ராகு காலத்தில் நல்ல செயல்களைச் செய்யக்கூடாது என்பது சரியா? கேது காலம் என்றால் என்ன? #Astrology

0
117
What is the significance of Rahu Kaalam and why is it considered important with respect to Indian culture?

4.00 Mins Read : நாம் எந்த ஒரு நல்ல செயலை தொடங்குவதற்கு முன்னரும் ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களை பார்த்துவிட்டுத் தான் சுபகாரியங்களை தொடங்குவோம். புனிதமாகக் கருதப்படாத காலங்களில் ஒன்றான ராகு காலம், எமகண்டம் என்றால் என்ன? ராகு காலத்தில் என்ன செய்யலாம்? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். (குறள் – பொருட்பால், அரசியல், காலமறிதல்)

தக்க நேரத்தில் தக்க செயலை தக்க இடத்தில் செய்தால் ஒருவன் விழைந்த இலக்கை அடையலாம். அது இந்த உலகமே ஆனாலும் அடையலாம் என்பதுதான் இந்தக் குறளின் பொருள். என்னதான் நாம் நன்றாகச் சிந்தித்துச் சரியான செயல்களை தேவையான ஆட்களை வைத்துக்கொண்டு செய்தாலும் அவை முழுமையான வெற்றி அடைய சரியான நேரமும், முறையான இடமும் தேவை. ஒவ்வொரு நாளிலும் சுப காரியங்களைச் செய்வதற்கும், செய்யாமல் இருப்பதற்கும் முன்னோர்கள் காலங்களை வரையறுத்து வைத்திருக்கிறார்கள். எனவே ஒரு காரியம் முடிவதற்கும், முடியாமல் இருப்பதற்கும் காலம் துணை செய்கிறது. நேரம் துணை நிற்கிறது. அதனை உணர்ந்து நாம் செயலாற்ற வேண்டும்.

Also Read : பழநியில் முத்தமிழ் முருகன் மாநாடு! ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல், பார்வையாளராக கலந்துகொள்வது எப்படி?

ஜாதகத்தில் ராகு, கேது என்பது சர்ப்பங்களுக்கு சம்பந்தப்பட்டவை என்பதால், அது விஷ காலமாக கருதப்படுகிறது. ஆகவே, அது சுபகாரியங்களுக்கு ஏற்ற காலமாக கருதப்படவில்லை, அந்தக் காலத்தை ஒதுக்கி வைத்தார்கள். ராகு காலம் என்பது ஆன்மிகத்தின் படியும் ஒரு கெட்ட காலமாக கருதப்படுகிறது. ராகு காலத்தில் செய்யப்படும் வேலைகள் அனைத்தும் தடைபடுவதால் அந்த காலத்தை கெட்ட காலமாக கருதுகிறார்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ராகு காலத்தில் புதிய முயற்சிகள், திருமண பேச்சு வார்த்தை, வீடு குடி போவது, திருமணம், தொழில், புதிய வேலை போன்ற சுபகாரியங்களைச் செய்வதில்லை.

ராகுகாலம் ராகுவின் ஆதிக்கம் கொண்ட நேரம், எமகண்டம் எமனின் ஆதிக்கம் உடைய நேரம். ராகுவால் ஆளப்படுகின்ற ஒன்றரை மணி நேரம் ராகு காலம். ஏனெனில் அந்த காலம் ராகுவுக்குச் சொந்தமான காலம் ஆகும். இந்தக் காலம் திங்கட்கிழமையில் இருந்து ஆரம்பிக்கிறது. ராகு காலம், எமகண்டத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடாது, பயணங்கள் கூடாது.  புதிய பொருட்கள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் ராகு, கேது பூஜை செய்யலாம். இந்த பூஜையின் மூலம் திருமணத்தடை, கல்வித்தடை போன்றவை விலகும்.

Also Read : முருகனுக்கு அலகு குத்தி வழிபாடு செய்வது ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல்..!

விஞ்ஞானப்படி, ராகு கேதுவிற்கு என தனியாகப் பாதை கிடையாது. நீள் வட்ட சுற்றுப்பாதையும் கிடையாது. மற்ற கிரகங்கள் வேகமாக செல்லும்போது அதில் இருந்து வரும் தூசுகள் தான் ஒன்று சேர்ந்து ராகுவும் கேதுவும் உண்டாகின்றன. அதாவது ஒவ்வொரு கிரகத்தில் இருந்து வெளிவரும் தூசுகள் ராகுவாகவும், கேதுவாகவும் மாறும் நேரத்தைக் கணித்துத்தான் ராகு காலம், கேது காலம் என்று சொல்கிறார்கள். கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். எமகண்ட நேரம் எமனுக்கு ஏற்ற நேரமாக கருதப்படுகிறது. ராகு காலம் போன்றே இந்த நேரமும் கெட்ட நேரமாக கருதப்படுகிறது. எமனால் ஆளப்படுகின்ற ஒன்றரை மணி நேரம் எமகண்டம் என்றழைக்கப்படுகிறது. இந்த நேரத்திலும் சுபகாரியங்களை தொடங்கக் கூடாது.

இந்த நிலையில், ராகு காலத்தில் முதல் 1 மணி நேரம் கழித்து கடைசியில் வருகிற அரை மணி நேரம் ‘அமிர்த ராகு’ காலம். இந்த நேரத்தில் எது செய்தாலும் நன்மையே தரும் என்பார்கள். நன்மைகள் பெருகி வரும். சுவர்ணபானு என்ற அரக்கன் தேவர் வேடம் பூண்டு, திருமாலின் கையில் ஒரு துளி அமிர்தம் வாங்கினான். பிறகு சூரிய, சந்திரர்களால் சுட்டிக்காட்டப்பட்டு மோகினி அவதாரம் கொண்ட திருமாலின் கையில் அகப்பையால் தலை துண்டாடப்பட்டு தலையும் உடம்பும் ராகு, கேதுவாக மாறியதாகப் புராணங்கள் சொல்கின்றன. அந்த ஒரு துளி அமிர்தத்தைச் சுவைத்த காரணத்தால் ராகு காலத்தின் கடைசி அரை மணி நேரம் நன்மை பயக்கும். அதைத்தான் ‘அமிர்த ராகு காலம்’ என்பார்கள்.

Also Read : வீட்டில் கண்ணாடியை எந்த திசையில் வைக்க வேண்டும்? பெட் ரூமில் வைத்தால்…! Mirror Vastu: Tips for placing mirrors at home and office!

இதுதவிர அர்த்தபிரகணன் என்றொரு வேளை உண்டு. புதனின் பார்வை பெற்ற ஒரு கோள்தான் அரத்தபிரகணன். அரத்தபிரகணன் நேரத்தில் செய்யக்கூடாதவை என்ன என்றால் சுபகாரியங்கள் மட்டுமல்ல, கல்வி சம்பந்தபட்ட எந்தக் காரியமும் தொடங்கக்கூடாது. முதன்முதலாக பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது, உயர்கல்வியில் சேருதல், புதிய பயிற்சி வகுப்பில் சேருதல், புதிய மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்தல் போன்றவற்றை ஆரம்பிக்கக்கூடாது. காலன் என்றொரு நேரமும் உண்டு. சூரியனின் எதிர் குணம் கொண்ட சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கோள்தான் காலம். காலன் காலம் காலத்திலும் எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது, முக்கியமாக பயணங்கள் செய்யக்கூடாது, மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கக்கூடாது, மருந்துண்ண ஆரம்பிக்கக்கூடாது.

இந்த நால்வர் காலத்தோடு இணையாமல் தனித்து இருப்பது குளிகை நேரம் மட்டுமே. இது ஏன் தனித்து இருக்கிறது? காரணம் இது சுப நேரம் என்பதால்தான். இந்த குளிகன் என்பவர் சனியின் மைந்தன். அவருக்கு இருக்கிற அவப்பெயரை நீக்க மகன் குளிகன் நல்ல விஷயங்களை நமக்கு வாரி வழங்குகிறார். குளிகை காலத்தில் அடக்கம் அல்லது தகனம் செய்ய சவத்தை எடுக்கக்கூடாது. குளிகை நேரத்தில் செய்யப்படும் ஒரு காரியம் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும். எனவே சவம் எடுப்பது குளிகை நேரமாக இருந்தால் மீண்டும் மீண்டும் அதே சம்பவம் நடக்கும் என்பதால் குளிகை நேரத்தை தவிர்ப்பார்கள். குளிகை நேரத்தில் திருமணம் செய்யக்கூடாது, பெண் பார்ப்பது, மாப்பிள்ளை பார்ப்பது போன்றவைகள் செய்யக்கூடாது.

குளிகை காலத்தில் வேலையில் சேரலாம், பதவி உயர்வு பெற்று பதவி ஏற்கும் போது குளிகை நேரத்தில் பதவி ஏற்றுக்கொண்டால் மீண்டும் மீண்டும் பதவி உயர்வு கிடைத்துக் கொண்டே இருக்கும். வீடு கிரகப்பிரவேசம் செய்தல், நிலம் வீடு வாங்குதல், பத்திரப் பதிவு செய்தல் போன்றவை செய்யலாம். நிறைய வீடு வாங்குவீர்கள், நிலபுலங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

Also Read : சின்ன வயசுல புத்தகத்துல மயிலிறகை வைத்த அனுபவம் இருக்கா? ஆமான்னா இது உங்களுக்கானதுதான்!

கடன் தீரவேண்டும், மன அமைதி வேண்டும் என்று தவிப்பவர்கள், உங்கள் கடனில் சிறு பகுதியை குளிகை காலத்தில் திரும்பிச் செலுத்தினால் விரைவில் கடன் தீரும்,மன நிம்மதி உண்டாகும். குழந்தைகள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தல், புது வங்கிக்கணக்கு ஆரம்பித்தல், புதிய தொழில் தொடங்குதல், நிறுவனங்கள் ஆரம்பித்தல், ஆடை ஆபரணங்கள் வாங்குதல், தங்கத்தில் முதலீடு செய்தல், விவசாய அறுவடை செய்தல் போன்றவை தாராளமாகச் செய்யலாம்.

சூலம் என்பது குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்தல் ஆகாது என்பதைக் குறிக்கிறது. அதாவது பஞ்சாங்கத்தில் உதய நாழிகைக்குப் பிறகு இத்தனை நாழிகை சூலம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அப்படி குறிப்பிட்ட நாழிகைக்குப் பிறகு வரும் 4 நாழிகையே சூலம். இதனை விஷக்காலம் என்பர். (இங்கு ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்). இதைப் பார்த்து சூரிய உதய நாழிகை முதல் குறிப்பிட்ட நாழிகை வரையுள்ள நேரத்தைக் கணக்கிட்டு பிறகு வரும் 1 மணி நேரம் 36 நிமிடத்தைத் தவிர்த்துவிட்டால் யாவும் சுபம். நாம் எவ்வளவுதான் நாள், நட்சத்திரம் பார்த்து முக்கிய வேலையாகக் கிளம்பினாலும் இந்த நேரத்தைக் கணக்கிட்டுச் சென்றால் தடைகளின்றி வேலைகள் நடக்கும் என்று நம் முன்னோர்களால் அறிவுறுத்தப்பட்டும், நம்பப்பட்டும் வருகிறது.

ராகு காலத்தை சுலபமாக ஞாபகம் வைத்து கொள்ளவது எப்படி?

திருசெந்தூர் சன்னதியில் வெற்றிலை புஷ்பம் வியாபாரம் செய்யும் ஞானம். இதில் ஒவ்வொருவார்த்தையின் முதல் எழுத்தைக் கொண்டு கிழமையை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.

திருசெந்தூர் — திங்கள் — 7.30 —9.00
சன்னதியில் — சனி — 9.00 — 10.30
வெற்றிலை — வெள்ளி — 10.30–12.00
புஷ்பம் ———- புதன் — 12.00–1.30
வியாபாரம் ——வியாழன் — 1.30–3.00
செய்யும் ———செவ்வாய் — 3.00–4.30
ஞானம் ———-ஞாயிறு — 4.30–6.00

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry