எண்ணும் எழுத்தும் திட்டத்தினை மதிப்பீடு செய்வதற்கு, எதிர்ப்பை மீறி முதுகலை ஆசிரியர்கள் தலைமையில், பி.எட்., மாணவர்களை அதிகாரிகள் பிடிவாதமாக அனுப்ப உள்ளனர். பள்ளிகளில் அவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “29.08.2023 அன்று பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையிலும், தொடக்கக் கல்வி இயக்குநர் முன்னிலையிலும், டிட்டோ-ஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர்களிடம் அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? பள்ளிக்கல்வித் துறை தனியார் கம்பெனிகள் நிர்வாகத்தில் சிக்கித் திணறுகிறதா? சுயாட்சி பெற்ற அதிகார நிர்வாக மையமாக பள்ளிக் கல்வித் துறையில் SCERT இயக்ககம் செயல்பட்டு வருகிறதா?
எண்ணும் எழுத்தும் திட்டத்தை மூன்றாவது நபர் மதிப்பீடு (Third party evaluation) செய்யும் முறையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தனி அக்கறை கொண்டு தடுத்து நிறுத்திட வலியுறுத்துகிறோம். பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரின் நல்லெண்ண நடவடிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
எண்ணும் எழுத்தும் திட்ட மூன்றாவது நபர் மதிப்பீடுக்காக, முதுகலை ஆசிரியர்கள் தலைமையில் பி.எட்., மாணவர்கள், 07.09.2023 முதல் பள்ளிக்கு மதிப்பீடு செய்ய வருவதை அனுமதிக்கவே மாட்டோம். இழந்த உரிமையினை மீட்டெடுப்பதற்காக முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில் போராடியபோது பெற்ற தண்டனையினையில் இருந்து, தி.மு.க. அரசு பொறுப்பேற்கும் போதெல்லாம் விடுதலை பெற்று வந்தோம்.
ஆனால் நமது அரசு, எங்கள் அரசில், உரிமையினையும் – சுயமரியாதையினையும் இழக்காமல், அதேநேரம் மாணவர்களின் கல்வி நலனையும் பாதுகாப்பதற்காக, மூன்றாம் நபர் மதிப்பீட்டை ஏற்க மாட்டோம். 07.09.2023 முதல் மூன்றாவது நபர் மதிப்பீடுக்காக பி.எட்., மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அனுமதிக்காத போராட்ட முடிவினை தீவிரமாக செயல்படுத்த உள்ளோம். எதுவரினும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்!
எண்ணும் எழுத்தும் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, 1 முதல் 5ம் வகுப்புகள் வரை, 24 இடைநிலை ஆசிரியர்களை, கருத்தாளர்களாக, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு மாதந்தோறும் பயிற்சிக்கு அனுப்பி, மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்தி வருவதை தடுத்து நிறுத்திடுமாறும் வலியுறுத்துகிறோம்! வாக்கு வங்கியினை பாதுகாத்திட முன்வாருங்கள்..!” இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry