தமிழக அரசு மெத்தனம்! கருகும் குறுவைப் பயிர்கள்! டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவிக்கக் கோரிக்கை!

0
31
Farmers demand the TN Govt should declare the delta districts including Thanjavur as drought areas | CM M.K. Stalin | File Image

காவிரி நீரை நம்பி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், எதிர்பார்த்த நீர்வரத்து இல்லாததால் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காவிரி நீர்ப் பங்கீடு விவகாரம் தமிழக, கர்நாடக மாநிலங்களில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவு தந்தாலும், காவிரியில் தண்ணீர் திறந்து விட மாட்டோம் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் இரண்டு முறை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் ஒரு அனைத்துக் கட்சி கூட்டம் கூட நடத்தப்படவில்லை.

நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனோ, காவிரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல; அது நம்முடைய உரிமை என்று கூறுவதுடன், அனைத்துக் கட்சிக்கூட்டத்துக்கு அவசியமில்லை என்கிறார். காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தை அரசியலாக்கும் நோக்குடன், அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள், டெல்லியில் ஜல்சக்தித்துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடுமாறு நாளை மனு அளிக்கின்றனர்.

Also Read : செப்டம்பர் 12க்குப் பிறகு தண்ணீர் திறக்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா மனு!

ஒருவார காலம் பொறுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம்; காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்க உத்தரவிடுமாறு மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம்; மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று பிரச்சனையை மத்திய அரசின் பக்கம் திருப்பவே இதுபயன்படும். திமுக, காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளும் I.N.D.I. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு தண்ணீர் தர அழுத்தம் தரவேண்டும். இதுதான் தீர்வாக இருக்கும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன் பயிர்கள் கருகிவிடும் என்பது தமிழக அரசுக்குத் தெரியாதா? வழக்கு மூலம் பயிர்களைக் காப்பாற்ற முடியாது என்பது தெரிந்தும், கூட்டணிக் கட்சி முதல்வரை சந்தித்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல், அறிக்கை விடுவதும், மனு அளிப்பதும் எந்த விதத்திலும் பயனளிக்காது. I.N.D.I.கூட்டணி கூட்டத்துக்காக ஜூலை மாதம் பெங்களூரு சென்ற மு.க. ஸ்டாலினிடம், கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் நெருக்கும் காட்டினார்கள். அப்போது கூட அவர்களிடம் தமிழக விவசாயிகள் பிரச்னை குறித்து நமது முதல்வர் வாய்திறக்கவில்லை.

I.N.D.I. கூட்டணியில் இருந்தாலும், டெல்லி அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனை விதித்து வழிக்குக் கொண்டுவந்தது போல, தமிழக முதலமைச்சர் செய்யாதது ஏன்? என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச. அன்வர் பாலசிங்கம், “நட்பு வேறு, மாநில நலன் வேறு” என்பதில் கேரள, கர்நாடக முதல்வர்கள் தெளிவாக இருப்பதுபோல, தமிழக முதல்வர் இருக்காதது ஏன்? என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

Also Read : காவிரி விவகாரத்தில் தத்தளிக்கும் திமுக! நட்பு வேறு, மாநில நலன் வேறு என்பதில் தெளிவாக இருக்கும் கர்நாடக, கேரள முதல்வர்கள்!

மேட்டூர் அணை ஜூன் 12ல், டெல்டா குறுவைப் பாசனத்துக்கு திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம், 103.35 அடியாக இருந்தது. 3,000 கன அடியிலிருந்து படிப்படியாக அதிகரித்து, 13 ஆயிரம் கன அடி வரை நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் கூறியது போல், 5 லட்சம் ஏக்கரில் டெல்டா விவசாயிகள் பயிர் நடவு செய்யும் பணியில் இறங்கினர்.

டெல்டா மாவட்டங்களில், 1.5 லட்சம் ஏக்கரில் போர்வெல் மற்றும் பிற நீர் ஆதாரங்களை நம்பியும், காவிரி நீரை நம்பி 3.5 லட்சம் ஏக்கரிலும் விவசாயம் நடக்கிறது. அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டாலும், பல இடங்களுக்குத் தண்ணீர் போகவில்லை. கர்நாடகா அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ள நிலையில், குடிநீர்த் தேவையை காரணம் காட்டி, தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு மறுப்பதுடன், மேகேதாட்டு அணை கட்டுவதற்கும் தீவிரம் காட்டுகிறது.

Also Read : மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற தொல்லை கொடுக்கிறது! கர்நாடக முதல்வர் குற்றச்சாட்டு!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 31ல் மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடிக்குக் கீழும், செப்டம்பர் 13ல் நீர் மட்டம் 44 அடிக்குக் கீழாகவும் சென்றது. அணையில், குறைந்தபட்சம் 6 டி.எம்.சி., தண்ணீர் இருக்க வேண்டும். அணையின் நீர் இருப்பு நேற்று 13.04 டி.எம்.சி.,யாக குறைந்தது.
எனவே, 7 டிஎம்.சி., மட்டுமே டெல்டா பாசனத்திற்கு திறக்க வாய்ப்புள்ளது. இது இன்னும் ஒரு வார காலத்துக்கு கூட தாங்காது.

டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்கள், வெடிப்பு நிலங்களாக மாறி குறுவைப் பயிர்கள் கருகி வருகின்றன. வெண்ணாறு வடிநில கோட்டத்தில், காவிரி கடைமடையான திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆற்று நீரை மட்டுமே நம்பி பாசன வசதி பெறும், ஓடம்போக்கியாறு, தேவ நதி, வேதாரண்யம் கால்வாய், முள்ளியாறு, மானங்கொண்டனாறு, அடப்பாறு, அரிச்சந்திரா நதி, பாண்டவனாறு, வெள்ளையாறு பாயும் பகுதிகளில் விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, 120 நாள் பயிரான குறுவை, 80 நாட்களாகி மகரந்த சேர்க்கை நடைபெற்று, கதிர்கள் வெளிவரும் பருவத்தில் உள்ளன. இந்தக் காலகட்டத்தில் தான் பயிர்களுக்குத் தண்ணீர் அதிகம் தேவை. தற்போது தண்ணீர் வரத்தும் இல்லை. மழையும் இல்லை. இதனால், சூல் பருவத்தில் நெற்கதிர்கள் வெளிவருவதற்குப் பதிலாக, பதர்கள் வெளிவரும் அபாயம் உருவாகியுள்ளதால் விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடிக்கின்றனர்.

Also Read : காவிரி நீர் விவகாரத்தில் துரைமுருகன் நாடகம் நடத்துகிறார்! விவசாயிகளை வைத்து விளம்பரம் தேட வேண்டாம் என எச்சரிக்கை!

எனவே, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்தப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று விவசாய அமைப்புகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. பாதிக்கப்பட்ட குறுவை பயிருக்கு, ஏக்கருக்கு, ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும்; குறுவையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், சம்பா சாகுபடியிலும் பாதிக்காமல் இருக்க, வடகிழக்கு பருவமழை நிலவரம் குறித்து வானிலை மையம் விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்; கோடையில் மேட்டூர் அணையை தூர்வாரினால் கூடுதலாக 20 டிஎம்சி தண்ணீரை சேமிக்க என்று தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பி.ஆர். பாண்டியன்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியுள்ளார். மேலும், “தமிழகத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், கர்நாடக அரசின் விமர்சனத்துக்கு உரிய பதில் அளிக்காமல், மத்திய அரசிடம் தவறான கருத்தை முன்மொழிந்த கர்நாடக முதல்வருக்குக் கண்டனம் கூட தெரிவிக்காமல் முதல்வர் ஸ்டாலின் மவுனம் காக்கிறார். இது கர்நாடகாவுக்குச் சாதகமாகவும், தமிழக விவசாயிகளுக்கு விரோதமாகவும் அமைந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

With Input Dinamalar

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry