வரியில்லா பட்ஜெட்…ஓ.கே!, அரசின் வருமானத்துக்கு என்ன வழி? சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. சம்பத்,  முதலமைச்சரிடம் கேள்வி?

0
1273

முதலமைச்சர் தாக்கல் செய்துள்ள வரியில்லா பட்ஜெட்டை வரவேற்பதாக கூறியுள்ள முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.. சம்பத், அரசின் நிதி வருவாயைப் பெருக்க எந்தத் திட்டத்தையும் அறிவிக்காதது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.   

Representational Image

சட்டமன்றத்தில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எம்.எல்.. சம்பத், “வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அரசின் நிதி வருவாயைப் பெருக்குவதற்கான வழி வகைகள் பற்றி எந்த திட்டமும் குறிப்பிடப்படவில்லை. ஒன்றிய அரசு நிதி வழங்கவில்லை என்றே காலம் காலமாக கூறிவருகிறோம். இன்னும் எத்தனை ஆண்டிற்கு த்தான் ஒன்றிய அரசின் கையையே எதிர்பார்த்துக் காத்திருக்கப்போகிறோம்?

நாமும் நமது அரசின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக வல்லுநர் குழுவை உருவாக்கத் தேவையில்லை, கடந்த ஆட்சியில் முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக இருந்த  தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், முந்தைய முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் வாயிலாக நல்ல பல திட்டங்களை எடுத்துரைத்தார். அப்போதைய அரசு அதை கிடப்பில் போட்டுவிட்டது.

மாநிலத்தின் பொருளாதாரம் வலுப்பெற முந்தைய ஆட்சிக்கு லட்சுமி நாராயணன் பரிந்துரைத்த திட்டங்கள் சிலவற்றை குறிப்பிடுகிறேன். கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்த வேண்டும், தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து சொத்து வரியை வசூலிக்க வேண்டும், நட்டத்தில் உள்ள அரசு மில்களை மீட்டெடுக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில் 50 சதவீத பங்குகளை விற்று புதிய தொழில் தொடங்க வேண்டும், பெரிய மென்பொருள் (IT Company) நிறுவனங்களுக்கு இலவசமாக இடம் கொடுத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும் உள்ளிட்டவை அவரது பரிந்துரைகளாகும். அவற்றை தற்போது அமல்படுத்தி மாநிலத்தின் பொருளாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2020-2021-ல் மாநிலத்தின் வருவாய் ரூ.338.66 கோடியாக உள்ளது. அப்படி இருக்கும்போது,  2021-22 ஆம் ஆண்டில் ரூ. 1,120 கோடி வருவாய் கிடைக்கும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. திடீரென மூன்று மடங்குக்கு மேல் எப்படி அதிகரிக்கும் என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

Representational Image

மானியம் தேவையில்லை எனவும், சலுகை விலையில ரேஷன் பொருட்கள் வேண்டாம் என்றும் விட்டு கொடுப்பவர்களுக்கு, பிரத்யேக அடையாள அட்டை வழங்க வேண்டும். அந்த அட்டை வைத்திருப்போருக்கு, சோதனை அடிப்படையில், மால்கள், திரையரங்குகள் மற்றும் கோயில்களில் வரிசையில் நிற்காமல் சிறப்பு அனுமதி தரும்பட்சத்தில், மானியம் மற்றும் அரசின் சலுகைகளை விட்டுக்கொடுப்பவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், அரசுக்கான செலவினங்களும் குறையும்என்று சம்பத் பேசினார்.

மேலும், பேசிய அவர் “5 மாதிரிப் பள்ளிகள், அதாவது மாடல் ஸ்கூல் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதன்படி, முதலியார்பேட்டையில் உள்ள அன்னை சிவகாமி பெண்கள் மேல்நிலை பள்ளியை மாதிரிப் பள்ளியாக தரம் உயர்த்தி பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். கொரோனா தொற்றால்  பெற்றோரை குறிப்பாக தந்தையை இழந்த குழந்தைகளை, தற்போது படிக்கும் தனியார் பள்ளிகளிலேயே படிக்க அரசு வகை செய்வதுடன், கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்.

மின் கட்டணம் 100/200/300/400 யூனிட்டுகளுக்கு முறையே 155 /260 /475 /605 என்ற  விகிதத்தில் தற்சமயம் வசூலிக்கப்படுகிறது. மின் கட்டணம் மட்டும் காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்படுகிறது. ஆனால் அடிப்படை யூனிட்டை  மட்டும் மின்துறை நீண்ட காலமாக ஒரே மாதிரியாக வைத்திருப்பது ஏன்? அடிப்படை யூனிட்டை 200 யூனிட்டுகள் என்று நிர்ணயித்தால் பல குடும்பங்களின் மின் கட்டண சுமை குறையும் என்பதால், அரசு இதற்கான நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பினார். 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry