதிகாலை 3 மணியளவில் அணையின் 8 மதகுகளை திறந்துவிட்டு 6,413 கன அடி நீரையும், 4 மணியளவில் 10 மதகுகளை திறந்துவிட்டு 8,1017 கன அடி நீரையும் வெளியேற்றியதால், அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள். எனவே, போதிய முன்னெச்சரிக்கை விடுத்த பிறகு, பகல் நேரத்தில் மட்டுமே மதகுகள் திறப்பை மேற்கொள்ளுமாறு’ பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “இரவுகளில் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதினாலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 142 அடிக்கு நீரை பரமாரிக்க வேண்டியிருப்பதாலும் அணையிலிருந்து நீரினை திறக்க வேண்டியதாயிற்று” என்று விளக்கம் அளித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்ட வலியுறுத்தி கேரளாவை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், தமிழக அரசைக் கண்டித்து கேரளாவில் இடுக்கி – குமுளி தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து வண்டிப் பெரியாறு காவல்நிலையத்திற்கு பேரணியாக சென்று புகார் அளித்தனர்.
Also Watch: – இயலாமையால் அணை உரிமையை விட்டுக்கொடுத்த தமிழக அரசு ~ துரைமுருகன் அறிவுரை தேவையில்லை!
இதனிடையே, கேரளாவில் முல்லைப்பெரியாறு உள்ளிட்ட எந்த அணையையும் செயலிழக்கச் செய்யும் திட்டம் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. முல்லை பெரியார் அணை விவகாரம் குறித்து கேரள எம்.பி. அன்டோ அந்தோணி ஜல்சக்தி துறைக்கு சில கேள்விகளை எழுப்பியிருந்தார். மக்களவையில் நேற்று இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஜல்சக்தித்துறை இணை பிஸ்வேஸ்வர் துடு, தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல், உச்சநீதிமன்றம் கொடுத்த பரிந்துரையை மீறி புது அணை கட்ட அனுமதி கொடுக்கமுடியாது. சுற்றுச்சூழல் அனுமதிக்கு கேரளா மட்டுமின்றி தமிழக அரசின் ஒப்புதலும் அவசியம் என்று கூறியுள்ளார்.
மேலும், வடிவமைப்பிலும், புவியியல் ரீதியிலும் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாகவும், பலமாகவும் உள்ளதாகவும், மத்தியக் குழுவின் அறிக்கை அடிப்படையில் உச்சநீதிமன்றமும் 2014ம் ஆண்டு இதை உறுதி செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry
*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*