ஒமைக்ரான் மூலம் மூன்று மடங்கு மீள் தொற்று ஏற்டலாம்! பரவல் வேகத்தை கணிக்க 3 வாரங்கள் ஆகும்! WHO தகவல்

0
44

உருமாறிய டெல்டாவைவிட, ஒமைக்ரான் வைரஸ் மூன்று மடங்கு மீள்தொற்றை ஏற்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சாமிநாதன் கூறியுள்ளார்.

இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள அவர்,  “கரோனா பாதித்தவர்களுக்கு 90 நாட்களுக்குப் பின்னர் மீள்தொற்று ஏற்படலாம். டெல்டா திரிபைவிட ஒமைக்ரான் திரிபால் மீள்தொற்று ஏற்பட மூன்று மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள இன்னும் 2 முதல் 3 வாரங்களுக்கு காத்திருக்க வேண்டும். தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரானால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தென் ஆப்பிரிக்கா அதிகமாக பரிசோதனைகளை செய்து வருகிறது. அங்கு, தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

குழந்தைகளுக்கு இன்னும் பல நாடுகள் தடுப்பூசி செலுத்தவில்லை. மிகக் குறைவான நாடுகளே, அதுவும் குறைந்த அளவிலேயே தடுப்பூசியை செலுத்தியுள்ளன. அதனால் குழந்தைகளும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும் ஒமைக்ரானால் பாதிக்கப்படலாம். உலக நாடுகளில் இருந்து இன்னும் அதிகமான தரவு வருவதற்காகக் காத்திருக்கிறோம்.

நாம் இப்போது எதிர்கொண்டிருப்பது அதே கரோனா வைரஸ் தான். அதனால், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே போதுமானது தான். ஒருவேளை இந்த புதிய உருமாறிய கரோனா வைரஸுக்கு என்று பிரத்யேகமாக தடுப்பூசி தயாரிக்க வேண்டும் என்றால், அதற்கு இப்போதைய தடுப்பூசிகளை எதிர்க்கும் ஆற்றல் ஒமைக்ரானுக்கு இருப்பது உறுதியாக வேண்டும்.

தடுப்பூசி தொடர்பாக அமெரிக்காவில் இருந்து மிகப்பெரிய தரவுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் பார்க்கும் போது தடுப்பூசிகள் கரோனா உயிரிழப்புக்கு எதிராக கேடயமாக இருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இதனை சரிசெய்யவே உலக சுகாதார அமைப்பு கோவேக்ஸ் திட்டத்தை செயல்படுத்துகிறது.

குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளுக்கு இன்னும் அதிகமாக தடுப்பூசிகளை கொண்டு செல்ல வேண்டும். இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ள நமக்கு நிறைய அறிவியல் ஆதாரங்கள் தேவை. ஆகையால் உலக நாடுகள் தங்கள் நாட்டில் கண்டறியப்படும் உருமாறிய வைரஸ்கள் பற்றிய தகவலை துரிதமாக, வெளிப்படையாக எங்களுடன் பகிர வேண்டும். உலக நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு எட்டப்பட வேண்டும்”. இவ்வாறு சவுமியா சாமிநாதன் கூறியுள்ளார்.

இதனிடையே, “கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை தவிர்க்கலாம். தீவிர தொற்று ஏற்பட்டவர்களுக்குக் கூட க்ளினிக்கல் பரிசோதனை ரீதியாக மட்டுமே இவ்வகை சிகிச்சையை அளிக்கலாம்” என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*