வேல்ஸ் மீடியா நேயர்களுக்காக, வார ராசி பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்து வரும், ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஜோதிடம் தொடர்பான நமது வாசகர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்.
சென்னை, செங்குன்றத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற நேயர், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சனி பெயர்ச்சி ஆகிவிட்டது. ஆனால் வாக்கியப் பஞ்சாங்கப்படி டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சி என்று கூறுகிறார்கள். திருக்கணிதப் பஞ்சாங்கம் மற்றும் வாக்கியப் பஞ்சாங்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு விளக்கமாக பதிலளித்துள்ள ஜோதிடர் வெங்கடேஸ்வரர், “சந்திரனை மையமாகக் கொண்டுதான் பஞ்சாங்கம் கணக்கிடப்படுகிறது. பஞ்ச(ஐந்து) + அங்கம் = பஞ்சாங்கம். ஒருநாள் எப்படி அமையும் என்பதை அறிந்து கொள்வதற்கு வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவை முக்கியம். இந்த ஐந்தையும் கொண்டே நாளின் தன்மை கணக்கிடப்படுகிறது. இதற்குப் பஞ்சாங்கம் மிகவும் அவசியம். பஞ்சாங்கத்தில் இருவகைகள் உள்ளன. 1. வாக்கியப் பஞ்சாங்கம், 2. திருக்கணிதப் பஞ்சாங்கம்.
வாக்கியப் பஞ்சாங்கம் எனும் பாம்புப் பஞ்சாங்கம்:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரிஷிகளின் வாக்கில் மலர்ந்த பாடல்களில் உள்ள கணிதமுறையை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் இன்றைக்கும் எழுதப்படும் பஞ்சாங்கம்தான் வாக்கியப் பஞ்சாங்கம். காலமாற்றத்தினால் எந்தவித மாற்றத்திற்கும் உட்படாத, திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கியப் பஞ்சாங்கம் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் இறைவழிபாடுகள் அனைத்தும் வாக்கியப் பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே பின்பற்றப்படுகின்றன. கோயில்களில் திருவிழாக்கள், விசேஷங்கள், குரு பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சி, சனி பகவான் பெயர்ச்சி ஆகியவை வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையிலேயே பின்பற்றப்படுகிறது.
திருக்கணிதப் பஞ்சாங்கம் :
வாக்கியப் பஞ்சாங்கத்தைத் திருத்தி, குறைபாடுகளை நீக்கி துல்லியக் கணக்குடன் எழுதப்பட்ட பஞ்சாங்கமே திருக்கணிதப் பஞ்சாங்கம். 15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சந்திரனின் அயனாம்சம் எனப்படும் சுழற்சிப் பாதையில் ஏற்படும் சிறுசிறு வித்தியாசங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, எழுதப்பட்டது திருக்கணிதப் பஞ்சாங்கமாகும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், வாக்கியப் பஞ்சாங்கத்தின் அப்டேட்டட் வெர்ஷன் தான் திருக்கணிதப் பஞ்சாங்கம்.
வாக்கியம் – திருக்கணிதம் வித்தியாசம் என்ன?
வாக்கியப் பஞ்சாங்கம் மற்றும் திருக்கணிதப் பஞ்சாகத்திற்கு இடையே அதிகபட்சமாக 17 நாழிகை (அதாவது 6 மணி 48 நிமிடங்கள்) வித்தியாசம் வரும். குறைந்தபட்சம் 2 மணி நேரம் வித்தியாசம் வரும். அமாவாசை, பெளர்ணமி நாட்களில், வாக்கியம் – திருக்கணிதப் பஞ்சாகங்களுக்கு இடையேயான வித்தியாசம் மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி நாட்களில், வாக்கியம் – திருக்கணிதப் பஞ்சாகங்களுக்கு இடையேயான வித்தியாசம் அதிகமாக இருக்கும். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் மட்டும் இரண்டு பஞ்சாங்கங்களிலும் ஒரே நேரத்தில் இருக்கும்.
காஞ்சி பெரியவரின் தீர்ப்பு:
1935-ஆம் ஆண்டு காஞ்சி மகா பெரியவர் தலைமையில், ‘வித்வத் சதஸ்’ நடைபெற்றது. ‘சதஸ்’ என்றால் விவாதிக்கும் சபை என்று அர்த்தம். அந்த சபையில், வாக்கியப் பஞ்சாங்கமா? திருக்கணிதப் பஞ்சாங்கமா?, இதில் எது சிறந்தது என்று பெரிய விவாதமே நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் உள்ள பிரபல ஜோதிடர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர். நீண்ட விவாதத்தின் முடிவில், திருக்கணிதப் பஞ்சாங்கமே சரியானது என காஞ்சி பெரியவர் தீர்ப்பு வழங்கினார்.
காஞ்சி மடத்தில் அப்போதுமுதல் திருக்கணிதப் பஞ்சாங்கமே பின்பற்றப்பட்டு வருகிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் திருக்கணிதப் பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது. மத்திய அரசின் ராஷ்ட்ரிய பஞ்சாங்கம் கூட திருக்கணிதத்தின் அடிப்படையில் ஆனது. சில ஆண்டுகளுக்கு முன்பு திருமலை திருப்பதி தேவஸ்தானமும் திருக்கணிதப் பஞ்சாங்கத்தை ஏற்றுக் கொண்டு அதன்படியே பிரம்மோற்சவம் போன்ற திருவிழாக்களை கடைப்பிடித்து வருகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இன்றைக்கும் வாக்கியப் பஞ்சாங்கமே பின்பற்றப்படுகின்றன. அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களான விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள ஜோதிடர்கள் பெரும்பாலும் வாக்கிய முறையையே பயன்படுத்துகின்றனர்.
ஜோதிடர்களின் சாய்ஸ் எது?
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஜோதிடர்கள் திருக்கணிதப் பஞ்சாங்கத்தை ஏற்றுக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். ஜோதிட சாஃப்ட்வேர்களும் திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில்
வடிவமைக்கப்படுகின்றன. திருக்கணிதப் பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஜோதிட பலன்கள் கூறினால், பலன்கள் துல்லியமாக இருக்கும்.” இவ்வாறு ஆர்.கே.வெங்கடேஸ்வரர் பதில் அளித்துள்ளார்.
ஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை astrovenkataeswar@gmail.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பினால், வரும் நாட்களில் வேல்ஸ் மீடியா இணைய இதழில் பதில்கள் வெளியாகும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry