24 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு! அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்! FasTag வசூலில் முறைகேடு!

0
401

தமிழகத்தில் சென்னை அடுத்த வானகரம், நல்லூர், பரனூர் சூரப்பட்டு உள்பட 24 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. இதற்கு வாகன உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை முழுக் கட்டணமும், அதற்குப் பின்னர் சாலை பராமரிப்புக்கான கட்டணமாக 40% வரை வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் வரை சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில்  உள்ள 24 சுங்கச் சாவடிகளிலும் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி 5% முதல் 10% வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் நள்ளிரவு முதல் 24 சுங்கச் சாவடிகளிலும் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை(7-10%) சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி, திருப்பராய்த்துறை (திருச்சிகரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம், சேலம் ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், வீரசோழபுரம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தருமபுரி பாளையம், குமாரபாளையம் விஜய மங்கலம், விழுப்புரம் விக்கிரவாண்டி மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி உள்பட 24 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.

இந்த கட்டண உயர்வுக்கு, பல்வேறு கட்சிகள், ஆம்னி பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள், சரக்குப் போக்குவரத்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதையும் மீறி, சுங்கச்சாவடி நிர்வாகம் கட்டண உயர்வை நடை முறைப்படுத்தி உள்ளன. இதனால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா பிடியிலிருந்து மக்கள் மெல்ல வெளிவந்தாலும், அது ஏற்படுத்திய பொருளாதாரத் தாக்கம் முழுமையாக சீராகவில்லை. இந்தச் சூழலில், சுங்கக் கட்டண உயர்வு நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களை பெரிதும் பாதிக்கும். சரக்கு வாகனங்களின் சுங்கக் கட்டணம் அதிகரிக்கும்போது, அது மக்கள் மீதுதான் சுமத்தப்படும். அதபோல், ஆம்னி பஸ், டாக்சிகளின் கட்டணமும் உயரக்கூடும். ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து வரும் நிலையில், சுங்கக் கட்டணத்தையும் உயர்த்தி மத்திய அரசு மக்களை வஞ்சிப்பதாக புகார் எழுந்துள்ளது

இதனிடையே, சுங்கச்சாவடிகளில் FASTAG மூலம் பணம் செலுத்தும்போது ஒருமுறை செய்த பயணத்திற்கு, இருமுறை கட்டணம் வசூலிப்பது போன்ற முறைகேடுகள் நிகழ்வதாக புகார் எழுந்துள்ளது. அதாவது, 24 மணிநேரத்தில் குறிப்பிட்ட சுங்கச்சாவடியை, ஒரு வாகனம் இருமுறை கடக்கும்போது, இரண்டு முழுமையான கட்டணங்கள் எடுக்கப்படுகிறது. அதேபோன்று,  சுங்கச் சாவடியை கடக்கும்போது, பாஸ்டாக் மூலம் கட்டணத்தை எடுத்துக்கொண்ட பிறகும், அதே வாகனத்தின் எண்ணை பயன்படுத்தி சில மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கட்டணம் எடுக்கப்படுகிறது.

முதல்நாள் இரவு பயணம் முடித்து, வாகனம் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிக்கும்போது, 2-வது முறையாக கட்டணம் எடுத்ததற்கான தகவல் கிடைக்கப்பெறுவதாக வாகன உரிமையாளர்கள் பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். அதாவது பாஸ்டேக் முறையில் 2 மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதுஇந்த முறைகேடுகளை யாரிடம் புகாராக தெரிவிப்பது என தெரியாமல் அவர்கள், ஒரு கட்டத்தில் அமைதியாகிவிடுகின்றனர். பாஸ்டேக் முறைகேட்டை சரிசெய்யாமல், சாலைகளை சரியாக பராமரிக்காமல் சுங்கக் கட்டணத்தை மட்டும் தொடர்ந்து உயர்த்தி வருவதாக வாகன உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சுங்கச் சாவடிகளில் காத்திருப்பு நேரம் அதிகபட்சம் 10 விநாடிகளாகவும், காத்திருக்கும் வாகனங்கள் 100 மீட்டருக்கும் மேல் இருந்தாலும், (கட்டண வசூல் பூத்தில் இருந்து 100 மீட்டர் அப்பால் மஞ்சள் கோடு போடப்பட்டிருக்கும்)கட்டணம் செலுத்தாமல் செல்லலாம் என NHAI கூறியுள்ளது. ஆனால், சுங்கச்சாவடிகளில் அது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரியவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry