சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் பருமன் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. முன்பெல்லாம் இளம் பருவத்தினர் மற்றும் நீண்ட நேரம் அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு வேலை பார்ப்பவர்கள் மட்டுமே உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் செல்போன், வீடியோ கேம் போன்றவை பிள்ளைகளை வீட்டிற்குள்ளே முடக்கிவிட்டதால், தற்போது குழந்தைகளிடையேயும் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது.
இதய நோய், சர்க்கரை வியாதி போன்ற பல பிரச்சனைகளுக்கு உடல் பருமன் தலைவாசலாக திகழ்வதால், எளிதாக உயர்ந்த எடையை எவ்வளவு விலை கொடுத்தாவது குறைக்க வேண்டும் என முயற்சிக்கின்றனர். குறிப்பாக இன்டர்மீடியட் ஃபாஸ்டிங், வாட்டர் டயட், பேலியோ டயட், வீகன் என பல்வேறு வகையான உணவு கட்டுப்பாட்டு முறைகளை உடல் எடையை குறைக்க பின்பற்றுகின்றனர். இப்படி உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு வெள்ளை பூசணிக்காய் ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது.
வெள்ளை பூசணி (Ash Gourd) பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், மருத்துவ குணங்களையும், பலவிதமான நோய்களுக்கு தீர்வாகவும் உள்ளது என்றால் அது மிகையில்லை. குறிப்பாக மஞ்சளாக இருக்கும் இனிப்பு பூசணியை விட வெள்ளை பூசணியில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் மிக அதிகம். இதில் மாவுச்சத்து கிடையாது. நாகரிகம் என்ற பெயரில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை பெரும்பாலானோர் கடைப்பிடிக்கின்றனர். பூசணி ஜூஸ் இவர்களுக்கு ஒரு மந்திர மருந்து போல் செயல்படுகிறது. இது உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்குகிறது மற்றும் சிறுநீர்ப்பையின் வழக்கமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
வெள்ளைப் பூசணிக்காய் போன்று முழுக்க முழுக்க நீர்ச்சத்து இருக்கிற காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. குறிப்பாக சில குழந்தைகள் இதைப் பக்கத்தில் கூட சேர்ப்பதில்லை. ஆனால் அதன் அற்புதமான நன்மைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ள பூசணி குளிர்ச்சியான நீர்ச்சத்து பண்புகளை கொண்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்துப்படி, “வெள்ளைப் பூசணிக்காய் ஜூஸை தினந்தோறும் எடுத்துக்கொள்வது உடலில் உள்ள கொழுப்பை வழித்து எடுத்தது போல் நீக்கும்” எனக் கூறுகின்றனர். வெள்ளை பூசணிக்காய் புரதம், இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் மிகச் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. பலர் வெள்ளைப் பூசணியை பொரியல், கூட்டு மற்றும் இனிப்பு பலகாரங்களாக செய்து சாப்பிடுகின்றனர். ஆனால் தினமும் காலையில் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
1.எடை குறைப்பு:
வெள்ளை பூசணிக்காயில் கலோரிகள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. வெண்பூசணி சாற்றை குடிப்பதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருப்பதோடு, பசி எடுக்காது. பூசணிக்காயில் கலோரிகள் மிக மிகக் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், கூடுதல் எடையை விரைவாகக் குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது. உங்கள் வயிறு வெளியே நீட்டிக் கொண்டிருந்தால், அதாவது தொப்பை இருந்தால் வெள்ளை பூசணி சாறு குடிப்பது கண்டிப்பாக நல்ல பலன் தரும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விரைவாக எடையைக் குறைக்க உதவி செய்யும்.
2.டிடாக்ஸ் பானம்:
வெள்ளை பூசணிக்காயில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை உடலில் இருந்து அனைத்து நச்சுகளையும் அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. இருமல் மற்றும் சளி போன்ற மாறிவரும் காலநிலை நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தாகவும் பூசணி பயன்படுத்தப்படுகிறது. மிசோரமில், லுஷே போன்ற பழங்குடியினர் கடுமையான வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய பூசணி ஜூஸ், சூப்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார்கள்.
Also Read : மருத்துவ குணங்கள் கொட்டிக்கிடக்கும் பார்லி டீ! Health Benefits of Barley Tea: You Need to Know!
3.எனர்ஜி ட்ரிங்க்:
வெள்ளைப் பூசணி சாற்றில் கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ், தயாமின், ரிபோஃப்ளேவின் உள்ளிட்ட பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சோர்வு, சோம்பலைப் போக்கி, உடலுக்கு ஆற்றலை நிரப்புகிறது. உடனடி ஆற்றலைப் பெறவும், நாள் முழுவதும் ஆற்றலுடன் இருக்கவும் தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறு குடிக்கலாம். இதனால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.
4.செரிமானம்:
வெள்ளைப் பூசணி ஜுஸ் நார்ச்சத்து நிறைந்தது. இதனை உட்கொள்வதால் செரிமானம் மேம்படும் மற்றும் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும். பூசணிக்காய் சாறு தினமும் குடிப்பதால் மலச்சிக்கல், அஜீரணம், வயிற்றுவலி போன்ற நோய்கள் குணமாகும். நீர்ச்சத்து நிறைந்த உணவாக இருப்பதால், உடலில் சேரும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் விளைவை கட்டுப்படுத்தி அஜீரணம் மற்றும் வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. வயிற்றுப் பகுதியில் உண்டாகும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, பிற நோய்களைத் தாக்கும் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும் இந்த பூசணிக்காய் ஜூஸ், குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
5.இதய ஆரோக்கியம்:
வெள்ளை பூசணிக்காயில் பைட்டோஸ்டெரால் என்ற கலவை உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதய நோய் அபாயமும் குறைகிறது. வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
6.மன ஆரோக்கியம், தூக்கம்:
உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்துக்கும் இந்த பூசணிக்காய் அருமருந்துதான். மன அழுத்தம், மனப் பதற்றம் ஆகியவற்றைக் குறைக்க இது உதவுகிறது. இதிலுள்ள அதிகப்படியான ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் கார்டிசோல் உற்பத்தியைக கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. அதோடு இன்சோம்னியா (insomnia) என்னும் தூக்கமின்மை மற்றும் மனப் பதற்றம் போன்ற பிரச்சினைகளைக் குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது.
7.உடல்சூடு தணியும்:
நிறைய பேருக்கு குளிர்காலமாக இருந்தாலும், வெயில் காலமாக இருந்தாலும் உடலில் உண்டாகும் அதிகப்படியான சூட்டின் காரணமாக உடலியல் பிரச்சினைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். உடல் சூடு அதிகரிப்பதற்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் கூட இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. அப்படி உடல் சூடு அதிகமாக இருப்பவர்களுக்கு பூசணி ஜூஸ் சிறந்த நிவாரணியாகும். ஏனெனில் இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
பூசணி ஜுஸ் பல முறைகளில் தயார் செய்யலாம். அவற்றில் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருள்கள்
- வெள்ளை பூசணி – 1 கப்
- இஞ்சி – ஒரு இன்ச் அளவு
- பூண்டு – 2 பல்
- உப்பு – சிறிதளவு
- எலுமிச்சை பழம் – 1
- தேன் – 1 ஸ்பூன்
- புதினா இலைகள் – 5
செய்முறை
பூசணிக்காயை தோல் சீவிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் பூண்டு, இஞ்சி மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த ஜூஸை ஒரு கிளாஸில் வடிகட்டி ஊற்றி கொள்ளவும். எலுமிச்சை ஜூஸ், கருப்பு உப்பு, தேன் மற்றும் புதினா இலைகள் உட்பட மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, நன்கு கலக்கவும். பூசணி ஜூஸ் தயார்.
Also Read : உங்களுக்கேற்ற சரியான குளியல் சோப்பை தேர்வு செய்வதற்கான ரகசியம்! Your Bath Soap Guide!
வெண்பூசணி ஜுஸ் குடிப்பதால் சில பக்க விளைவுகள் ஏற்படலாம். இந்த ஜூசில் பைட்டேட்டுகள், ஆக்சலேட்டுகள் போன்ற கலவைகள் உள்ளன. அதிகமாக உட்கொள்ளும்போது உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கலாம். இந்த ஜுஸில் அதிக கனிம உள்ளடக்கம் இருக்கிறது. இது காலப்போக்கில் உடலில் உலோகப் பொருட்களை உருவாக்கக்கூடும் என்பதால் சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வெண்பூசணி ஜூஸ் உட்கொள்வதை குறைக்க வேண்டும்.
வெள்ளைப் பூசணி ஜுஸில் உள்ள மெழுகுத் தன்மை கபம் உற்பத்தியை அதிகரிக்கும், இது ஆஸ்துமா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி உள்ளவர்களுக்கு ஆபத்தானது. இதில் டையூரிடிக் பண்புகள் உள்ளன, அவை சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கும், இது நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் நீரிழப்புக்கு வழிவகுக்கும். வெண் பூசணி ஜுஸ் அதிகமாக குடிப்பதால் வீக்கம் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
நீரிழிவு நோயாளிகள் அல்லது மருந்துகளை உட்கொள்பவர்கள் வெண் பூசணி சாறு குடிப்பதற்கு முன்பு ஒரு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இந்த ஜுஸ் உடலில் குளிரூட்டும் விளைவைக் கொண்டிருக்கிறது, எனவே காய்ச்சல் உள்ளவர்கள் இதை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
Disclaimer: The information provided in this article is intended for general knowledge and informational purposes only, and does not constitute medical advice. It is essential to consult with a qualified healthcare professional for any health concerns or before making any dietary changes.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry