கூட்டணித் தலைமை பா.ஜ.க.வா? என்.ஆர். காங்கிரஸா?! பாஜக நடவடிக்கையால் கடும் மன உளைச்சலில் ரங்கசாமி!

0
61

புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி பெரியண்ணன் மனப்பான்மையில் செயல்படுவதால், கூட்டணியின் பிரதான கட்சியான என்.ஆர். காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்படுவதாக தெரிகிறது. இதனால் அக்கட்சி தொண்டர்களிடையே தொய்வு ஏற்பட்டிருக்கிறது

புதுச்சேரி மாநிலத்தில், தனிமுத்திரை பதித்த அரசியல் தலைவர்களில் ரங்கசாமி மிக முக்கியமானவர். ஏனெனில் இவரது அரசியல் செயல்பாடு மிக வித்தியாசமானது. இந்தப் பாணியை வேறு யாரும் பின்பற்றி வெற்றி காணவே முடியாது.

2008-ல் முதலமைச்சர் பதவியில் இருந்து காங்கிரஸ் கட்சி இவரை நீக்கியது. ரங்கசாமி தன்னிச்சையாக செயல்படுகிறார், அமைச்சர்கள், எம்.எல்..க்கள் என யாருடைய ஆலோசனையும் கேட்பதில்லை என்று அப்போது குற்றம்சாட்டப்பட்டது. தீவிர ஆன்மிகவாதியான ரங்கசாமி, தன்னையறிந்த, மனமொத்த ஒருசிலரை மட்டும் அருகில் வைத்துக்கொள்வார், அவர்களிடம் மட்டுமே ஆலோசனை நடத்துவார். இவரது பலம், பலவீனம் இரண்டுமே அதுதான்.

2011-ல் தனிக்கட்சி தொடங்கிய ரங்கசாமி, ஆட்சியையும் பிடித்தார். அப்போதும் அவரது அமைச்சர்கள், எம்.எல்.க்கள் பழைய குற்றச்சாட்டையே கூறிவந்தனர். ஆனால், இதையெல்லாம் காதில் வாங்காமல், தனது தனித்தன்மையை இழக்காமல், எளிமையான கம்பீரத்துடனேயே அவர் வலம் வந்தார். என்.ஆர். இயல்பு தெரிந்து, கட்சியில் சீட் வாங்கி, அவரது செல்வாக்கால் ஜெயித்துவிட்டு, இப்போது குறை கூறுவதற்கு அசிங்கமாக இல்லையா? என அப்போதைய எம்.எல்.. ஒருவரிடம் தொண்டர்கள் கேட்ட சம்பவமும் நடந்துள்ளது.

2016 தேர்தலின்போது, கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு போன்றவற்றில் அவர் காட்டிய தாமதம் ஆட்சியை இழக்கவைத்தது. ஆனால், பாஜக தன்னை செயல்படவிடாமல் முடக்கும் என்பதை அறிந்தே, அவர் 2016 தேர்தலில் தீவிரம் காட்டவில்லை, அவரது தொலைநோக்குப் பார்வைக்கு இது எடுத்துக்காட்டு என என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மீதான அதிருப்தியை அறுவடை செய்வதற்கான திட்டங்களுடன் ரங்கசாமி களமிறங்க தயாரானபோதுதான், கூட்டணி கட்சியான பாஜக குறுக்குசால் ஓட்டத்தொடங்கிவிட்டது.  இதனால் ரங்கசாமி கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக என்.ஆர். காங்கிரஸில் செல்வாக்கு மிகுந்த ஒருவர் கூறினார்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “கூட்டணியில் உள்ள பாஜக, எங்கள் தலைவருக்கு ஒருவித அழுத்தத்தை கொடுக்கிறது, அதிரடி அரசியலை கையிலெடுத்துள்ளது. என்.ஆர். உடைய செல்வாக்கை உணர்ந்து எங்களை கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் பாஜக நினைக்கிறது. ஆனால், தாங்கள் நினைப்பதுதான் நடக்க வேண்டும் என்பதில் அக்கட்சி திடமாக உள்ளது. புதுச்சேரியில் பாஜக கால்பதிக்காத நிலையில், எங்கள் கட்சிதான் கூட்டணிக்குத் தலைமை என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  நிர்சனம் இவ்வாறு இருக்க, கூட்டணித் தலைமை தாங்கள்தான், தங்கள் தலைமையில்தான் ஆட்சி என்று பாஜக கூறுகிறது. அக்கட்சி மேலிடத் தலைவர்களே இதனை உறுதிபடுத்துகின்றனர். 

இதன்மூலம், என்.ஆர்.க்கு உரிய மரியாதை கொடுக்காமல், அவரது செல்வாக்கை மட்டும் அறுவடை செய்ய பாஜக முயற்சிப்பது தெரிகிறதா? இல்லையா?. 18 தொகுதிகளில் நிற்கலாம் என எங்கள் கட்சி திட்டமிடும் நிலையில், 13 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என்கிறது பாஜக. அதுவும் எங்கள் கட்சிக்கு சாதகமான, வெற்றி பெற வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை தர மறுக்கிறது. அப்படியானால், தொகுதி பங்கீட்டை இறுதிசெய்து, கூட்டணி தலைமை, ஆட்சித் தலைமை என்பதை உணர வைக்க பாஜக முயற்சிக்கிறதா?

அதாவது, ஆட்சி அமைக்க வேண்டும் அல்லது அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கணக்கு. என்.ஆர்.-ஐ பகடைக்காயாக பயன்படுத்தி, புதுச்சேரியில் கால்பதிப்பது மட்டுமல்ல, ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கிறது. இதற்கு என்.ஆர். உடன்படாமல், தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், நாராயணசாமி எதிர்கொண்ட பிரச்சனைகளை எங்கள் தலைவரும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது பாஜக விடுக்கும் மறைமுக மிரட்டல் அல்லது சமிக்ஞை.

 பாஜகவின் இந்த பெரியண்ணன் போக்கால் என்.ஆர். மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். முதலமைச்சர், அமைச்சர் என ஆட்சிப் பொறுப்புகளில் இருந்தாகிவிட்டது, அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடலாம் போல இருக்கிறது என என்.ஆர். விரக்தியாக பேசுவதாக கூறுகின்றனர். ஆனால், பாஜக இதே பாணியில் பயணித்தால், தனித்து களமிறங்கவும் என்.ஆர். தயங்கமாட்டார். பாஜகவை ஆட்சியில் அமர்த்தி அழகுபார்க்க, எங்கள் அரசியல் வாழ்க்கையை பலிகொடுக்க வேண்டுமா?” என்ற கேள்வியுடன் அவர் முடித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry