கோவிட்-19 தடுப்பூசியால் பக்கவிளைவுகள்! யாரெல்லாம் தடுப்பூசி போடக்கூடாது? என்ன சொல்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்? 

0
42

கோவிட்-19 தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக மக்கள் மத்தியில் அச்சம் பரப்பப்படுகிறது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போன்றோரும் மக்கள் மத்தியில் ஒருவித பயத்தை விதைக்கின்றனர்.  கோவிட்-19 தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.

கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தடுப்பூசி குறித்த பல்வகை சந்தேகங்களுக்கும் பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி பதில் அளித்துள்ளார். டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற கொடிய நோய்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி உள்ள இவர், தற்போது, மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ள கொரோனா குறித்தும், தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் நன்மை குறித்தும் விளக்கியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி வேகமாக கண்டுப்பிடிக்கப்பட்டதால் சந்தேகம் உள்ளதே?

உலகின் பல்வேறு நாடுகளில், 50 ஆண்டுகளுக்கு முன், ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே, தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன. ‘பயோ டெக்எனப்படும், உயிரி தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. இந்த வளர்ச்சி காரணமாக தான், கொரோனா பரவ ஆரம்பித்து, ஓராண்டுக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இதில், எவ்வித சந்தேகமும் வேண்டாம். இரண்டு தடுப்பூசிகளும், 100 சதவீதம் பாதுகாப்பானவை.

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படுமா?

கொரோனா தடுப்பூசியால், மாரடைப்பு, ரத்தம் உறைதல், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், காய்ச்சல், தலைவலி, உடல் வலி, போன்ற சிறு தொந்தரவுகள் ஏற்படலாம். இவையும், அனைவருக்கும் ஏற்படுவதில்லை. மற்றபடி, தடுப்பூசி போட்டுக்கொள்வதால், உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை.

தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மை என்ன?

தடுப்பூசி போடுவதே நன்மை தான். அதனால், நமக்கு மட்டுமின்றி, சமூகத்திற்கும் நோய் எதிர்ப்பு பாதுகாப்பை உறுதி செய்கிறோம். குறிப்பாக, நாம் தடுப்பூசி போடுவதால், அதன் பின் தொற்று ஏற்பட்டாலும், நமது உடல் உள்ளுறுப்புகள் பெரியளவில் பாதிக்கப்படாது.நோயின் தாக்கமும் குறைவாக இருக்கும். நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு, நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இல்லை. அனைவரும் தடுப்பூசி போடுவதால், போலியோ, டெங்கு உள்ளிட்ட நோய்களை போல், கொரோனா தொற்றையும் நாம் கட்டுப்படுத்தலாம்.

தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு தன்மை எவ்வளவு?

கொரோனா தடுப்பூசிகளை பொறுத்தவரையில், இவ்வளவு சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதல்ல. அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதால், 90 சதவீதம் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கலாம். இதனால், ஆண்டாண்டுக்கு கொரோனாபரவலின் வீரியம் இருக்காது.

தடுப்பூசி போட்டப்பின், முக கவசம் ஏன் அணிய வேண்டும்?

தடுப்பூசி போட்ட உடனேயே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விடாது. முதல்டோஸ்தடுப்பூசிக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும், நான்கு முதல், எட்டு வாரங்கள் இடைவெளி உள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு, இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் தான், நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அதன்பின், தொற்று ஏற்படாது என்றும் கூற முடியாது. அதனால், அனைவரும் தடுப்பூசி போட்டபின் தொற்று கட்டுக்குள் வரும் வரை, முககவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனாவுக்கு மட்டும் முக கவசம் அல்ல. பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் முக கவசம் அவசியம்.

கோவாக்சின், கோவிஷீல்டு இந்த இரண்டில் எது சிறந்தது?

இந்த இரண்டு மருந்துகளும், தயாரிப்பு முறையில் மட்டுமே மாற்றம் உள்ளன. மற்றபடி, இரண்டும், ஒரே மாதிரியான நோய் எதிர்ப்பு சக்தியை தான் மக்களுக்கு வழங்குகின்றன. பெரிய அளவிலான பக்கவிளைவுகள் இல்லாமல், பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

தடுப்பூசிக்கு முன், சி.ஆர்.பி., ரத்த பரிசோதனை அவசியமா?

சி.ஆர்.பி., ரத்த பரிசோதனை என்பது, உடலில் வேறு ஏதேனும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்பதை கண்டறிய தான் செய்யப்படுகிறது. குறிப்பாக, புற்றுநோயாளிக்கு பரிசோதனை செய்யும்போது, அவரது புற்றுநோய் கட்டியை வகைப்படுத்தி காட்டலாம். அவ்வாறு காட்டும்போது, அவர் தடுப்பூசி போடக்கூடாது என்றில்லை. அவர்களுக்கு தான், முக்கியமாக தடுப்பூசி தேவை. இந்த பரிசோதனை, தடுப்பூசி போட்டு கொள்ளலாமா, கூடாதா என்பதற்காக அல்ல. அதனால், தடுப்பூசி போடுவதற்கு முன், சி.ஆர்.பி., பரிசோதனை அவசியமில்லை. அதற்கு பதிலாக, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனை செய்வது போதுமானது.

யாரெல்லாம் தடுப்பூசி போடக்கூடாது?

அரசு அறிவித்துள்ள படி, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தடுப்பூசி போட தகுதியானவர்களே. கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட வேண்டாம். மற்ற அனைவரும் தடுப்பூசி போடலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோயாளிகள், தடுப்பூசி போடுவதற்கு முன், அவர்கள் சிகிச்சை பெறும் டாக்டரிடம் ஆலோசனை பெற்றபின், போட்டு கொள்ளலாம்’. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, 1940களில் உலகையே அச்சுறுத்திய, ‘ஸ்பேனிஷ் ப்ளூ‘, அதன்பின் வந்தஸ்வைன் ப்ளூபோன்ற பல்வேறு கொடிய வைரஸ்களை கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தது தடுப்பூசிகள்தான். எனவே, இன்றைய நிலையில், தடுப்பூசி ஒன்று தான், தொற்றை வெல்ல நம்மிடம் இருக்கும் ஒரே வழி என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குழந்தைப் பருவத்தில் அம்மைக்கு தடுப்பூசி போட்ட போது காய்ச்சல் வந்திருக்கும். அதுபோல தான் தற்போது சிலருக்கு காய்ச்சல் வருவது. இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தடுப்பூசி போடாவிட்டால் தொற்றின் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், சிலருக்கு உடல் அசதி, ஒன்று இரண்டு நாட்கள் காய்ச்சல் வரலாம். இதுதவிர, பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படாது. கல்லீரல் சுருக்கம், வயிறு வீக்கம், நீண்ட நாட்கள் மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதுபோன்ற நோயாளிகளும், டாக்டர்களின் அறிவுரை கேட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இணைநோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

Inputs from Dinamalar

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry