சுட்டெரிக்கும் வெயில்! அச்சுறுத்தும் ‘வெட் பல்ப் வெப்பநிலை’! மனிதர்கள் உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கை!

0
164
GETTY IMAGE | REPRESENTATIVE IMAGE

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக தொடருகிறது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை என பல நகரங்களில் வெயிலின் அளவு வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி வருகிறது. கத்தரி வெயிலின் தாக்கம் முடிந்த பிறகும் சென்னை போன்ற நகரங்களில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை உணர முடிகிறது.

கடந்த சனிக்கிழமை, ஜூன் 3ஆம் தேதி, சென்னையில் நுங்கம்பாக்கம் வானிலை மையத்தில் பகல் நேர வெப்பநிலை 107.8 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. அதே நாளில் மீனம்பாக்கத்தில் 108.7 பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவாகியுள்ளது. ஜூன் மாதத்தில் இது மிக அதிகமான வெப்பநிலையாகும். இதேநிலை நீடித்தால் எதிர்காலத்தில் மனித குலத்திற்கு ‘வெப்பம்’ ஒரு பேரழிவாக மாறக்கூடும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

Also Read : இயற்கை வளங்களைச் சுரண்டும் சட்டங்கள்! பூவுலகின் நண்பர்கள் கருத்தரங்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு தலைவர்கள் கண்டனம்!

கடந்த 10 ஆண்டுகளில் 2012ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதன்பிறகு தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 3) 42.1 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரவாயலில் 43.3 டிகிரி செல்சியசாகவும், அமைந்தகரையில் 42 டிகிரி செல்சியாகவும், அண்ணா நகர் பகுதியில் 43 டிகிரி செல்சியசாகவும், அம்பத்தூரில் 42.8 டிகிரி செல்சியாகவும் வெப்பநிலை பதிவாகியிருந்தது. அதே நாளில் சென்னையின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 41 டிகிரிக்கும் மேலாகத்தான் பதிவானது. ஜூன் 3ஆம் தேதி சென்னையில் பதிவான வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதையொட்டி ‘வெட் பல்ப் வெப்பநிலை’ (Wet bulb temperature) என்ற சொல்லாடலை முன்வைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தைக் கொண்டு இந்த வெட் பல்ப் வெப்பநிலை கணக்கிடப்படுகிறது.

வெட் பல்ப் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் சென்றால் அது மனிதர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தரராஜன் எச்சரிக்கிறார். மேலும், “ஜூன் 3ஆம் தேதி சனிக்கிழமை சென்னையின் வெட் பல்ப் வெப்பம் 31.3 டிகிரி செல்சியஸை எட்டியது. ஞாயிற்றுக்கிழமை 31.3 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது, செவ்வாயன்று, கோடம்பாக்கத்தில் 32.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இது பாதுகாப்பான 30 டிகிரி செல்சியஸை விட அதிகமாகும். 32 டிகிரிக்கு மேல் சென்றால் அது மனிதர்களுக்கு மிகவும் சிக்கலானது.

Also Read : கோவையை பாலைவனமாக்கும் கனிமவளக் கொள்ளை! அரசு செய்ய வேண்டியது என்ன?

35 டிகிரிக்கு மேல் இந்த வெப்பநிலை செல்லும்போது மனிதர்களின் உடல் தன்னை குளிர்விக்கும் தன்மையை இழந்துவிடும். வறண்ட காற்றின் காரணமாக வியர்வை ஏதும் வராது. குளிர்சாதன வசதி இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாத நிலை உருவாகும். 2050ஆம் ஆண்டு இந்த நிலையை தமிழ்நாடு எட்டும் என நினைத்திருந்தோம். ஆனால் அதை விரைவாக நெருங்குவது போல இது அமைந்திருக்கிறது,” என்றும் அவர் கூறுகிறார்.

“சில ஆண்டுகளாக வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஒரு சில பகுதிகளில் வெட் பல்ப் வெப்பநிலை பாதுகாப்பான அளவை மீறும் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சென்னை பாதுகாப்பான அளவைத் தாண்டியது இதுவே முதல் முறை. எல் நினோ காரணமாக அடுத்த மாதம் நகரம் அதிக வெப்பநிலையைக் காணலாம்.

புவி வெப்பமடைவதே வெட் பல்ப் வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட சில இடங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப அழுத்த எச்சரிக்கை விடுத்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் பொறியாளர் பிரபாகரன் வீர அரசு. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கூற்றுப்படி, கிழக்கு பசிபிக் பெருங்கடலில் எல் நினோ காரணி தொடர்வதால், நிலைமை மேலும் மோசமாகும் என அஞ்சப்படுகிறது.

Also Read : வெளிநாட்டு நிறுவனம் பயன்பெற குழந்தைகளுக்கு நஞ்சை கொடுப்பதா? செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இயல்பைவிட அதிகம் வெப்பம் ஏற்பட்டதற்கு காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்றும் சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். வெப்ப அலை போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நமது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதும் தமிழக அரசுக்கான அவர்களது அறிவுறுத்தலாக உள்ளது.

காலநிலை குறித்த தகவமைப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை (Adaptation & Mitigation) அரசும், அதைச் சார்ந்துள்ள துணை அமைப்புகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் சூழலியில் ஆர்வலர்கள், கிராமப்புற பகுதிகளை விட நகர்ப்புறங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நகரங்களில் இருக்கும் குறைந்த அளவிலான பசுமை நிலப்பரப்பே இதற்கு காரணம். அதனால் வெப்ப அலையை சமாளிக்க நகரங்களில் அதிக மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

தமிழ்நாட்டிலும் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகமாகி வரும் நிலையில், மனிதர்கள் உயிர்வாழ முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார் இந்திய வனப்பணி அதிகாரியும், தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினருமான சுதா ராமன்.

“வட இந்திய மாநிலங்களை போல அல்லாமல், வெப்ப அலை என்பது தமிழ்நாட்டிற்கு புதிய ஒன்று. இதனால் நகரப்பகுதிகளில் வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும். இதே நிலை நீடித்தால் சைபீரியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளை போல நமது ஊரிலும் வெப்ப அலையினால் பேரிடர்கள் உருவாகும்” என்று பிபிசி தமிழ் நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் பசுமை நிலப்பரப்பை விட கான்கிரீட் கட்டிடங்களின் பரப்பளவு அதிகமாகிக்கொண்டே போவதால், சென்னை போன்ற நகரங்கள், நகர்ப்புற பகுதிகள், வெப்ப தீவுகளாக(Urban heat islands) மாறுகின்றன என்பதும் அவரது கருத்தாக உள்ளது.

வெப்ப தீவுகள் என்றால், ஒரு நகரத்தின் மொத்த பரப்பளவில் அமைந்துள்ள பசுமை நிலப்பரப்பை விட, கான்கிரீட் கட்டிடங்கள் போன்ற வெப்பத்தை தாங்கி நிற்கும் அமைப்புகள் அதிகமாகும் போது, வெப்பத்தின் தாக்கம் பல மடங்கு அதிகரிக்கும். உதாரணமாக காற்றோட்ட வசதி இல்லாத கான்கிரீட் கட்டிடத்தின் உட்பகுதியில், வெளியில் இருக்கும் வெப்பத்தை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாகும். இதுவே ’Urban heat islands’ என்று அழைக்கப்படுகிறது.

2027ஆம் ஆண்டுக்குள், தற்போது நிலவும் பூமியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் உயர, 66% வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும்போது பனிப்பாறைகள் உருகுவதும் வேகமெடுப்பதால், சென்னையின் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளது. இதனால், தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும், மாதக்கணக்கில் மழை கொட்டித் தீர்க்கலாம், வறட்சி ஏற்படுவதோடு பொருளாதார இழப்புகளும் இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry