பொது சிவில் சட்டத்தால் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? மத்திய அரசின் முயற்சி பற்றிய விரிவான பார்வை! #UniformCivilCode

0
98
Representative Image

4 Min(s) Read : மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், கடந்த மாதம் 27ந் தேதி வந்தே பாரத் ரயிலை துவக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “பொது சிவில் சட்டத்தின் பேரில் பொது மக்களை தூண்டிவிடும் வேலை நடைபெற்று வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு ஓர் சட்டம்; மற்றொரு நபருக்கு இன்னொரு சட்டம் என்று இருந்தால், அந்த குடும்பத்தை எப்படி நடத்துவது என்று நீங்களே (பொதுமக்கள்) சொல்லுங்கள்,” என்று பேசி இருந்தார்.

பிரதமரின் இந்தப் பேச்சை அடுத்து, பொது சிவில் சட்டம் மீண்டும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்கள், தங்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் திருமணம் , விவகாரத்து, வாரிசு மற்றும் தத்தெடுப்பு விஷயங்களில் வெவ்வேறு சட்டங்களை பின்பற்றி வருகின்றன. இருப்பினும் அனைத்து சமூகத்திற்கும் பொதுவானதொரு சட்டம் ( பொது சிவில் சட்டம்) கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடு சுதந்திரம் அடைந்த காலம்தொட்டே இருந்து வருகிறது. பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால் மதம், பாலினம் உள்ளிட்ட பாகுபாடுகள் கருத்தில் கொள்ளப்படாது. அதாவது நாடு முழுவதும் அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டம் இருக்கும்.

Also Read : சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? மருத்துவத்துறை சீரழிந்து விட்டதாகவும் ஈபிஎஸ் விமர்சனம்!

பாஜக ஆட்சியை கைப்பற்றி 2 ஆண்டுகள் கடந்த பின்,  2016-ஆம் ஆண்டு 21-ஆவது சட்ட ஆணையம் நிறுவப்பட்டது. பாஜக அரசால் அமைக்கப்பட்ட இந்த ஆணையம், பொது சிவில் சட்டத்தின் சாதக பாதகங்களை 2 வருடங்கள் ஆய்வு செய்து 152 பக்க அறிக்கையை 2018 ஆகஸ்டில் வெளியிட்டது. அந்த அறிக்கையில் பொது சிவில் சட்டம் அவசியமில்லை, தற்போதைய சூழலுக்கு உகந்ததாகவும் இருக்காது என கூறப்பட்டது.

நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் உள்ளிட்டோர் சிறுபான்மையினராகவும் உள்ளனர். திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிர்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உள்ளன.

இந்நிலையில், அரசியல் லாபங்களுக்காகச் சிலர் பொது சிவில் சட்டத்தைக் கையிலெடுத்து, சிறுபான்மைச் சமூகத்தினர் மத்தியில் குறிப்பாக இஸ்லாமியர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முஸ்லிம் தனிநபர் சட்டம்(‘ஷரியத்’ சட்டம்) என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

திருக்குர்-ஆன், அதற்கு விளக்கமாக நபிகள் நாயகம் கூறிய பொன்மொழிகளின் அடிப்படையில் பெறப்பட்டதே ‘ஷரியத்’ சட்டம். இச்சட்டத்தைப் பின்பற்றுவது முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் ஒன்று. இந்தியாவில் இது ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ என்கிற பெயரில் 1937இல் இயற்றப்பட்டது. முஸ்லிம் தனிநபர்கள், அவர்கள் குடும்பம் பற்றிய அக்கறை, முஸ்லிம் சமூகம் சார்ந்த திருமணம், மணமுறிவு, வாரிசு, வக்ஃபு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களைக் கையாள்வது ஆகிய நான்கு விவகாரங்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும்.

Also Read : தந்தையின் இறப்பும், ஆற்று மணல் கொள்ளையும்! வெளிநாடு வாழ் இந்தியரின் வேதனைக் குரல்!

நிக்காஹ் எனப்படும் திருமண ஒப்பந்தமானது, பெண்ணின் தகப்பனாரும், நல்ல மனநிலையில் இருக்கும் சமூக அந்தஸ்து கொண்ட இரண்டு சாட்சிகளும் நேரடியாகப் பங்கேற்க, மணவாழ்வில் இணையும் இருவரிடமும் சம்மதம் பெற வேண்டும். ‘மஹர்’ எனப்படும் திருமணத் தொகையைப் பெண் தன்னுடைய விருப்பம்போல் நிர்ணயித்து ஆணிடம் கேட்க வேண்டும். இந்தத் தொகையைப் பெற்றபின், மத அறிஞரால் ‘நிக்காஹ்’ நடைபெறும். இவ்வாறான திருமண முறைக்கு ‘ஷரியத்’ சட்டம் வழிகாட்டுகிறது.

தலாக் எனப்படும் மணமுறிவைப் பொறுத்தவரை, கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை என்றால், அந்தச் சமயத்தில் பெண் சார்பாக ஒருவரும், ஆண் சார்பாக ஒருவரும் சாட்சிக்கு இருக்க, தங்கள் திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதுதான் ‘தலாக்’ மணமுறிவு. இதில் ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. ஜமாத்தார்கள் முன்னிலையில் இருதரப்பும் பேசி சமரசத்தில் ஈடுபடுவர். பிரிப்பதைவிட சமரசம் செய்து சேர்த்துவைப்பதில்தான் ஜமாத்தார் முனைப்புக் காட்டுவார்கள். முடியாதபட்சத்தில், உரிய கால இடைவெளியில் மூன்று தவணையாக, ‘தலாக்’ சொல்ல வேண்டும்.

இந்த மூன்று தவணைகளுக்கும் கணவன்-மனைவி இடையே சுமுகமான சூழல் உருவாகி, இருவரும் திரும்பச் சேர்வதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதால்தான் இந்த ஏற்பாடு. மனைவிக்குக் கணவனைப் பிடிக்கவில்லை என்றாலும் உரிய கால அவகாசம் அளித்து, காத்திருந்து, அதன்பிறகும் பிடிக்கவில்லை என்றால், அதை முறையாகச் சொல்லிப் பிரியலாம் எனப் பெண்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்புதான் ‘குலா’.

Also Read : டிவிட்டருக்குப் போட்டியாக “த்ரெட்ஸ்”! அதிரடி காட்டும் மெட்டா நிறுவனத்தால் எலோன் மஸ்க் கலக்கம்!

சில ஜமாத்துக்களில் மதக் கோட்பாடுகள் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களால், ‘ஷரியத்’ தொடர்பான தவறான ஆலோசனைகள் வழங்கப்படுவதாக புகாரும் உண்டு. கட்டாயத் திருமணப் பதிவுச் சட்டம் 2009இன்படி, இஸ்லாமியர் மத வழக்கப்படி திருமணம் செய்துகொண்டாலும், மூன்று மாதத்திற்குள்ளாகத் திருமணத்தைப் பதிவுசெய்தாக வேண்டும். வயது சரிபார்க்கப்பட்டே திருமணப் பதிவு நடக்கிறது.

மணமுறிவு என்றால் ஜமாத், ஹாஜி அறிவுறுத்தலை ஏற்று, கால அவகாசம், இடைவெளி – சமரச முயற்சி போன்றவை முறையாக நடைபெற்றனவா? என்பதை நீதிமன்றம் உறுதிசெய்த பின்பே, திருமணப் பதிவை ரத்துசெய்து மணமுறிவுக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த நீதிமன்ற நடைமுறையில், ஆறு மாதங்களிலிருந்து ஓராண்டுவரை மணமுறிவைச் சட்டபூர்வமாக அறிவிக்கக் காலம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ‘ஜமாத்’, ‘ஹாஜி’க்களுக்கு இருந்த அதிகாரம் மணமுறிவு விஷயத்தில் குறைக்கப்பட்டுவிட்டது. இதில் நீதிமன்றமே உச்சபட்ச அதிகார அமைப்பாக உள்ளது.

தேவையானால் எத்தனைத் திருமணங்கள் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என முஸ்லிம் ஆண்களைப் பற்றிய கருத்து பொதுவெளியில் உள்ளது. இது தவறானது. எல்லாச் சமூகங்களையும் போல, முஸ்லிம்களிலும் மிகச் சில ஆண்களே பலதார மணம் புரிந்தவர்களாக உள்ளனர்; ஆனால், எல்லோரும் அப்படி அல்ல. பிற மதத்துப் பெண்களைப் போல், குடும்ப வன்முறைக்கு எதிராக முஸ்லிம் பெண்களும் சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

Also Read : கேடு விளைவிக்கும் ரீஃபைண்டு ஆயில்? சுத்திகரிக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் என்னென்ன? Adverse Effects of Refined Oil!

இந்தியாவில் இந்துக்களுக்குத் தனியாகக் குடும்பவியல் சட்டம் இருக்கிறது. இந்துச் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்குத் திருமண வாரிசு, சடங்கு எனப் பல்வேறு அம்சங்களில் பெரியளவில் முரண்பாடு உள்ளது. மலைவாழ் மக்களின் பழக்க-வழக்கம் என 400-க்கும் மேற்பட்ட இந்துத் தனியார் சட்டங்கள் உள்ளன. சீக்கியர்களின் மத உணர்வுகளை மதிக்கும் வகையில், அவர்களுக்குச் சிறப்புச் சலுகையாக ‘ஹெல்மெட்’ அணியாமல், தலையில் ‘டர்பன்’ கட்டிக்கொண்டு, இருசக்கர வாகனம் ஓட்டவும், கத்தி வைத்துக்கொள்வதற்கும் அனுமதி உள்ளது.

ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பொது சிவில் சட்டம் அவசியம் என அரசமைப்புச் சட்டத்தை மேற்கோள்காட்டி பாஜக கூறிவரும் நிலையில், மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கும் நோக்கில், நாட்டில் அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவான சட்டங்களை வகுக்க அரசுகள் முயற்சிக்க வேண்டுமென, அரசமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு பரிந்துரைக்கிறது. அதன் அடிப்படையில், நாட்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

அரசியல் சாசனத்தின் 44 வது பிரிவு, பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறது. அதில் “நாட்டிலுள்ள எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் உருவாக்கிட முயல வேண்டும்” என்கிறது. அது ‘கொள்கை விளக்கம்’ என்ற தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளதே தவிர, இது கட்டாயம் என்று சொல்லப்படவில்லை. இது ஒரு ஆலோசனை மட்டுமே.

Also Read : பிஜேபியை மிரட்டும் எல் நினோ! தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் காலநிலை மாற்றம்!

சட்டப்பிரிவில் “கொள்கை விளக்கம்” என்ற தலைப்பு மற்ற தலைப்புகளிலிருந்து வேறுபட்டது. மற்ற தலைப்புகளில் உள்ளதை செயல்படுத்தாவிட்டால் நீதிமன்றம் தலையிடலாம். ஆனால் சட்டப்பிரிவில் “கொள்கை விளக்கம்” என்ற தலைப்பில் கூறப்படுபவற்றை செயல்படுத்துமாறு நீதிமன்றம் கட்டளையிட முடியாது.  இந்தப் பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது என்று கொள்கை விளக்கத்தின் 37வது சட்டப்பிரிவு கூறுகிறது.

பொதுவாகச் சொல்வதானால், திருமணம், சொத்துரிமை, குழந்தைகளை தத்தெடுப்பது என்று இதை உள்ளடக்கிய சட்டம் தான் பொது சிவில் சட்டம். அரசியலமைப்பின் சட்டம் கொடுத்திருக்கக்கூடிய மத சுதந்திரம் என்பது, அவர்களது மதம் தரும் வழிப்பாட்டு நெறிமுறைகளை அவரவர்கள் பின்பற்றலாம் என்பதே. இந்து, கிறிஸ்துவ மதம் கொடுக்கும் உரிமைகளை போல் இஸ்லாம், சீக்கியர் என அவர்கள் மதம் சார்ந்தும் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இதுதான் மத சுதந்திரம்.

1951 ஆம் ஆண்டு அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த போது, இந்துக்களுக்கு பொதுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கூறினார். அது நிறைவேறாத நிலையில், அம்பேத்கர்  தனது பதவியை ராஜினாமா செய்தார். எது எப்படியிருப்பினும், எண்ணிலடங்கா வேற்றுமைகளைக் கொண்டிருக்கும் இந்தியா, பொது சிவில் சட்டம் என்ற ஒன்று இல்லாமலேயே இன்று உலகளவில் பலம் பொருந்திய நாடாகப் பார்க்கப்படுகிறது. முத்தலாக் சட்டம் எப்படி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையோ, அதுபோல் இந்த பொது சிவில் சட்டமும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

பொது சிவில் சட்டம் அமலில் இருக்கும் கோவாவில், அதிகப்படியான மக்கள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள். அதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, இந்த பொது சிவில் சட்டம் கொண்டு வருவதன் மூலம் இந்தியாவில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பதே நிதர்சனம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry